ஐந்தாவது தலைமுறையாக விவசாயத்தை கையில் எடுத்த கோவை சகோதரிகள்..!


வீட்டிலிருந்து எட்டு மணிக்குக் காலை உணவை முடித்துவிட்டு ஒரு கி.மீ. தொலைவில் உள்ள தோட்டத்துக்கு மொபெட்டில் புறப்படுகிறார்கள் அந்தச் சகோதரிகள். தோட்டத்தில் காத்திருக்கும் பண்ணை ஆட்களுக்கு வேலைகளைப் பிரித்துக் கொடுக்கிறார்கள். தாங்களும் களத்தில் இறங்கிக் களை எடுக்கிறார்கள்; பாத்தி கட்டுகிறார்கள்; களை எடுக்கிறார்கள்; சொட்டுநீர்ப் பாசனத்துக்கான குழாய்களைச் சரிசெய்கிறார்கள்; பூச்சிக்கொல்லியைக் கலக்கித் தெளிப்பானால் தெளிக்கிறார்கள்.

காயத்ரி தேவி (23), பிரியங்கா (20) ஆகியோரே அந்த இரண்டு சகோதரிகள். காயத்ரி படித்தது எம்.பி.ஏ., பிரியங்கா படித்தது சிவில் பட்டயப் படிப்பு என்பதைக் கேள்விப்படும்போது வியப்பாகத்தான் இருக்கிறது.

“இரண்டு வருஷத்துக்கு முன்னால எம்.பி.ஏ. முடிச்சேன். கோவையில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை கிடைச்சுது. ஆறு மாசம் வேலை பார்த்தேன். வேலை சுத்தமா பிடிக்கலை. ஆயிரந்தான் இருந்தாலும் விவசாயம் போல வருமான்னு யோசிச்சேன். அப்பாவுக்கும் உடம்புக்கு முடியலை. ஆம்பிளைப் புள்ளையா இருந்தா அவருக்கு ஒத்தாசையா இருந்திருக்கும்னு நினைப்பாங்க. அதை நாம ஏன் செய்யக் கூடாதுன்னு முடிவெடுத்தேன். அப்புறம் வேலையை விட்டுட்டு விவசாயத்துக்கு வந்துட்டேன்! ” என்கிறார் காயத்ரி தேவி.

“அக்காவே எம்.பி.ஏ. படிச்சுட்டு விவசாயத்துக்கு வரும்போது, நான் மட்டும் வேலைக்குப் போய் என்ன செய்யப் போறேன். படிப்பு அறிவு வளர்ச்சிக்குத்தான். தொழில் நம்ம வாழ்க்கை வளர்ச்சிக்குன்னு முடிவெடுத்தேன். நானும் விவசாயத்துல இறங்கிட்டேன்!” என்று வரை ஆமோதித்துச் சொல்கிறார் தங்கை பிரியங்கா.

இவர்களுக்குச் சம்பரவள்ளிப் புதூரில் 12 ஏக்கர் நிலம் பரம்பரையாக உள்ளது. காயத்ரி தேவி, பிரியங்காவின் அப்பா குமாரசாமி நான்காவது தலைமுறை. இவர்கள் ஐந்தாவது தலைமுறையாக விவசாயத்தில் இறங்கியுள்ளனர்.

“இவங்க தாத்தா காலத்துல 50 பேருக்கு மேல் இங்கே பண்ணையத்தில் வேலை செஞ்சிருக் காங்க. பசு மாடு, செம்மறி ஆடு, வெள்ளாட்டு பட்டிகள் தனித்தனியா இருக்கும். பட்டி பெருகவும் உழவோட்டவும் காளை மாடுகளும் கணக்கில்லாம இருக்கும். அதை கவனிக்கவே ஐந்து பேர் தனியா இருந்தாங்க. எல்லோருக்கும் தினமும் சாப்பாடு, தூக்கம் எல்லாமே பண்ணையிலேயேதான். வாழை, மஞ்சள், கரும்புன்னு விளையாத பயிர் இல்லை. பத்து வருஷத்துக்கு முன்னாடிகூட 12 பேர்வரை வேலை பார்த்தாங்க.

இப்பவெல்லாம் ஆளே கிடைக்கிறதில்லை. நிலத்தடி நீரும் ரொம்ப கீழே போய், ஆழ்குழாய் கிணத்துலயே தண்ணி அரிதாகத்தான் கிடைக்குது. ஐந்து கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பவானி ஆறும் அடிக்கடி வறண்டு போகுது. அதனால் வருஷத்துக்கு ஐந்து ஏக்கர்ல மட்டும் மஞ்சள், வாழை, மல்லி பயிர் செய்யறோம். மீதிக் காட்டைச் சும்மா போட்டுடுவோம். அடுத்த வருஷம் அதில் விதைப்பு நடக்கும். இது சும்மா கிடக்கும்.

கொஞ்ச காலமா எங்க வீட்டுக்காரருக்கு உடம்புக்கு முடியாம இருந்தது. இனித் தோட்டங்காட்டை யார் கவனிப்பாங்கிற கவலையும் மனசுல இருந்துச்சு. அந்த நேரத்தில் நானும் விவசாயத்தைக் கவனிக்கிறேன் என்று பெரிய பொண்ணு வந்து கேட்டபோது அதிர்ச்சியாகத்தான் இருந்துச்சு. அவள் களத்துல இறங்கி அப்பாவுடன் கூடமாட உதவி செஞ்சப்போ ஆச்சரியமா இருந்துச்சு.

இப்ப நம்ம புள்ளைங்க படிக்கிறாங்க. அவங்க எங்க விவசாயத்தைக் கவனிக்கப் போறாங்கன்னு நினைச்சிட்டிருந்தோம். ஆனா இவங்க ரெண்டு பேரும் ரெண்டு வருஷமாக விவசாயத்துல இறங்கித் துறுதுறுன்னு வேலை செய்யறதைப் பார்த்ததுக்கு அப்புறம் புது நம்பிக்கை பிறந்திருக்கு!

பள்ளிக்கூடம், காலேஜுக்குப் போயிட்டிருந்தப்ப பாடப்புத்தகம், வகுப்புல நடக்குற விஷயங்கள், மதிப்பெண்கள் பற்றியே அப்பாவிடம் மகள்கள் ரெண்டு பேரும் பேசிக்கிட்டிருப்பாங்க. இப்போதெல்லாம் எந்தப் பட்டத்தில் எதை விதைப்பது; மஞ்சளுக்கு இந்தப் பருவத்தில் எந்த மருந்தடிப்பது; அதை எவ்வளவு தண்ணில கலந்து எப்படி அடிக்கணும்; எந்தப் பயிருக்கு எத்தனை நேரம் தண்ணி விடணுங்கிறது மாதிரியான விஷயங்களையே பேசுறாங்க” என்று பூரிப்புடன் சொல்கிறார் இந்தச் சகோதரிகளின் தாய் அருள்மொழி.

இவ்வளவு படித்துவிட்டு, பொருளாதார வசதியும் ஓரளவு நன்றாக இருக்கும் நிலையில் இந்தச் சகோதரிகள் விவசாயத்துக்கு வரவேண்டிய தேவை என்ன என்ற கேள்வி எல்லோர் மனதிலும் எழும். ‘இதற்காகக் கொஞ்சம்கூட வருத்தப்படவில்லையா? அழுக்குப்படியாத உத்யோகத்துக்கு போயிருக்கலாமே என்ற ஏக்கம் துளிக்கூட இல்லையா?’ என்று இந்தச் சகோதரிகளிடம் கேட்டதுதான் தாமதம், “ஒரு மருத்துவரின் மகள் மருத்துவராகலாம், தொழிலதிபரின் மகள் அவரைத் தொடர்ந்து தொழிலதிபராகலாம் என்றிருக்கும்போது ஏன் ஒரு விவசாயியின் மகள் விவசாயியாக மாறக் கூடாது? விவசாயிகள் சேத்துல கை வச்சாத்தானே உலகமே சாப்பிட முடியும்? ” என்று கேட்டுவிட்டு மண்வெட்டியை எடுத்துத் தோளில் போட்டுக்கொண்டு புறப்பட்டனர்.

Leave a Response