மோடி தமிழக வருகை – ட்விட்டர் டிரெண்டில் கோ பேக் மோடி

பிரதமர் நரேந்திரமோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். காலை 10.30 மணி அளவில் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் சென்னை வரும் நரேந்திர மோடி, நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் பிரமாண்ட நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார். அங்கு பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து பேசுகிறார்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில், சென்னை தீவுத்திடல் அருகே உள்ள அடையாறு ஐ.என்.எஸ் கடற்படை தளத்தில் வந்து இறங்குகிறார். அங்கிருந்து கார் மூலம் நேரு உள் விளையாட்டு அரங்கிற்கு வருகை தரும் அவருக்கு வழி நெடுக வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

பிரதமர் நரேந்திர மோடியின் சென்னை வருகையை முன்னிட்டு சென்னையின் முக்கிய வழித்தடங்களில் காலை முதல் மதியம் வரை போக்குவரத்தில் மாற்றம் செய்யப்படும் என்று சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு அவர் பிற்பகல் 1.30 மணி அளவில் தனி விமானம் மூலம் கேரளா செல்கிறார்.

பிரதமர் நரேந்திரமோடி விமானநிலையத்தில் இருந்து ஹெலிகாப்டரில் அடையாறு ஐ.என்.எஸ். கடற்படை தளம் வந்து இறங்குவார் என்றுதான் அறிவிக்கப்பட்டுள்ளது. இருந்தாலும் அவர் விமான நிலையத்தில் இருந்து சாலை மார்க்கமாகவும், நேரு உள் விளையாட்டு அரங்கம் வருவதற்கு மாற்று ஏற்பாடு ஒன்றும் செய்யப்பட்டுள்ளது. அந்த சாலை மார்க்க பாதையிலும் வழி நெடுக பாதுகாப்பு போடப்பட்டிருக்கும்.

அடையாறு ஐ.என்.எஸ் கடற்படைத் தளத்தில் இருந்து நேரு உள் விளையாட்டு அரங்கம் செல்லும் சாலை முழுவதும் பலத்த பாதுகாப்பு வளையத்தில் நேற்றிலிருந்தே வைக்கப்பட்டு உள்ளது. நிகழ்ச்சி நடக்கும் நேரு உள் விளையாட்டு அரங்கம் உள்ள பகுதியில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பிரதமரின் பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் முதல் பாதுகாப்பு ஏற்பாடுகளை தங்கள் கையில் எடுத்துக் கொண்டு விட்டனர். மத்திய-மாநில உளவுப்பிரிவினர் மாறுவேடத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில், டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்பட்டு காலை 10.35 மணிக்கு சென்னை வரும் அவரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வரவேற்கின்றனர்.

இந்நிலையில், “பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைக்கும் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக நாளை நான் சென்னையில் இருப்பேன். நீர்ப்பாசனத்தை மேம்படுத்துவது, நகர்ப்புற இணைப்பு, பாதுகாப்புத் துறையில் ஆத்மநிர்பார்தா ஆகியவை இந்தத் திட்டங்களின் மையமாக உள்ளது என பிரதமர் மோடி நேற்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

பிரதமர் மோடியை வரவேற்கும் விதமாக TNWelcomesModi என்கிற ஹேஷ்டேக்கில் பாசகவினர் ட்வீட் செய்து வருகின்றனர்.

அதேநேரம் பிரதமரின் மோடி வருகைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் #GoBackModi என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி ஏராளமானோர் ட்வீட் செய்து வருகின்றனர். அந்தவகையில் நடிகையும் பிக்பாஸ் பிரபலமுமான ஓவியா கோ பேக் மோடி என்ற ஹேஷ்டேக்கில் ட்வீட் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இது இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது.

Leave a Response