எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்கிறதா பாகுபலி 2 ? – திரைவிமர்சனம்

பாகுபலி முதல்பாகத்தின் கதை தெரியும்தானே?

ஒரு மலைகிராமத்தில் வாழும் இளைஞன், மகிழ்மதி என்கிற பெரிய சாம்ராஜ்யத்தின் அரசன். அவன் எப்படி மலை கிராமத்துக்கு வந்தான்? அவனுடைய தாய் தந்தை என்னவாகினர்? என்பதையெல்லாம் சொல்லிவிட்டு, அவனுடைய தந்தை அமரேந்திரபாகுபலியை யாரும் எதிர்பாராவண்ணம் அவருடைய தளபதி கட்டப்பாவே கொல்கிறார். அது எதனால்? என்கிற கேள்வியோடு முதல் பாகம் முடிந்திருந்தது.

இவற்றை சிற்சில கோட்டோவியங்களில் காட்டிவிட்டு இரண்டாம்பாகம் தொடங்குகிறது.

அமரேந்திரபாகுபலி (பிரபாஸ்) அரசனாக முடிசூட்டிக்கொள்ளும் முன்னால் திக்விஜயம் எனப்படும் நீண்டபயணம் ஒன்றை மேற்கொள்கிறார். போன இடத்தில், இன்னொரு சின்ன நாட்டின் இளவரசியான தேவசேனாவைப் (அனுஷ்கா) பார்த்ததும் – அழகை மட்டுமின்றி அவருடைய வீரத்தையும் – காதல்கொள்கிறார்.

அவர் காதல் கொண்ட விசயம் தெரிந்ததும் சகோதரர் பல்வால்தேவன் (ராணா) தந்தை பிங்கலதேவன் (நாசர்) ஆகியோருடைய சூழ்ச்சியால் பல குழப்பங்கள் நிகழுகின்றன. அவற்றால் என்னென்னவெல்லாம் நடக்கின்றன? அவற்றை அமரேந்திரபாகுபலி எப்படி எதிர்கொள்கிறான்? அவன் கதை முடிந்தபின்பு முதல்பாகத்தின் தொடர்ச்சியாக மகன் மகேந்திரபாகுபலி என்ன செய்கிறான்? என்பதுதான் படம்.

காட்சிக்குக் காட்சி பிரமிப்பை ஏற்படுத்தவேண்டும் என்று முடிவு செய்து உழைத்திருக்கிறார்கள். ஏற்படுத்தியுமிருக்கிறார்கள்.

முதல்பாகத்தில் தமன்னாவின் அழகும் சாகசமும் இருந்தது. இதில் அனுஷ்காவின் அழகும் சாகசமும் அதற்குச் சற்றும் குறைவில்லாமல் இருக்கிறது.கூடவே ராஜமாதா சிவகாமியிடமும் அரசவையிலும் சொற்போர் புரியும் கம்பிீரம் கவர்கிறது.

பிரபாஸின் அசுர உழைப்பு, படத்துக்குப் பலம். ராணாவின் உடற்கட்டும் உடல்மொழியும் கடைசிக்காட்சிகளை மெருகேற்றுகின்றன.

கட்டப்பாவாக நடித்திருக்கும் சத்யராஜ், பிங்கலதேவன் நாசர், ராஜமாதா ரம்யாகிருஷ்ணன் ஆகியோரும் தங்கள் வேடங்களுக்குப் பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

பிரபாஸ் அனுஷ்கா காதல் அழகு. இருவரும் சேர்ந்து விற்சண்டை செய்யும் காட்சிகள் சிறப்பு. அனுஷ்கா, பிரபாஸைப் பற்றித் தெரிந்துகொள்வதற்கான காட்சிகள் கொஞ்சம் நீளம். குறிப்பாகப் பன்றிவேட்டைக்காட்சிகளை மொத்தமாக நீக்கினாலும் சரிதான். அவர்களின் காதல்பாடல் தவறான நேரம் மற்றும் இடத்தில் இருந்தாலும் காட்சியழகு ஈர்க்கிறது.

ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், விஷுவல் எஃபெக்ட்ஸ் கமலக்கண்ணன், சண்டைப் பயிற்சி பீட்டர்ஹெயின் ஆகிய மூவரும் படத்தை மிகப்பெரிதாக்கிவிட்டார்கள். இவர்களோடு கீரவானியின் இசையும் இணைந்துகொள்கிறது.

தமிழில் வசனங்களையும் பாடல்களையும் மதன்கார்க்கி எழுதியிருக்கிறார். கிழக்கையே புதைப்பேன் போன்று சில வசனங்கள் கவனிக்கவைக்கின்றன.

இவர்களுக்கெல்லாம் தலைவரான ராஜமெளலி, இந்தியசினிமாவின் மதிப்பை உயர்த்தியிருக்கிறார். தொழில்நுட்பம் மற்றும் பட உருவாக்கத்தில் இன்னொரு உயரத்தைத் தொட்டிருக்கிறார்.

அறுபது வயது கட்டப்பாவும் எண்பத்தைந்து வயது கட்டப்பாவும் ஒரே மாதிரி வலிமையுடன் இருக்கிறார்கள் என்பது உட்பட சின்னச்சின்ன மன்னித்துவிடக்கூடிய தவறுகள் இருக்கின்றன.

அந்தக்கால அரசகுடும்பத்தின் (இந்தக்காலத்திலும்தான்) பதவி மற்றும் அதிகாரவெறி தான் கதையின் அடிநாதம் என்றாலும் திரைக்கதை அமைப்பில் வெற்றி பெற்றிருக்கிறார். இரண்டாம் பாகத்தை முடிவு செய்துவிட்டு முதல்பாகத்தை எடுத்திருக்கிறார். எப்படியெனில் முதல்பாகத்தின் அளவிலிருந்து எல்லாமே அடுத்த கட்டத்துக்குப் போயிருக்கிறது.

இது என் கட்டளை, என் கட்டளையே சாசனம் என்கிற ராஜமாதாவின் வாக்கு ஒருபக்கம், உன் மரியாதைக்கு நான் பொறுப்பு என்கிற அமரேந்திரபாகுபலியின் வாக்கு மறுபக்கம் என்கிற நேரத்தில் இடைவேளை.முன்கதை முடிந்தவுடன் இறுதிப்போர் என்று பார்த்துப்பார்த்து திரைக்கதை அமைத்திருக்கிறார்.

கடைசியில் வில்லனை வென்று நாயகன் தாயின் சபதம் முடிப்பான் என்று எல்லோருக்கும் தெரிந்த விசயத்தை நாற்பது நிமிடங்களுக்கு மேல் வைத்திருந்தாலும் ரசிகர்கள் கடைசிவரை நின்று பார்க்கிறார்கள்.

ராஜமெளலி மற்றும் படக்குழுவினர் அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

Leave a Response