மேற்கு வங்காளத்தில் 3 நாட்கள் சுற்றுப்பயணம் செய்த பா.ஜனதா தலைவர் அமித்ஷா மம்தா பானர்ஜி அரசைக் கடுமையாக குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியைப் போன்று அமித்ஷாவும் ஏழைகளின் வீடுகளில் உணவு சாப்பிட்டார். மம்தா பானர்ஜியை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார்.
அமித்ஷாவின் தாக்குதலுக்கு மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி பதிலடி கொடுத்து உள்ளார்.
மேற்கு வங்காளத்தில் பொதுக்கூட்டத்தில் பேசிய மம்தா பானர்ஜி, 2014-ம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா அரசு பல்வேறு வாக்குறுதிகளை அளித்தது. அவற்றில் கறுப்புப் பணத்தை மீட்பதும் ஒன்று. ஆனால் இன்றளவும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.
திரிணாமுல் காங்கிரசைப் பார்த்து பா.ஜனதா பயந்து போய் உள்ளது. அதனால் தான் சி.பி.ஐ. யை வைத்து மிரட்டப் பார்க்கிறது. இந்த மிரட்டலுக்கு எல்லாம் நாங்கள் பணிய மாட்டோம். பயப்படமாட்டோம். மேற்கு வங்காளத்தில் ஆட்சியைப் பிடிக்க பா.ஜனதா தீவிரமாக உள்ளது. ஆனால் அந்த ஆசை நிறைவேறாது. வளர்ச்சித் திட்டங்களிலும் மத்திய அரசைக் காட்டிலும் மேற்கு வங்காளம்தான் மேலோங்கி நிற்கிறது. அமித்ஷா எங்களுக்கு சவால் விடுகிறார். நாங்கள் அவரது சவாலை ஏற்றுக் கொள்கிறோம். நாங்கள் டெல்லியை கைப்பற்றுவோம் என்றார்.