நீதிபதி கர்ணனை துரத்தித் துரத்தி கைது செய்தது ஏன்? – சீமான் கேள்வி


நீதியரசர் கர்ணன் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்

உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணன் மீதான நடவடிக்கைகள் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசர் கர்ணன் மீதான தொடர்ச்சியான சட்ட நடவடிக்கைகள் இதுநாள்வரை நடந்திராத சட்ட முறைமைகளுக்கு அப்பாற்பட்ட காட்சிகளாக இருக்கின்றன; ஒரு உயர்நீதிமன்ற நீதியரசரை பதவிநீக்கம் செய்வதற்கோ அல்லது அவர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுப்பதற்கோ இதுவரை கடைப்பிடிக்கப்பட்டு வந்த அரசியலமைப்பு சட்ட வழிகாட்டுதலுக்கு முரண்பட்டதாக காட்சியளிக்கிறது. சாதாரண மனிதனுக்கு கிடைக்கக்கூடிய சட்ட உரிமைகள் உயர்நீதிமன்ற முன்னாள் நீதியரசருக்கே மறுக்கப்படுவதன் அரசியல் எதனாலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. எப்போதும் தமிழர்களை ஊழல்வாதிகளாக, மூன்றாம்தர மனிதர்களாக சித்தரித்துக் காட்டுவதில் மிகுந்த ஆர்வம் காட்டிவரும் வட இந்திய ஊடகங்களுக்கு உயர்திரு கர்ணன் மீதான சட்ட நடவடிக்கைகள் மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியிருப்பதை நம்மால் காண முடிகிறது. பிறப்பால் ‘தமிழர்’ என்ற ஒரே காரணத்தினால் அவர் மீதான சட்ட நடவடிக்கைகள் ஊதிப் பெரிதாக்கப்படுகின்றனவோ என்ற எண்ணம் தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. நீதியரசர் கர்ணன் அவர்கள் எழுப்பிய வினாக்கள், கோரிய தகவல்கள் போன்றவை நீதிமன்றங்களுக்கு இடையிலான விவகாரங்கள் என்றாலும் நம் நாட்டின் எளிய மனிதன் உறுதியாக நம்புகிற அமைப்பான நீதித்துறையில் அண்மைக்காலங்களில் அதிகரித்துள்ள ஊழல்கள் பற்றியது என்பதால் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஒரு உயர்நீதிமன்ற நீதியரசர் மீதான எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்றத்தில் எவ்வித விவாதமும், தீர்மானமும் வைக்கப்படாத சூழலில் உச்ச நீதிமன்றமானது கர்ணன் மீதான தனிப்பட்ட காரணங்கள் தொடர்பாக தனது நடவடிக்கைகளைத் தீவிரமாக்கியுள்ளதோ என்ற சந்தேகத்தை எழுப்பியிருக்கிறது. அண்மைக்காலங்களில் பாராளுமன்ற சனநாயகத்தில் அதிகரித்து வரும் நீதிமன்றங்களின் தலையீடு என்கிற வகையில் கர்ணன் மீதான சட்ட நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கதாக அமைந்திருக்கின்றன. அவரைத் துரத்தி துரத்தி கைதுசெய்து சிறையிலடைக்க வேண்டிய அளவுக்கு நீதியரசர் செய்த குற்றமென்ன என்பதை நாட்டு மக்களுக்கு விளக்க வேண்டிய தேவை உச்ச நீதிமன்றத்திற்கு இருக்கிறது. இது நீதிமன்றங்களுக்கு இடையிலான பிரச்சினை என மத்திய அரசும் தலையிடாமல் இருப்பது பாராளுமன்ற நெறிமுறைகளுக்கு எதிரானது. எனவே, இதுவரை பின்பற்றிவந்த நெறிமுறைகளைத் தவிர்த்துவிட்டு நீதியரசர் கர்ணன் மீது தற்பொழுது தொடுக்கப்பட்டிருக்கிற சட்ட ஒடுக்குமுறைகளை நாம் தமிழர் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Response