வனமே உலகம் என வாழும் பூர்வகுடிகளை விரட்டி அடித்துவிட்டு காற்றாலைகள் அமைக்கத் திட்டமிடுகிறது ஒரு பன்னாட்டு நிறுவனம். அதற்கு காவல்துறையும் துணை. பழங்குடி மக்களை அப்புறப்படுத்துகிறது. இதனால் பாதிக்கப்படும் ஜெயம் ரவி ஒரு எதிர்பாராமல் சென்னை வருகிறார்.
மரக்கிளையே சொர்க்கம் என நினைக்கும் அவருக்கு குளிர்சாதன வசதி செய்யப்பட்ட அறை சிறையாகத் தெரிகிறது. அவர் மாநகர் வாழ்க்கைக்குப் பொருந்தினாரா? இல்லையா? என்பதே படம்.
கதாபாத்திரத்தை உணர்ந்து அதற்கேற்ற உழைப்பைக் கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. விக்ரமுக்குப் பிதாமகன் போல இவருக்கு இந்தப்படம். வசனமே பேசாமல் உடல்மொழியால் பேசியிருக்கிறார். சண்டைக் காட்சிகளில் வேகம், அன்பில் தடுமாற்றம் எனப் பல வகைகளிலும் உணர்வை வெளிப்படுத்தி கவனம் பெறுகிறார்.
நாயகி சாயிஷாசாகல் தமிழுக்குப் புதுவரவு. நல்வரவும் கூட.அழகு, நடனம், நடிப்பு ஆகிய எல்லாவற்றிலும் வெற்றி மதிப்பெண் வாங்குகிறார். தமிழில் அவரை நிறையப்படங்களில் நடிக்கவைத்தால் ரசிகர்கள் மகிழ்வார்கள்.
நகைச்சுவைக்கு தம்பிராமையா, கொடுத்த வேலையை நிறைவாகச் செய்து சிரிக்கவைக்கிறார். நாயக்ன் ரவியின் குரல் போல இவர் இருப்பது சில இடங்களில் ரசிக்கவைக்கிறது. பிரகாஷ்ராஜ், வேல ராமமூர்த்தி, சண்முகராஜா, வருண் ஆகியோரும் படத்த்டில் இருக்கிறார்கள்.
வனத்தின் அழகு ஒளிப்பதிவாளர் திருவின் உழைப்பால் பன்மடங்கு அதிகமாகத் தெரிகிறது. வெளிநாட்டுக் காட்டுக்கும் நம்ம ஊர் காட்டுக்கும் வேறுபாடு தெரிவது திருவின் பலமா? பலவீனமா?
ஹாரீஸ் ஜெயராஜ் இசையில், பாடல்கள் கேட்கும்படி இருக்கின்றன. படத்தில் கொஞ்சம் ஒட்டாமல் இருப்பது சோகம்.பின்னணி இசையில் இன்னும் இருந்திருக்கவேண்டும் எனத் தோன்றுகிறது.
படத்தில் பல குறைகள் இருந்தாலும் பன்னாட்டுநிறுவனங்களின் மனிதநேயமற்ற நடவடிக்கைகள், வனவளம் பாதுகாக்கப் படவேண்டும் ஆகியனவற்றை மையப்படுத்திப் படமெடுத்ததற்காக இயக்குநர் விஜய்யைப் பாராட்டலாம்.