பெண்கள் பாதுகாப்பை வலியுறுத்த நள்ளிரவில் இந்தியாகேட்டில் திரண்ட பெண்கள்

காஷ்மீர் மாநிலம் கதுவா மாவட்டத்தில் கடந்த ஜனவரியில் ஆசிபா என்ற 8 வயது சிறுமி கூட்டு வன்புணர்ச்சி செய்யப்பட்டு கொலையும் செய்யப்பட்டார். இந்த வழக்கில் கைதாகியுள்ளவரை விடுவிக்க கோரி அம்மாநில பா.ஜ.க மந்திரிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உத்தரபிரதேசம் உன்னாவ் மாவட்டத்தில் ஆளும் பா.ஜ.க வின் சட்டமன்ற உறுப்பினர் குல்தீப் சிங், ஓர் இளம் பெண்ணை பலாத்காரம் செய்ததாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் மீது பாலியல் பலாத்கார புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை காவல்துறையின் பாதுகாப்பில் இருந்தபோது மரணமடைந்தார்.பாஜக சட்டமன்ற உறுப்பினரின் தூண்டுதல் பேரில் காவல்துறையினரே அவரை அடித்துக் கொன்றதாகச் சொல்லப்படுகிறது.

இந்த இரு நிகழ்வுகளும் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இந்த இரு நிகழ்வுகளையும் கண்டித்து காங்கிரஸ் தலைவர் ராகுல், ஏப்ரல் 12 நளளிரவு தில்லி இந்தியா கேட்டில் மெழுவர்த்தி ஏந்தி போராட்டம் நடத்தினார். அவருடன் பிரியங்கா, ராபர்ட் வாத்ரா, மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்களும் கலந்து கொண்டனர்.

அப்போது ராகுல் காந்தி செய்தியாளர்களுக்குப் பேட்டி அளிக்கையில்,

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை. பெண் குழந்தைகளைக் காப்பாற்றுங்கள் என பிரதமர் மோடி கோஷம் எழுப்புகிறார். அது நல்ல கோஷம் தான். வெறும் கோஷம் போட்டால் மட்டும் போதுமா? கீழே இறங்கி வந்து அதைச் செயல்படுத்தி பெண் குழந்தைகள் வன்முறைக்கு எதிராக சட்டங்களை அமல்படுத்த வேண்டும்.

இது அரசியல் பிரச்சினை இல்லை, தேசிய பிரச்சினை. இந்தப் பேரணியில் பல கட்சியினரை நீங்கள் பார்க்க முடியும். பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை உணரவேண்டும் என்றார்.

கட்சி வேறுபாடு கடந்து தில்லி இந்தியாகேட்டில் ஏராளமான பெண்கள் கலந்துகொண்டனர்.

Leave a Response