ரணிலின் அறிவிப்பின்படி சிங்கள இராணுவத்திடம் இருக்கும் தமிழர் காணிகள் மீட்கப் படுமா..?


வடக்கு மாகாண சபைக்கு வருகிறது காணி..காவல்..நிதி அதிகாரங்கள் என்று இலங்கை நாடாளுமன்றத்தில் ரணில் விக்கிரம சிங்க அறிவித்திருகிறார். அவருடைய அறிவிப்பு முழுச்சாப்பாடு கேட்டவர்களுக்குக் கொடுக்கப்படுகிற புளித்துப்போன குலாப்ஜாமுன் என்று விமர்சனம் செய்கிறார் எழுத்தாளர் மு.வே.யோகேஸ்வரன். அதோடு அதையாவது உண்மையாகச் செய்வார்களா என்கிற கேள்வியையும் எழுப்பியுள்ளார். அவருடைய பதிவு கீழே…..

கடந்த காலத்தில ராஜபக்சாவாலும்..ஜே.ஆராலும் கொண்டு வரப் பட்டு.. பின்னர் வந்த இலங்கை அதிபர்களால் முடக்கப் பட்டிருந்த இந்திய அரசின்..புளித்துப் போன..
..’குலாப் ஜாமுனை ‘..மீண்டும் குளிர் பதனப் பெட்டிக்குள்..இருந்து எடுக்க.. தற்போதைய இலங்கை அரசு விரும்புவதாக..நேற்று இலங்கை நாடாளுமன்றத்தில் பேசிய, இலங்கைப் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கா கூறியுள்ளார்.!
‘தமிழீழம்’ என்னும் முழுச் சாப்பாட்டுக்காக தம் உயிரையே லெட்சக் கணக்கில் அர்ப்பணித்த தமிழர்களுக்கு..புளித்துப் போன ‘குலாப்ஜாமுன் ‘என்பது..ஜீரணிக்குமா..?..ஆனால்..தமிழ் ஈழத்தை ..ஈழத் தமிழர்களுக்கு அர்ப்பணிக்க.. அண்டை நாடான இந்தியாவும் விரும்பாது..இலங்கை இனவாதிகளும் அதற்கு உடன் பட மாட்டார்கள் என்பது..ஊர் அறிந்த உண்மைதான்!

ஆயினும் ,நீண்ட காலமாக.. தம் சொந்தக் காணிகளை அந்நியரிடம் இழந்துவிட்டு..அயல் நாடுகளில் அனாதைகள்போல் வாழும் மக்களுக்கு..தம் சொந்தக் காணிகள் மீண்டும் கிடைத்தால் ஓரளவு மகிழ்ச்சிதான்..ஆனால்..13ஆவது அரசியல் சட்டத் திருத்தம் என்பது..மாகாண சபைகளுக்கு சிறிய அளவில் சில அதிகாரங்களை வழங்கும் என்பது உண்மைதான்!

..ஆனால்..அதில் காணிகளை நிர்வகிக்கும் அதிகாரம் உண்டு என்றாலும் கூட..இலங்கையை பொறுத்தவரை..நிறைவேற்று அதிகாரம் கொண்ட இலங்கை அதிபரின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் முப்படைகளும் வருவதால்..முப் படைகளாலும், நீண்ட காலமாக சுவீகரிக்கப் பட்டிருக்கும்..தட்டிப் பறிக்கப் பட்டிருக்கும் எங்கள் மக்களின் காணிகளை வடக்கின் மாகாண சபை மீட்டுத் தரும் அதிகாரத்தை பெற்று இருக்குமா..?..பெற்றுத் தருமா..? என்பதுதான் இப்போதுள்ள முக்கிய கேள்விக் குறியாகும்?
எனவே..காணி அதிகாரம் என்பது 13ஆவது அரசியல் அமைப்புச் சட்டப்படி மாகாண சபைக்கு வழங்கப் பட்டாலும் கூட..வடக்கில் சிங்கள இராணுவத்திடம் அடகு வைக்கப் பட்டிருக்கும் பாரம்பரிய..தமிழர் காணிகள் மீட்கப் படுமா..?..என்பதே,இன்றுள்ள முக்கிய கேள்விக் குறியாகும்!..இலங்கைப் படைகளும்..வடக்கின் தமிழர் காணிகளும் ஓர் நாணயத்தின் இரட்டைப் பக்கங்கள் போன்றவை..இதில் எதை இலங்கை அரசு இழக்க நேரிட்டாலும்..அதற்கு எதிராக சிங்கள இனவாதிகள்..எதிர்க் குரல் கொடுப்பார்கள் என்பது மட்டும் உண்மை!..அதுபோல்..தமிழர்களின் காணிகளை மீண்டும் தமிழர்களிடம் ஒப்படைப்பதாயின்..95%மான இலங்கைப் படைகளை வடக்கில் இருந்து இலங்கை அரசு வடக்கிற்கு வெளியே கொண்டு செல்ல வேண்டும்..அதை செய்வார்களா..?
குறிப்பாக..பலாலியை சுற்றியுள்ள எண்ணிறைந்த கிராமங்களில் சிங்கள இராணுவம் தமிழர்களின் விளை நிலங்களை..வீடுகளை.. அபகரித்துக் கொண்டு முகாம் இட்டுள்ளது…காணி அதிகாரம் அவற்றை எம் கைக்கு மீண்டும் கொண்டு வருமா..?..நிச்சயம் கொண்டு வராது என்பதே என் கணிப்பு..!..காரை நகரை சுற்றியுள்ள எங்கள் மக்களின் காணிகளில் கடற்படை துள்ளி விளையாடுகிறது ..ஆயிரக் கணக்கான எங்கள் மக்களின் நிலங்கள் அங்கும் அவர்களால் ஆக்கிரமிக்கப் பட்டுள்ளன….வடக்கின் காணி அதிகாரம் மூலம்..அவற்றை அள்ளி எடுக்க இலகுவில் முடியுமா..?..அதற்கு தற்போதைய பாதுகாப்பு விவகாரங்களுக்கு பொறுப்பான..முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா..சம்மதிப்பாரா..?..சிங்கள இராணுவ இரத்தம் அதற்கு இடம் தருமா..?..அது கல்லில் நார் உரிப்பதற்கு சமனானது!
எனினும் 13வது அரசியல் அமைப்புச் சட்டத்தை நீக்கியது..முன்னாள் அதிபர்களின் சிபார்சின்படி.. இலங்கை உச்ச நீதிமன்றம்தான்..!அதை மீண்டும் அமுல் படுத்துவதாயின் நாடாளுமன்றத்தில் உள்ள தற்போதைய பெரும்பான்மையால் அது முடியுமா..?..இப்படி பல கேள்விகள் அதில் புதைந்து கிடக்கின்றன..
இவற்றுக்கு விடை அளிப்பதாயின்..அது ஓர் இடியப்பச் சிக்கலாகவே நிச்சயம் இருக்கும்..!..எனினும், பொறுத்திருந்துதான் அனைத்தையும் பார்க்கவேண்டும்..?..இதற்கிடையே இந்தியாவில் உள்ள ஈழ ஏதிலி முகாம்களை மூட இந்திய மத்திய அரசு துரித நடவடிக்களை எடுத்து வருவதாக தெரிகிறது!..அதன் ஒரு பகுதியாக சென்னைக்கு அருகில் உள்ள கும்மிடிப் பூண்டி ஏதிலிகள் முகாமில் ஏதிலிகளை கணக்கெடுக்கும் வேலைகள் துரிதமாக நடை பெற்று வருகின்றன..
அதனால்..25 வருடங்களுக்குமேல் அந்த முகாமில் வாழும் ஈழத் தமிழர்கள் மிகவும் பதற்றம் அடைந்த நிலையில் வாழ்கிறார்கள்..அங்கே வாழ்வோரில் பலரும் தமிழ் நாட்டோடு-இங்குள்ள தமிழர்களோடு.. மிக நீண்ட காலமாக பின்னிப் பிணைந்து இருப்பவர்கள்..
அநேகம் பேர் இந்த மண்ணிலேயே பிறந்தவர்கள்..உயர் கல்வி..அடிப்படைக் கல்வி..என்று இங்கேயே ஈடுபட்டிருப்பவர்கள்..அதுமட்டும் இன்றி திருமண பந்தத்தில் கூட பலர் தமிழ் நாட்டின் தொப்புள் கொடி உறவுகளோடு இணைந்திருப்பவர்கள்..
நாளை அவர்களை இந்திய அரசு கப்பல் ஏற்றினால்..அவர்களின் எதிர்காலம்..நிச்சயம் கேள்விக் குறியாகிவிடும் என்பதில் ஐயம் சிறிதும் இல்லை!
‘குலாப் ஜாமுன்கள் ‘ (ஆரியம்)ஒருபோதும் இட்லி ..வடை ஆகிவிட முடியாது!1.25 இலட்சம் தமிழர்களை இந்த மண்ணில் இருந்து விரட்டி அடித்துவிட்டு..இலங்கை மண்ணில் முள்ளு வேலிக்குள் அடைக்கப் போகின்றனவா இரு அரசுகளும்?
புரியவில்லை!

Leave a Response