ஆங்கிலம், இந்தி, சமக்கிருதம் என்கிற புதிய மும்மொழிக்கொள்கை- மோடி அரசின் திட்டத்துக்குக் கண்டனம்

சென்னை, சனவரி 23, 2015  ஞாயிற்றுக்கிழமை அன்று இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50 ஆம் நினைவு ஆண்டில், மொழிப்போர் தியாகிகளுக்கு சிறப்பாக நினைவேந்தல் நடத்துவது என்றும் இந்த ஆண்டை மொழி உரிமை ஆண்டாக பிரகடனம் செய்து, ஆண்டு முழுவதும் தமிழ் மொழியுரிமைக்காக போராடுவது என்றும் 50க்கும் மேற்பட்ட தமிழக அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் முடிவுசெய்திருக்கின்றன. இந்த அமைப்புகளின் கூட்டமைப்பான தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கம் இதை ஊடகவியலாலளர்கள் சந்திப்பில் அறிவித்தது.

தமிழ்நாட்டில் கடந்த ஐம்பதாண்டுகளாகக் கடைப் பிடிக்கப்பட்டுவரும் மொழிப்போர் தியாகிகள் நாளான சனவரி 25 அன்று மாலை 3 மணிக்கு கூட்டியக்கத்தின் சார்பில் சென்னை மெரீனா கடற்கரையில் திருவள்ளுவர் சிலை அருகே மொழிப்போர்த் தியாகிகளுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. கண்ணகி சிலையிலிருந்து திருவள்ளுவர் சிலைவரை பேரணியாக சென்று நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெறும் என்று கூட்டியக்கம் அறிவித்திருக்கிறது.

 

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு தொல். திருமாவளவன், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி (எஸ்.டி.பி.ஐ) மாநிலத் தலைவர் திரு. தெக்லான் பாகவி, 1965 மொழிப்போர் மாணவர் தலைவராக இருந்த பேராசிரியர்  அ.ராமசாமி, தமிழ்த்தேசிய விடுதலை இயக்கத்தின் திரு. தியாகு, தமிழ் மொழியுரிமைக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திரு. ஆழி செந்தில்நாதன் ஆகியோரும் இருபதுக்கும் மேற்பட்ட தமிழ் அமைப்புகளின் தலைவர்களும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசினர்.

இன்றைய நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு ஆட்சி பீடமேறிய முதல்நாளிலேயே இந்தித் திணிப்பில் ஈடுபட்டுவருவதைக் கூட்டமைப்பின் தலைவர்கள் கண்டனம் செய்தார்கள். இதன் உச்சகட்டமாக, மத்திய அரசு அங்கீகாரமுள்ள பள்ளிகளில் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம் என்கிற புதிய மும்மொழிக்கொள்கையை அமல்படுத்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பத்திரிகையாளர்களிடம் பேசிய திரு.ன் தொல். திருமாவளவ, “மற்ற மாநிலங்களில் அவரவர் மொழிகளில் படிக்காமல் கல்வியைத் தொடர முடியாத நிலை இருக்கிறது. தமிழ்நாட்டில்தான் தமிழே படிக்காமல் உயர்கல்வி வரை படிக்கமுடியும் என்கிற அவலமான நிலை நீடிக்கிறது. சென்னை போன்ற பெருநகரங்களில் தமிழையே பேசத் தெரியாத தலைமுறை வளர்ந்து வருகிறது” என்று கூறினார். “தமிழர்கள் ஒன்றுதிரண்டு தங்கள் மொழியுரிமைக்காக போராடவேண்டிய காலம் உருவாகிவிட்டது” என்றும் அவர் தெரிவித்தார்.

“2015 ஐ மொழி உரிமை ஆண்டாக பிரகடனப் படுத்தியிருக்கிறோம். இவ்வாண்டு முழுக்க தியாகிகளுக்கு நினைவேந்தும் நிகழ்வுகளும் மொழி உரிமைக்கான இயக்கங்களும் தொடரும். தாய்மொழியின் முக்கியத்தை மக்களிடம் பரப்புரை மூலமாக கொண்டுசெல்லும் செயல்பாடுகளையும் கூட்டியக்கம் மேற்கொள்ளும். தமிழ் மொழி தொடர்பான அனைத்துக் கோரிக்கைகளையும் கூட்டியக்கம் ஒன்றாக இணைத்து செயல்படும். தமிழகமெங்கும் உள்ள தமிழ் அமைப்புகளை இதற்காக நாங்கள் ஒருங்கிணைப்போம்” என்று கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும் மக்கள்இணையம் கட்சியின் பொதுச்செயலரும் திரு. ஆழி செந்தில்நாதன் கூறினார்.

இந்தியாவின் மொழிப்பிரச்சனைக்கான தீர்வின் முதல் படியாக, தமிழ் உள்ளிட்ட இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் அட்டவணை 8 இல் உள்ள 22 மொழிகளையும் மத்திய அரசின் ஆட்சிமொழியாக ஆக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டங்களையும் இயக்கங்களையும் நடத்துவது என கூட்டியக்கம் திட்டமிட்டுள்ளது. இதற்காக மொழி நிகரமை மற்றும் உரிமை சட்ட முன்வரைவு என்கிற அரசியலமைப்புச்சட்டத்திருத்த முயற்சியை கூட்டியக்கம் முன்வைத்துள்ளது. இது இந்திய அரசியலமைப்புச்சட்டத்தின் 17 ஆம் பிரிவை முழுமையாக மாற்றியமைக்கக்கோருகிறது.

தமிழகத்திலுள்ள மத்திய, மாநில, தனியார் அமைப்புகளில் தமிழின் அதிகாரபூர்வ இடம் உறுதிசெய்யப்பட்டால்தான் தமிழ்நாட்டில் தமிழக மக்களுக்கு வேலை வாய்ப்பு உறுதியாகும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தச் சட்டத்திருத்தமானது தேவைப்படுகிறது.

இத்துடன் தமிழைத் தமிழக பள்ளிகளில் அனைவரும் படிப்பதற்கான உத்தரவாதம், தமிழ்வழிக்கல்விக்கான பாதுகாப்பு, தமிழ்வழி பயின்றோர்க்கு வேலைவாய்ப்பு முன்னுரிமை, நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக ஆக்குதல், வழிபாட்டு இடங்களில் தமிழின் இடத்தை உறுதிசெய்தல், கணிப்பொறித் துறையில் யூனிகோடு முறையில் தமிழுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை களைதல், செம்மொழி நிறுவனம் உள்ளிட்ட தமிழ் ஆய்வு நிறுவனங்களுக்கு பாதுகாப்பும் வளர்ச்சியும் உறுதிப்படுத்துதல், தமிழக பள்ளிகளில் தமிழாசிரியர்களின் பணியிடங்களுக்கு பாதுகாப்பு, தமிழ் எழுத்தாளர்களுக்கும் பதிப்பாளர்களுக்கும் தமிழ் ஊடகங்களுக்கும் நல்ல சூழலை உருவாக்குவதற்கான முயற்சிகள் ஆகியவற்றுக்காக போராட கூட்டியக்கம் முன்வந்திருக்கிறது. அத்துடன் வங்கி, மருத்துவமனைகள், போக்குவரத்து நிறுவனங்கள் உள்ளிட்ட மக்கள் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் தமிழ் மொழிப் பயன்பாட்டை சட்டபூர்வமாக ஆக்குவதற்கும் கூட்டியக்கம் போராடும். அத்துடன் மொழிப்போர் தியாகியரின் நினைவிடங்களை மேம்படுத்தவும் மொழிப்போராட்டம் குறித்த பாடநூல்களில் உரிய பாடங்களைச் சேர்க்கவும் கூட்டியக்கம் போராடும்.

ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்ட பிற முக்கிய தமிழ் அமைப்புகளின் தலைவர்கள் பின்வருமாறு:

• தோழர் பாவேந்தன், தமிழ்த்தேச நடுவம்
• தோழர் செல்வி, தமிழ்நாடு மக்கள் கட்சி
• தோழர் தமிழ்நேயன், தமிழ்த்தேச மக்கள் கட்சி
• தோழர் திருமுருகன் காந்தி, மே 17 இயக்கம்
• தோழர் செந்தில், இளந்தமிழகம் இயக்கம்
• தோழர் வேலுமணி, தமிழர் எழுச்சி இயக்கம்
• தோழர் இராச்குமார் பழனிச்சாமி, தமிழர் பண்பாட்டு நடுவம்
• தோழர் அதியமான, தமிழர் முன்னேற்றக் கழகம்
• தோழர் வீரலட்சுமி, தமிழர் முன்னேற்றப்படை
• தோழர் சுந்தரமூர்த்தி, தமிழர் விடுதலைக் கழகம்
• தோழர் தமிழ்நெறியன், தமிழ்நாடு மாணவர் இணையம்

 

 

Leave a Response