
இயக்குனர் ஹரி-சூர்யா கூட்டணியில் ஐந்தாவது படமாகவும் ‘சிங்கம்’ வெற்றிப்பட வரிசையில் மூன்றாவது பாகமாகவும் உருவாகி இருக்கும் படம் தான் ‘சி-3’.. அனுஷ்கா உட்பட முதல் பாகத்தில் இடம்பெற்ற பலரும், ஸ்ருதிஹாசன், சூரி உள்ளிட்ட புதியவர்களும் இந்தப்படத்தில் இணைந்துள்ளனர்..
ஹாரிஸ் ஜெயராஜ் இந்தப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப்படம் கடந்த இரண்டு மாதங்களில் எதிர்பாராமல் ஏற்பட்ட சில இயற்கை தடைகளை தாண்டி, வரும் பிப்-9ஆம் தேதி வெளியாக இருக்கிறது.. இதுகுறித்த தகவல்களை பகிர்ந்துகொள்ள நேற்று பத்திரிகையாளர்களை சந்தித்தனர் ‘சி-3’ படக்குழுவினர்.
விழாவில் பேசிய சூர்யா நேற்று முன்தினம் தான் இந்தப்படத்தை என் அம்மாவுக்கு திரையிட்டு காட்டியதாகவும் முதல் இரண்டு பாகங்களின் தீவிர ரசிகரான அவர், அவற்றை விட மூன்றாம் பாகம் இன்னும் சிறப்பாக வந்திருக்கிறது என படம் பார்த்துவிட்டு பாராட்டியதாகவும் பெருமிதத்துடன் பகிர்ந்துகொண்டார்.
உலகெங்கிலும் இந்தப்படத்தை வாங்கி திரையிடுபவர்கள் ரிலீசுக்கு முன்பே லாபம் பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள்.. இப்போதே நூறு கோடி ரூபாய்க்கு மேல் வியாபாரம் முடிந்துவிட்டது. நிச்சயமாக இந்தப்படம் 200 கோடி கிளப்பில் இணைவது உறுதி.. கபாலிக்கு அடுத்த இடத்தை இந்தப்படம் பிடிக்கும் என உறுதியாக நம்புகிறது ஸ்டுடியோகிரீன் வட்டாரம்.


