தமிழக மருத்துவப் படிப்பில் அந்நிய நாட்டு மாணவர்கள் – சீமான் அதிர்ச்சித் தகவல்

மாணவி அனிதாவின் உயிரிழப்பிற்குக் காரணமான மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்தும்,மாணவர்களின் கல்வி உரிமையைப் பறிக்கின்ற நீட் உள்ளிட்ட அனைத்து அகில இந்திய நுழைவுத் தேர்வுகளையும் ரத்துச் செய்ய வலியுறுத்தியும், கல்வியை மீண்டும் மாநில பட்டியலுக்கு மாற்றக் கோரியும்,கல்வியில் தனியார் ஆதிக்கத்தை ஒழித்து அடிப்படை கல்வியிலிருந்து, ஆராய்ச்சிக் கல்விவரை அரசே வழங்கிடக் கோரியும்

தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர்கள் சங்கம் ஒருங்கிணைக்கும் தொடர் முழக்கப் போராட்டம் 13-09-2017 புதன்கிழமை காலை 10 மணியளவில் சென்னை உயர்நீதிமன்றம் அருகில் நடைபெற்றது.

இதில் பல்வேறு கட்சிகள், இயக்கங்கள், அமைப்புகள் பங்கேற்றன. நாம் தமிழர் கட்சி சார்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்று கண்டனவுரையாற்றினார்.

சீமான் பேசுகையில், தமிழ்நாடு அரசு தனது தன்மையை இழந்துவிட்டது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, நீட் தேர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பைச் செயல்படுத்துவோம் என்கிறார். இந்த அரசு, போராடும் மாணவர்களையும் மக்களையும் கைவிட்டுவிட்டது. நீதிமன்றம் மதுக்கடைகளை மூடச் சொன்னபோது, அதற்கு எதிராக சீராய்வு மனு, நகரங்களை விட்டு கிராமங்களில் கடைகளைத் திறந்து மதுவுக்காகப் பல்வேறு முயற்சிகளை எடுத்த அரசு, மாணவர்களின் கல்விக்கு எடுக்கவில்லை.

கட்சியைக் காப்பாற்றுவதிலும் சின்னத்தைக் காப்பாற்றுவதிலும் தான் அக்கறை செலுத்துகிறோம் என்று வெளிப்படையாக அவர்களே சொல்கிறார்கள். அதேபோல, தற்போதைய அரசு பா.ஜ.க-வின் கைக்கூலி அரசாக இருக்கிறது. அதுதான் யதார்த்த உண்மையும்கூட. கோமாநிலையில் படுத்திருக்கும் நோயாளியைப் போலத்தான் இந்த அரசு உள்ளது.

மருத்துவப் படிப்புக்கான நுழைவுத் தேர்வு, தேசிய அளவில் என்பதையும் தாண்டி சர்வதேச அளவில் இனி நடைபெற உள்ளது. மருத்துவப் படிப்புக்கு மட்டுமல்லாமல் பொறியியல் படிப்பு, ஆட்சித்துறை என அனைத்துக்கும் பொது நுழைவுத் தேர்வு வரவுள்ளது.

தற்போது நடந்த மருத்துவச் சேர்க்கையில் 200-க்கும் அதிகமாக அந்நிய நாட்டு மாணவர்கள் தேர்வாகியுள்ளனர் என்று செய்திவருகிறது. என்னுடைய காசு, என்னுடைய நிலம், என்னுடைய கல்லூரியில் என் பிள்ளைகள் படிக்காமல், சம்பந்தமே இல்லாதவர்கள் படித்துக்கொண்டிருக்கிறார்கள். கண்டும் காணாமல் இருக்கும் இந்த அரசை, மக்கள் கண்டும் காணாமல் ஆக்குவார்கள்

இவ்வாறு சீமான் பேசினார்.

Leave a Response