என்ன வேண்டும் உங்களுக்கு? எதற்காக இவ்வளவு பொய்கள்? – விஷாலுக்கு சுரேஷ்காமாட்சி கேள்வி

ஊடகங்களுக்குப் பொய்ச் செய்திகளையும் பில்ட் அப் செய்திகளையும் வாரி வழங்கிக்கொண்டிருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷால் என்று கடுமையாகக் குற்றம் சாட்டியுள்ளார் தயாரிப்பாளரும் இயக்குநருமான சுரேஷ்காமாட்சி.

இது தொடர்பாக அவர் எழுதியுள்ள பதிவில்,

தயாரிப்பாளர் சங்கத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் க்யூப் பிரச்சனை தீர்க்கப்படும் என்றார். தயாரிப்பாளர்களும் நம்பினோம். பத்திரிகையாளர்களும் நம்பினார்கள். விஷாலுக்கு பாராட்டுக்கள். அதன்பின்பு க்யூப் பிரச்சனை தீர்க்கப்பட்டதா என்று இதுவரை யாரும் கேள்வி எழுப்பவில்லை. அவரும் அதன்பிறகு அதைப்பற்றி வாயைத் திறக்கவில்லை.

ஒவ்வொரு டிக்கெட்டிலிருந்தும் ஒரு ரூபாய் விவசாயிக்குப் போகும் என செய்தி வீசினார். பரபரப்பாகவே வச்சிருக்கணும்டா குருமுட்ட கதையா இன்னிக்கு வரைக்கும் பல படங்கள் ரிலீசாயிடுச்சு. விவசாயிகளுக்கு பணம் போனதா? இல்லை. டிக்கெட் விற்கவே இல்லையான்னு தெரியலை. ஒருவேளை ஒவ்வொரு ரூபாயா சேர்த்துக்கிட்டு இருக்காரோ என்னவோ? பார்ப்போம்.

துப்பறிவாளன் பத்திரிகையாளர் சந்திப்பில் இன்னும் இரண்டு நாட்களில் தமிழ் ராக்கர்ஸ் முடக்கிருவோம். பிடிச்சிருவோம்னார். பிடிச்சதென்னவோ வீடியோ கடைக்காரனாம். அதுவும் யாருன்னு தெளிவா அவங்களுக்கே தெரியலையாம். இப்போ ஒரு அறிக்கையில் அவன் போர்னோகிராஃபி வெப்சைட் நடத்துறவனாம். போங்கப்பா நீங்களும் உங்க துப்பறிதலும்.

அனிதாவை மாதிரி ஏழைப் பெண்களுக்கு மருத்துவப் படிப்புக்கு செலவு பண்றேன்னு பேட்டி. அய்யோடா என்னதான்பா வேணும் உங்களுக்கு? இந்த நாற்காலியா? இதற்கு இப்படிச் சுற்றி வளைத்துப் பொய்ச் செய்திகளாக அள்ளிவிட்டு நெருங்கணுமா?

இன்னும் எவ்வளவோ பொய்ச் செய்திகள் அணி வகுக்கும். அடையாளம் காணுங்கள் நண்பர்களே? இனியாவது ஆதாரம் கேளுங்கள். அட்லீஸ்ட் இதெல்லாம் சொன்னீர்களே செய்தீர்களான்னு கேள்வியாவது கேளுங்கள்.
பப்ளிசிட்டி பிரியர்களை கொஞ்சம் விட்டுவிட்டு உண்மையாக போராடுபவர்களுக்கு உங்கள் நேரத்தை விட்டுவையுங்கள் நண்பர்களே

என்றும் மரியாதையுடன்
சுரேஷ் காமாட்சி, தயாரிப்பாளர்

இவ்வாறு எழுதியுள்ளார்.