தமிழுக்கு எதிரானவர்களை அஞ்சாமல் எதிர்த்த ஆற்றலாளர் அய்யா இளவரசு

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் உயராய்வு மையத்தின் தலைவராக விளங்கியவரும், தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிந்தவரும், தமிழியக்கம் அமைப்பைக் கட்டிக் காத்தவர்களுள் ஒருவருமான பேராசிரியர் இரா. இளவரசு அவர்கள் இன்று 22. 01. 2015 முற்பகல் 11 மணியளவில் இயற்கை எய்தினார்.

தூயதமிழ் மறவரான அவருடைய இழப்பு தமிழுலக்குப் பேரிழப்பு. அன்னாருடைய மறைவையொட்டி அவர் வழி இயங்கும் அவருடைய மாணாக்கர் முனைவர் மு.இளங்கோவன் அவர் பற்றி எழுதிய குறிப்பு.

முனைவர் இரா.இளவரசு அவர்கள் திருச்சிராப்பள்ளி மாவட்டம், இலால்குடி வட்டம் இராமநாதபுரம் ஊரில் 12.06.1939 இல் பிறந்தவர். பெற்றோர் மு.இராமசாமி, அருக்காணி அம்மாள்.பூவாளூர், இலால்குடி, திருச்சிராப்பள்ளி, காரைக்குடி, திருவனந்தபுரத்தில் கல்வி பயின்றவர்.புகுமுக வகுப்பில் இவர் கணிதம் பயின்று, இளங்கலையில் பொருளியல் பயின்று தமிழ் ஆர்வம் காரணமாக முதுகலையில் தமிழ் இலக்கியம் காரைக்குடி அழகப்பர் கல்லூரியில் பயின்றவர்.அறிஞர் வ. சுப .மாணிக்கனாரின் தமிழ்க் கொள்கைகளைத் தாங்கிய மாணவர் இவர்.

இவர் பேராசிரியர்களுள் இரா.இராதாகிருட்டிணன், வ.சுப.மாணிக்கம், வ.அய்.சுப்பிரமணியன் முதலியவர்கள் குறிப்பிடத்தகுந்தவர்கள். இவர் திருவனந்தபுரத்தில் உள்ள கேரளப் பல்கலைக் கழகத்தில் ‘பெருங்கதையின் மொழியமைப்பு’ என்னும் பொருளில் முனைவர்பட்ட ஆய்வு மேற்கொண்டு பட்டம் பெற்றவர்.

திருச்சி காசாமியான் உயர்நிலைப்பள்ளி, கேரளப்பல்கலைகழகம், அழகப்பா கல்லூரியில் ஆசிரியப் பணியாற்றியதுடன் புதுக்கோட்டை, தஞ்சாவூர், கருவூர், சென்னையில் உள்ள தமிழக அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்த பெருமைக்கு உரியவர். தொண்டு நோக்கில் சென்னை இரத்தினவேல் சுப்பிரமணியம் செந்தமிழ்க்கல்லூரி, திருவள்ளுவர் தமிழ்க்கல்லூரி, காஞ்சி மணிமொழியார் தமிழ்க்கல்லூரிகளில் தமிழ் முதுகலை ஆசிரியராகவும், இ.ஆ.ப.தேர்வுகளுக்கு நடுவண் அரசு நடத்தும் போட்டித்தேர்வு எழுதும் நடுவங்களில் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி ஆசிரியராகவும் பணிபுரிந்தவர்.

முனைவர் இரா.இளவரசு அவர்களின் மேற்பார்வையில் ஒன்பதுபேர் முனைவர் பட்டம் பெற்றுள்ளனர்.இருபது பேர் ஆய்வியல் நிறைஞர்பட்டம் பெற்றுள்ளனர்.

பேராசிரியர் பணியுடன் தமிழியக்க அமைப்புகள் பலவற்றில் இணைந்து பணிபுரிந்தவர். அவ்வகையில் உலகத் தமிழ்க்கழகம், தமிழியக்கம், உலகத்தமிழ்க்கல்வி, கலை, பண்பாட்டுக் கழகம்,தமிழக ஈழ நட்புறவுக்கழகம், தமிழ்வழிக்கல்வி இயக்கம்,தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட அமைப்புகளில் இணைந்து பணிபுரிந்தவர்.

உலகத்தமிழ் மாநாட்டு மலரிலும்,பல்வேறு பல்கலைக்கழகக் கருத்தரங்க மலர்களிலும் ஏடுகளிலும் சற்றொப்ப அறுபதிற்கும மேற்பட்ட கட்டுரைகளை வடித்துள்ளார். மதுரை, சென்னை,அண்ணாமலை, பாரதியார், புதுவைப் பல்கலைக்கழகங்களில் பல சொற்பொழிவுகள் வழங்கியுள்ளார்.

தமிழக அரசின் பரிசு, பாராட்டு, தலைநகர்த் தமிழ்ச்சங்கப் பாராட்டு, பாவேந்தர் பாசறைப் பாராட்டு, முருகாலயம் உள்ளிட்ட அமைப்புகளின் பாராட்டைப் பெற்றவர்.

தமிழக அரசின் பாவேந்தர் புகழ் பரப்புநர்(1991),பாவேந்தர் பைந்தமிழ்ச்செல்வர், (பாவேந்தர் பாசறை) உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றவர்.தமிழக ஆளுநரால் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் திட்டக்குழு உறுப்பினராக அமர்த்தப்பட்டவர். தில்லி சாகித்திய அகாதெமியின் பரிசுநூல் தேர்வுக்குழுவில் உறுப்பினராக இண்டுமுறை கடமையாற்றியவர். தனித்தமிழ்,பகுத்தறிவு, பொதுமைநலக் கருத்துகளை முன்வைக்கும் தமிழியக்க அமைப்பின் பொதுச்செயலாளராகப்(1972)பணிபுரிந்தவர்.

பாவாணர் நூற்றாண்டு விழாவைத் தமிழகம் முழுவதும் நடத்த ஏற்பாடு செய்து பணியாற்றியதுடன் சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கும் சென்று பாவாணர் கொள்கைகளை முழங்கியவர். இவரின் தனித்தமிழ்ப் பணிகளைப் பாராட்டி தினமணி,முகம்,இளந்தமிழன் உள்ளிட்ட இதழ்கள் புகழ்ந்து எழுதியுள்ளன.

முனைவர் இரா.இளவரசு அவர்கள் பாவேந்தர் பாடல்களிலும் பாவாணர் நூல்களிலும் நல்ல பயிற்சியுடையவர்.அதுபோல் தமிழ் இலக்கண இலக்கியங்களில், மொழியியலில் நல்ல ஈடுபாடு கொண்டவர்கள். ஆயிரக்கணக்கான மாணவர்களைத் தமிழ் உணர்வுடையவாராக மாற்றிக் காட்டியவர்.கடல்கடந்த நாடுகளிலும் இவர் தமிழ் உணர்வு அறியப்பட்ட ஒன்றாகும். தமிழுக்கு எதிரான கருத்துகளை உரைப்பவர்கள் யார் எனினும் எந்தப் பதவியில் இருப்பவர் எனினும் அஞ்சாமல் எதிர்க்கும் ஆற்றல் உடையவர்.

தமிழ் திராவிட இயக்க உணர்வுடன் வளர்ந்தவர்.பாவேந்தரின் வெளிவராத பாடல்களை வெளிக்கொண்டு வந்தது உட்பட இவர்தம் பாவேந்த ஆய்வுகள் குறிப்பிடத்தக்கனவாகும்.

திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் அமைந்துள்ள பாரதிதாசன் உயராய்வு மையத்தில் பேராசிரியராகவும் துறைத்தலைவராகவும் 1999- 2005 இல் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.சென்னையில் அமைதி வாழ்க்கை வாழ்ந்து வந்தவர்.

முனைவர் இரா.இளவரசு அவர்களின் துணைவியார் பேராசிரியர் வேலம்மாள் அவர்கள். இவர்களுக்கு அன்பு, ஓவியன் என இரு மக்கள் செல்வங்கள். இருவருக்கும் சாதி மறுப்புத் திருமணம் செய்து பார்த்தவர் நம் பேராசிரியர் அவர்கள்

 

 

Leave a Response