
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் 71 ஆவது பிறந்தநாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது.
தமிழன் இல்லாத நாடில்லை தமிழனுக்கெனெ ஒரு நாடில்லை என்பதால் மொழித் திணிப்பு பண்பாட்டுத் திணிப்பு ஒடுக்குமுறைகள் ஆகியனவற்றால் தமிழினம் சிக்குண்டு கிடப்பதைக் கண்டு சிலிர்த்தெழுந்த தலைவர் பிரபாகரன், தமிழருக்கென ஒரு நாடு தமிழீழம் உருவாக்குவோம் என உறுதி பூண்டு உழைத்தார்.
அவருடைய அயராத உழைப்பு அர்ப்பணிப்பு திடசித்தம் ஆகியனவற்றால் தமிழினம் தலைநிமிர்ந்தது.தமிழீழ மண்ணில் தமிழராட்சி நடந்தது.சுமார் முப்பது ஆண்டுகள் நீடித்த அந்த ஆட்சிக்கு உலக நாடுகள் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கவில்லை எனினும் எல்லாப் பேச்சுவார்த்தைகளிலும் தமிழீழ விடுதலைப் புலிகள் தாம் தமிழர்களின் பிரதிநிதிகள் என்பதை ஒப்புக்கொண்டு அழைத்தனர்.
சுமார் நாற்பதாண்டுகள் தலைவர் பிரபாகரனின் தலைமையில் நடந்த தமிழர் ஆட்சி, ஒட்டுமொத்த உலகத்தின் கண்களை உறுத்தியதன் விளைவு இருபது நாடுகளுக்கு மேல் ஒருங்கிணைந்து தமிழீழ விடுதலைப் புலிகளின் கருவிப்போரை முடிவுக்குக் கொண்டுவந்தன.
கருவிப்போர் முடிந்தாலும் விடுதலைப்போர் முடியவில்லை.அது தமிழீழம் அமையும்வரை தொடரும் என்பது திண்ணம்.
தமிழீழம் அமையவில்லை எனினும் தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அதற்கோர் குணமுண்டு என்கிற கருத்து தமிழர்கள் மத்தியில் மட்டும் இருந்தது.அக்கருத்து உலகம் முழுக்கப் பரவக் காரணம் தலைவர் பிரபாகரன்.
தலைவருக்கு முன் நாம் எந்த நாட்டுக்குச் சென்றாலும் இந்தியர் என்றுதான் அடையாளம் காணப்படுவோம், மலேசியாவிலிருந்து ஒரு தமிழர் எந்த நாடு சென்றாலும் அவர் மலேசியர் என்றே அழைக்கப்படுவார்.
தலைவர் வந்தபின், இன்று உலகின் எந்த மூலைக்குப் போனாலும் இவர் தமிழர் என்று அவர்களே சொல்கின்றனர் என்கிற நிலை உருவாகியிருக்கிறது.
தமிழர் நாட்டுக்கு அடிப்படை தமிழினம்.அந்தத் தமிழினம் உயிர்ப்போடிருக்க உழைத்த மாபெரும் தலைவர் புறநானூற்றில் படித்த தமிழ்வீரத்தை நேரில் பார்க்க வைத்த பெருமைக்குரியவர் இன்னும் இன்னும் உலகில் எவ்வளவு பெருமைமிகு சொற்கள் உள்ளனவோ அவ்வளவுக்கும் பொருத்தமான தலைவராக விளங்கும் வே.பிரபாகரன் அவர்களின் அகவை நாளில் அவரை வணங்குவோம்.அவர் வழி நடந்து தமிழர் உரிமை நிலைநாட்டுவோம்.
– அன்பன்


