மார்க்சிய லெனினிய மாவோயிச சிந்தனையில் ஆயுதம் ஏந்திய போராட்டத்தை முன்னெடுத்த சு எனப்படும் சுந்தரம் மரணமடைந்தார்.
32 வருட தலைமறைவு வாழ்க்கை. அதில் 10 ஆண்டுகள் சிறை வாழ்க்கை. தமிழரசன், புலவர் கலியபெருமாள் போன்றவர்களுடன் ஆரம்பித்த போராட்ட வாழ்க்கை.
தமிழரசன் மரணத்திற்குப் பின் தமிழ்நாடு விடுதலைப் படையின் தலைமை ஏற்று லெனின் போன்றவர்களுக்கு வழிகாட்டியாக செயற்பட்டு தமிழ்நாடு விடுதலைப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
பல காவல்நிலையங்கள் மீதான தாக்குதல் மற்றும் வெடிகுண்டு வழக்குகள் என எண்ணற்ற வழக்குகள் அவர் மீது போடப்பட்டன.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியை அடுத்த நத்தமலை அருகே சொந்த ஊரில் வீரவணக்க அஞ்சலியோடு உடல் அடக்கம் இன்று நடைபெற உள்ளதாகச் சொல்லப்படுகிறது.
அவர் மறைவு தொடர்பாக ஆழி செந்தில்நாதன் எழுதியுள்ள குறிப்பில்,
தமிழ்த்தேசிய இயக்கத்தின் மூத்த தோழர்களில் ஒருவரான தோழர் சுந்தரம் மறைந்தார் என்று கேள்விப்பட்டு பழைய நினைவுகளில் துயர் அடைகிறேன்.
சு என்று அழைக்கப்பட்ட சுந்தரம் தமிழ்நாடு விடுதலைப்படையின் மூத்த தளபதிகளில் ஒருவர். நக்சல்பாரி இயக்கத்தையும் தமிழ்த்தேசிய இயக்கத்தையும் கண்டு, இரண்டு தலைமுறைகளை இணைத்தவர்.
எனது மாணவப் பருவத்தில் அவரைச் சந்தித்திருக்கிறேன். எளிமையும் இனிமையும் மிக்க தோழர் சுந்தரத்தின் மறைவு தமிழ்த்தேசிய இயக்கத்தில் ஒரு தலைமுறையின் விடைபெறுதலும்கூட.
தங்கள் இயக்கச் செயல்பாடுகளின் போதாமை குறித்து மனம்திறந்து பேசக்கூடிய மனிதராக அவர் இருந்தார். முந்திரிக்காட்டுக்கு வெளியேயும் தமிழகம் இருக்கிறது என்பதை புரிந்துகொண்ட வெகுசிலர்களில் அவரும் ஒருவர்.
அவரை நான் சந்தித்தபோது அவரது அனுபவத்தின் வயசுகூட எனக்கு இல்லை. ஆனால் மிகுந்த மரியாதையோடும் கலந்துரையாடும் கலாச்சாரத்துடனும் அவர் பேசுவார்.
தோழர்தமிழரசனின் தொடர்ச்சி என்பது மக்கள் திரள் இயக்கத்தில்தான் இருக்கிறது தோழர் சுந்தரம் பிற்காலத்தில் புரிந்துகொண்டார் என்று நினைக்கிறேன்.
பிறகு பலப்பல ஆண்டுகள் அவர் எங்கேயிருக்கிறார் என்றுகூட எனக்குத் தெரியாது. பல ஆண்டுகள் சிறையில் இருந்தார் என்று மட்டும் தெரியும். கடைசியாக, கடந்த ஆண்டு, மற்றுமொரு தோழரின் இல்லத்தின் துயர நிகழ்வொன்றில் அவரைக் கண்டேன். அந்த ‘சு’வா இவர் என்று கேட்கும்படி வயது முதிர்ந்தத் தோற்றம். கொஞ்ச நேரம் பேசிக்கொண்டிருந்தார். எதுவும் நடக்கவில்லையே என்கிற ஏக்கத்தோடு அந்த சந்திப்பு இருந்தது.
‘சு’வுக்கு ஒரு கனவு இருந்தது. அவருக்கென்று ஒரு காலமும் இருந்தது.
தோழருக்கு வீரவணக்கம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.