நீதிபதி கேள்வி – ஜெயம்ரவிக்கு தலைகுனிவு

நடிகர் ஜெயம்ரவியை வைத்து படங்கள் தயாரிப்பதற்காக அவருக்கும் ஆறு கோடி ரூபாய் முன்பணம் கொடுத்திருந்தது பிடிஜி யுனிவர்சல் நிறுவனம்.பல்வேறு காரணங்களால் அந்தப்படங்கள் நடக்கவில்லை.இதனால் கொடுத்த முன்பணத்தைத் திருப்பிக் கேட்டது தயாரிப்பு நிறுவனம்.

பணத்தைத் திருப்பிக் கொடுக்காதது மட்டுமின்றி, ரூ.9 கோடி இழப்பீடு கேட்டு படத்தயாரிப்பு நிறுவனத்துக்கு எதிராக நடிகர் ஜெயம்ரவி வழக்கு போட மனு கொடுத்திருந்தார்.

அதேநேரம், முன்பணமாகப் பெற்ற ரூ.6 கோடியைத் திருப்பித் தர நடிகர் ஜெயம்ரவிக்கு உத்தரவிடக் கோரி பாபி டச் கோல்டு யுனி வர்சல் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.

இந்த இரு வழக்குகளும் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக ஜூலை 23 அன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது இந்த வழக்கின் மூலமாக உங்களுக்கு எதிர்மறையான விளம்பரத்தைத்தானே தரும் என்றும், அதற்கு வாங்கிய முன்பணத்தைக் கொடுத்து விடலாமே என நடிகர் ஜெயம்ரவி தரப்பிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

அதற்கு ஜெயம் ரவி தரப்பில் ஆஜரான வழக்குரைஞர் எஸ்.கார்த்திகைபாலன், “அந்த நிறுவனத்துக்காக மாதக் கணக்கில் காத்திருந்தும் அந்த நிறுவனம் படப்பிடிப்புப் பணிகளைத் தொடங்கவில்லை. இதனால் எங்களுக்குத்தான் பாதிப்பு அதிகம்” என்றார்,

பதிலுக்கு படத் தயாரிப்பு நிறுவனம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் பி.எஸ்.இராமன், வழக்குரைஞர் விஜயன் சுப்ரமணியன் ஆகியோர், “தனது மனைவி உடனான விவாகரத்து பிரச்னையின்போது வாடகை வீட்டில் வசித்து வருவதாக அறிக்கை வெளியிட்ட நடிகர் ரவி மோகன் தற்போது நாங்கள் கொடுத்த தொகையை வைத்து சொந்தப் படத் தயாரிப்பு நிறுவனத்தை உருவாக்கி புதிதாகப் படமும் தயாரித்து வருகிறார். எனவே, எங்களிடம் வாங்கிய தொகையைத் திருப்பித்தர உத்தரவிட வேண்டும்” எனக் கோரினர்.

அதையடுத்து நீதிபதி, இந்த பிரச்சினையில் இரு தரப்பிலும் சுமுகத் தீர்வு காண மத்தியஸ்தரை நியமிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார். மேலும், ரூ.9 கோடி இழப்பீடு கோரியும், அதுவரை வேறு படங்களை பாபி டச் கோல்டு நிறுவனம் வெளியிடக்கூடாது எனத் தடை கோரி நடிகர் ஜெயம் ரவி தாக்கல் செய்திருந்த மனுவை தள்ளுபடி செய்த நீதிபதி,

முன்பணத்தைத் திருப்பித் தரக்கோரிய வழக்கில், ரூ.5.90 கோடிக்கான உத்தரவாதத்தை 4 வார காலத்தில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய ஜெயம் ரவி தரப்புக்கு உத்தரவிட்டு விசாரணையைத் தள்ளி வைத்துள்ளார்.

இந்த வழக்கு விசாரணையின் போது எடுத்த எடுப்பிலேயே, வாங்கிய முன்பணத்தைத் திருப்பிக் கொடுத்துவிடலாமே? என்று நீதிபதி கூறியது நடிகர் ஜெயம்ரவிக்குப் பெரும் பின்னடைவையும் தலைகுனிவையும் ஏற்படுத்தியுள்ளது என்கிறார்கள்.

Leave a Response