ஸ்டாலின்,சீமான் எச்சரிக்கையைத் தொடர்ந்து ஆதித்தனார் சிலை மீண்டும் நிறுவப்படுகிறது

சென்னை எழும்பூர் பாந்தியன் சாலையில் 5 சாலைகள் சந்திக்கும் இடத்தில், 1987-ம் ஆண்டு மே மாதம் 24-ந் தேதி மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரால் ‘தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்’ சிலை திறந்து வைக்கப்பட்டது.

ஆண்டுதோறும் ‘சி.பா.ஆதித்தனாரின்’ பிறந்தநாள் மற்றும் நினைவு நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் சிலைக்கு மரியாதை செலுத்துவது வழக்கம்.

கடந்த மே மாதம் 24-ந் தேதி சி.பா.ஆதித்தனாரின் 36-வது நினைவுதினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் அவரது சிலைக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதைத் தொடர்ந்து ஓரிரு நாட்களில் அந்த இடத்தில் இருந்த 3 போக்குவரத்து பூங்காக்களை ஒரே பூங்காவாக மாற்றி அமைப்பதற்காக, சி.பா.ஆதித்தனாரின் சிலையை மாநகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்தியது.

பூங்கா சீரமைப்பிற்கான திட்டமிடுதலில் போக்குவரத்துக் காவல்துறைக்கும் மாநகராட்சியினருக்கும் ஏற்பட்ட மாறுபட்ட கருத்தால் பூங்கா சீரமைப்புப் பணி கடந்த சில மாதங்களாகவே தொடங்கப்படவில்லை.

வருகிற செப்டம்பர் 27-ந் தேதி ‘சி.பா.ஆதித்தனாரின்’ 113-வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட உள்ளது.அதற்கு முன் அவரது சிலையை மீண்டும் நிறுவ வேண்டும் என, மு.க.ஸ்டாலின், வைகோ, சீமான் உட்பட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் வலியுறுத்தி வந்தனர்.

நேற்று (செப்டம்பர் 13) காலையில் மாநகராட்சி சார்பில் பூங்கா பராமரிப்புப் பணி தொடங்கியது. மாநகராட்சி அதிகாரிகள் 5 நாட்களுக்குள் பணிகள் முடிக்கப்படும் என்று உறுதி அளித்தனர்.

Leave a Response