மே 30 ஆம் தேதி முதல் திரைப்படத்துறையினர் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்வார்கள் என்று ஏப்ரல் 26 அன்று விஷால் அறிவித்தார். அவ்வறிவிப்பு வெளியிடப்படுமுன் தயாரிப்பாளர்கள், நடிகர்கள் உள்ளிட்ட திரைத்துறையினர் கலந்துகொண்ட கூட்டம் நடந்தது. அக்கூட்டத்தில் கலந்து கொண்ட தயாரிப்பாளரும் இயக்குநருமான ஜெய்லானியின் பதிவில்,
நேற்று தயாரிப்பாளர் சங்கம் நடிகர் சங்கத்தினரை வரவழைத்து ஒரு முக்கியமான மீட்டிங் நடத்தியது..
நான் ஒரு 10 நிமிடம் லேட்டாய் சென்றேன். உள்ளே நுழைந்தால் மேடையில் விஷால் ஞானவேல்ராஜா குழுவினருடன் அருகில் நடிகர் கார்த்தி அமர்ந்திருந்தார். (நடிகர் சங்கத்தின் சார்பில்). உள்ளே அமருவதற்கு இருக்கையே இருக்காதோ என நினைக்குமளவுக்கு கூட்டம்.
தூரமாய் ஒரு இருக்கை தெரிய பலரை கடந்து சென்றேன். ஜெயம் ரவி, பரத், ஆர்யா, விஷ்ணு என பல நடிகர்களும் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்களுக்கிடையே கலந்து அமர்ந்திருந்தனர்.
மே 1ல் shutdown பண்ணலாம் என விஷால் அறிவித்ததும் எனக்கு வலதுபுறமாய் இரண்டாவது வரிசையிலிருந்த ஒரு வெள்ளைசட்டையணிந்தவர் எழுந்து “ஆனா அதை கொஞ்சம் தள்ளிவைச்சா” என சுற்றிவளைத்து திரும்பத்திரும்ப பேசிக்கொண்டிருந்தார்.
சைடிலிருந்து அவரைக்கவனித்தேன்.. இதற்கு முன்பு அவரை மீட்டிங்கில் பார்த்தில்லை. கண்ணாடியணிந்திருந்தார். தொப்பையை ஓரளவுக்கு லூசான வெள்ளை சட்டையாலும் மறைக்க முடியவில்லை. முகம் சற்று வசதியான மலையாளிகளின் முக லட்சணத்தைப்போல சற்று உப்பலாய், குண்டாய், கட்டை மீசையுடன் இருந்தது. ஏதோ கேரளாவிலிருந்து வந்த தயாரிப்பாளராய் இருக்கும் என நினைத்தேன். ‘தேதியை எப்போது என பிறகு முடிவெடுக்கலாம், முதலில் என்னென்ன பிரச்சினைகளை முன்வைக்கிறோம் என்பதைப் பற்றி பேசிவிடலாம்’ என ஞானவேல்ராஜா சொன்னபின்னும் மீண்டும் ‘அதைத்தான் தள்ளிவச்சுட்டு’ என சுற்ற ஆரம்பித்தார்.. அப்போது விஷால் இடைமறித்து ‘அதுதான் பிரதர் சிம்பு.. முதல்ல பிரச்சினைகளை பேசிட்டு அப்புறம் தேதி..’ இப்படித் தொடருகிறது அவரது பதிவு.
நடிகர் சிம்புவின் இப்போதைய தோற்றத்தைப் பற்றிச் சொல்லும் பொருட்டு அவர் பதிவு எழுதியிருந்தாலும், இதிலிருந்து ஏப்ரல் 26 ஆம் தேதி கூட்டத்தைக் கூட்டி மே 1 ஆம் தேதியிலிருந்து வேலைநிறுத்தம் (அதாவது நான்கு நாட்களுக்குள்) என்று விஷால் சொல்லியிருப்பது தெரிகிறது. அவர் மே 1 என்றதுமே சிம்பு எழுந்து அதைத்தள்ளி வைக்கவேண்டும் என்று பேசியிருக்கிறார். அதன்விளைவுதான் மே 1 என்பது மே 30 ஆகியிருக்கிறது என்பது தெரிகிறது.
வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கும்போது, சம்பந்தப்பட்டவர்களுக்கு உரிய அவகாசம் கொடுத்தபின் தான் வேலைநிறுத்தம் செய்யவேண்டும் என்கிற அடிப்படையே தெரியாமல் விஷால் இருந்திருப்பது வியப்பளிப்பதாகச் சொல்கின்றனர்.