நான் தமிழ்த்தேசியனாக அவரே காரணம் – அருகோ அய்யா நினைவுக் குறிப்பு

மூத்த தமிழ்த் தேசியத் தலைவரும் முனை மழுங்காப் போராளியுமான அருகோ அய்யா டிசம்பர் 23,2025 அன்று அதிகாலை 5.30 மணியளவில் மறைவுற்றார்.

21.11.1937ஆம் ஆண்டில் சங்கரன் கோவிலில் தந்தை அருணாசலம் – கோமதி அம்மாள் இணையருக்கு மகனாகப் பிறந்தார். அவருக்கு கல்யாணி என்ற மனைவியும், தமிழ்க் குமரன் என்ற மகனும் உண்டு.

சி,பா.ஆதித்தனார் நாம் தமிழர் இயக்கத்தைத் தோற்றுவித்தபோது அவருடன் இணைந்து பணியாற்றினார்.அப்போது வெளியான தமிழ்க்கொடி ஏட்டின் ஆசிரியராகப் பொறுப்பேற்றார்.

ஆதித்தனார் திமுகவுக்குச் சென்றபோதும் அவருடன் செல்லாமல் தமிழ்த் தேசியக் களத்தில் தீவிரமாகப் பணியாற்றினார்.

தொடக்கத்தில் மர்மம் எனும் மாத இதழைத் தொடங்கி நடத்தினார்.அதன்பின் 1985 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை எழுகதிர் ஏட்டை நடத்திக்கொண்டிருந்தார்.தனித் தமிழ்நாடு, தமிழீழம் ஆகிய நாடுகள் அமைய வேண்டும் என்று வாழ்நாள் நெடுக எண்ணியவர்.

எண்பது வயதிலும் தமிழ்த் தேசியக் களத்தில் தீவிரம் குறையாமல் தொடர்ந்தவர்.உடல் நலிவுற்ற நிலையிலும் தன்னைச் சந்திக்க வந்த சீமானிடம், தமிழன் இல்லாத நாடில்லை தமிழனுக்கென்றொரு நாடில்லை அந்தகுறையைப் போக்கவேண்டும் தமிழனுக்கு நாடு வேண்டும் என்று கணீர்க்குரலில் முழங்கியவர்.

என் தந்தை ஈரோடு பா.அர்த்தநாரி,அருகோவுடன் நாம் தமிழர் இயக்கத்தில் இணைந்து பணியாற்றியவர்.தனித்தமிழ்நாடு கொடியேற்றி சிறை புகுந்தவர். தமிழ்த் தேசியக் களத்தில் இறுதிவரை பயணித்தவர்.எனக்கு தமிழன்பன், என் தம்பிகளுக்கு தமிழ்க்குமரன், தமிழ்ச்செல்வன் என்றும் மறைந்துவிட்ட என் தங்கைக்கு தமிழ்க்கொடி என்றும் பெயரிட்டவர்.

அதனால் அருகோ அவர்களுக்கு என் தந்தை மீது தனிப்பற்று உணடு. அவருடைய் எல்லா முயற்சிகளிலும் என் தந்தையும் உடனிருந்திருக்கிறார்.

இதனால்,நான் எழுத்துக்கூட்டிப் படிக்கத் தொடங்கும்போதே அருகோவின் மர்மம் இதழை வாசித்திருக்கிறேன்.அதன்பின் அது எழுகதிராய் உதித்தபோதிலிருந்து இப்போது வரை எல்லா இதழ்களையும் வாசித்த பெருமை எனக்குண்டு.

1984 ஆம் ஆண்டு அமெரிக்கப் பயணம் முடித்து தமிழ்நாடு திரும்பிய அவரை வைத்து ஈரோட்டில் ஒரு பொதுக்கூட்டம் என் தந்தை முன்னெடுப்பில் நடத்தப்பட்டது.அப்போது சிறுவனாக இருந்த நான் மேடையில் அவர் அருகே அமர்ந்து, அமெரிக்கா போய் ஆங்கிலத்தில் பேசினீர்களா? தமிழில் பேசினீர்களா? என்று கேட்டேன்.என் முதுகில் தட்டிக் கொடுத்து,இப்பவே இவ்வளவு யோசிக்கிறியா? நான் தமிழர்கள் மத்தியில் தமிழில்தான் பேசினேன் என்று சொன்னது என் நினைவில் இன்றும் பசுமையாக உள்ளது.

பின்பு, 1995 ஆம் ஆண்டு தமிழ் தமிழர் இயக்கத்தின் முழுநேர ஊழியராக சென்னை வந்து அதன்பின் ஊடகவியலாளனாகத் தொடர்கிற நேரத்திலும் அவ்வப்போது அவருடைன் உரையாடுவேன்.

எனக்காக,அவருடைய இயல்புக்கு மாறாக, மாலைமுரசு,தேவி ஆகிய பத்திரிகைகளின் உரிமையாளர் சி.பா.ஆதித்தனாரின் மூத்தமகன் இராமச்சந்திர ஆதித்தனாரிடம் வேலை கேட்டுச் சென்ற அரிய நிகழ்வும் நடந்தது.

தமிழ்ச் சான்றோர் பேரவை சார்பில் தமிழ்நாடெங்கும் கூட்டங்கள் நடந்தபோது அருகோ அய்யாவுடன் பல ஊர்களுக்கு உடன் பயணித்திருக்கிறேன்.

வீட்டுக்குச் செல்கிற பொழுதிலெல்லாம் வருக தமிழன்பன் வருக என்னும் அவருடைய அன்பழைப்பையும் தொலைபேசியில் அழைத்து நான் தமிழன்பன் என்று சொன்னவுடன் வாழ்க வாழ்க எனும் வாழ்த்தையும் இழந்துவிட்டேன் என்பதை எண்ணும் அடக்க முடியாமல் வரும் அழுகையைத் தடுக்க இயலவில்லை.

கிட்டத்தட்ட எழுபதாண்டுகள் தமிழ் இனம் மொழி என தமிழ்ச்சமுதாயத்துக்காகவே உழைத்து ஓடாய்த் தேய்ந்த அறிஞரின் திருவுடல், சென்னை நகரின் ஒரு நெருக்கடியான தெருவில் கிடத்தப்பட்டிருந்ததைக் கண்டு உள்ளம் நொந்தேன்.கடைசியாகச் சில மணி நேரம் அவர் உடலம் அருகில் அமர்ந்திருந்து அவரையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

தனக்கென வாழாமால் தன்னினத்துக்காகவே வாழ்ந்து மறைந்த அந்தப் பெருமகனின் வழியில், உயிர் இருக்கும்வரை உழைக்கவேண்டும் என்று உறுதியேற்பதே அவருக்குச் செலுத்தும் உண்மையான வீரவணக்கம்.
செய்வேன்.

– அ.தமிழன்பன்

Leave a Response