ஒட்டுமொத்தத் தமிழ்த்திரையுலகம் சார்பில் தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் தலைமையில் தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கம், தென்னிந்திய நடிகர்கள் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனம் உட்பட 12 திரைப்பட அமைப்புகள் இணைந்து ‘கலைஞர் 100’ என்ற முன்னாள் முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதி நூற்றாண்டு விழாவை நடத்தினர்.
சென்னை கிண்டி குதிரைப்பந்தய மைதானத்தில் இந்த விழா சனவரி 6,2024 அன்று நடந்தது.
இந்த விழாவில்,கமல்ஹாசன், ரஜினிகாந்த்,கன்னட நடிகர் சிவராஜ்குமார், சிவகுமார், கார்த்தி, சூர்யா, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோகிணி, பார்த்திபன், ஆர்.ஜே.பாலாஜி, கௌதமி, வடிவேலு, சோனியா அகர்வால், ராய் லட்சுமி, இலட்சுமி மேனன், சாயிஷா, அதிதி சங்கர், இயக்குநர்கள் டி.ராஜேந்தர், ஷங்கர், பா.இரஞ்சித், வெற்றிமாறன், லோகேஷ் கனகராஜ், தங்கர்பச்சான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். ஆந்திர அமைச்சர் மற்றும் முன்னாள் நடிகையுமான ரோஜாவும் கலந்து கொண்டார்.
விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாலை 4.30 மணியளவில் நாட்டுப்புறக் கலைநிகழ்ச்சிகளோடு தொடங்கிய கலைவிழாவில் 100 குழந்தைகள் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய நிகழ்வு நடைபெற்றது. பிறகு வேல்முருகன், ராஜலட்சுமி, செந்தில், டிரம்ஸ் சிவமணி, லிடியன் நாதஸ்வரம் உள்ளிட்டோரின் இசை நிகழ்வுகள் நடைபெற்றன.
இடையிடையே கலைஞர் குறித்த ஆவணப்படங்கள் மற்றும் கே.எஸ் ரவிக்குமார் இயக்கிய நாடகம் போடப்பட்டது.
இந்த விழாவில் பேசிய நடிகர் சூர்யா,
சினிமா மூலம் சமூகத்தில் மாற்றம் கொண்டு வர முடியும் என்ற ட்ரெண்டை உருவாக்கியது கலைஞர்தான். அவர் ஒரு ட்ரெண்ட் செட்டர்.1952 பராசக்தி படத்தில் கைரிச்ஷாவை ஒழிக்க வேண்டும் என்ற வசனம் எழுதியிருப்பார். அதை அப்படியே 17 வருடங்கள் கழித்து ஆட்சிக்கு வந்து உண்மையாக்கிக் காட்டினார் என்றார்.
நடிகர் தனுஷ் பேசியதாவது…
கலைஞர் ஐயா அவர்களின் அரசியல் அல்லது திரை வாழ்வு குறித்துப் பேச எனக்கு வயதோ அல்லது அனுபவமோ இல்லை.
முதன்முதலில் ஒரு பட பூஜைக்காக கலைஞரை வரவேற்கச் சென்றிருந்தேன்.என்னைப் பார்த்ததும், வாங்க மன்மத ராசா என்று அவரை வரவேற்றார். எனக்கு ஆச்சரியம்.அதோடு,அழைப்பிதழைப் பார்த்து விட்டு மொத்தக் கதையையும் சொல்லி விட்டார்.
எந்திரன் படத்தை அவரோடு அமர்ந்து பார்த்தேன்.அவர் ஒரு மாபெரும் கலைஞர் மட்டுமல்ல, சிறந்த இரசிகரும் கூட. ஒரு சிலர் மறைந்து விட்டாலும், அவர்கள் நம்மோடு இருப்பது போல் தான் இருக்கும், அப்படித்தான் எனக்குக் கலைஞரும்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் என்னிடம் பேசும்போது பிரதர் என்று சொன்னார். இத்தகைய எளிய அணுகத்தக்க முதலமைச்சர் கிடைத்ததில் மகிழ்ச்சி என்று கூறினார்.
நடிகர் கமலஹாசன் பேசியதாவது…..
உயிரே உறவே , தமிழே வணக்கம். கலைஞர் மேடைகளில் எப்போதும் நான் ஓரமாகவே நிற்பேன்.
நண்பர் விஜயகாந்த் இறுதி நிகழ்வை நல்ல முறையில் நடத்திஜ் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி. கலைஞரும் தமிழும், கலைஞரும் சினிமாவும், கலைஞரும் அரசியலும் பிரிக்கமுடியாதவை.என்னுடைய தமிழ் ஆசான்களில் முதன்மையானவர் கலைஞர், அடுத்து சிவாஜி, எம்.ஜி.ஆர்.
பாடல்களின் பிடியில் சிக்கியிருந்த தமிழ் சினிமாவை வசனம் நோக்கித் திருப்பியவர் கலைஞர் தான்.
எம்ஜிஆர், சிவாஜி ஆகிய ஆளுமைகளை தன்னுடைய எழுத்தால் உச்ச நட்சத்திரமாக்கியவர் கலைஞர். அவர் தமிழ் சினிமாவிற்கு மட்டும் சொந்தமில்லை என்பதற்கு உதாரணம் அமெரிக்க இயக்குநரான எல்லீஸ் ஆர். டங்கனுக்கு மிகவும் பிடித்தமானவர் கலைஞர்.
நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக எனத் துணிச்சலாகச் சொல்லும் ஒரு தைரியமான தலைவர் அவர் மட்டுமே.
அவரைப் பார்க்கப் போனால் யாராவது இருந்தால் வாய்யா கமல் என்பார், தனியாகச் சென்றால் வா என்று அழைப்பார் அந்தளவு நெருக்கமானவர்.
கலைஞர் எனக்கு அன்பாகச் சூட்டிய “கலைஞானி” என்ற பட்டம் இன்னமும் என்னைத் தொடர்கிறது. தமிழ் சினிமாவில் நீள அகலம் எதுவானாலும்,மக்களுடன் பேசும் ஒரு வாய்ப்பை அவர் விட்டதே இல்லை. இது அவரிடம் இருந்து நான் கற்ற பாடம். அதனால் தான், பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்களிடம் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் என்றார் கமல்.
நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது…..
மு.க.ஸ்டாலின் சாரை எனக்கு 1974 இல் இருந்தே தெரியும். அப்பவே இராயப்பேட்டை வீதிகளில் பொதுக்கூட்டங்களில் அவர் பேசுவதை இரவு முழுவதும் கேட்டிருக்கிறேன். அப்போது இருந்த அதே பேச்சு இப்பவும் அவரிடம் இருக்கிறது. கடினமாக உழைச்சு தற்போது முதலமைச்சராக ஆகியிருக்கிறார்.
எஸ்.பி.முத்துராமன் எப்போதும் கலைஞர் பற்றிப் பேசிக்கொண்டே இருப்பார். அதில்தான் அவரை அதிகமாகத் தெரிந்துகொள்ள முடிந்தது. 1955 இல் மலைக்கள்ளன் படத்துக்கு வசனம் எழுதி வாங்கிய காசில் வாங்கிய வீடுதான் கோபாலபுரம் வீடு. அதில்தான் கடைசி வரைக்கும் கலைஞர் இருந்தார். அந்த வீட்டில் எதையுமே மாற்றவில்லை. ரொம்ப எளிமையாக ஆடம்பரமே இல்லாமல் வாழ்ந்துவிட்டுப் போயிருக்கிறார். அது மாதிரிதான் மு.க.ஸ்டாலினும் ஆடம்பரம் இல்லாம வாழ்கிறார்.
கலைஞர் மட்டும் சினிமா துறையிலேயே இருந்திருந்தால் இன்னும் எத்தனையோ எம்.ஜி.ஆர், சிவாஜிகளை உருவாக்கியிருப்பார். ஆனால் அவரை அரசியல் எடுத்துக்கொண்டு போய்விட்டது. ஒருவருக்கு எழுத்தாற்றல் இருந்தால் பேச்சாற்றல் இருக்காது. ஆனால், கலைஞருக்கு இரண்டுமே கைகூடியிருந்தது.
எழுத்து இல்லை என்று சொன்னால் மதங்கள், புராணங்கள், சரித்திரம், வரலாறு, அறிவியல், விஞ்ஞானம், வர்த்தகம், கதை, கவிதை, அரசாணை, அரசன் எதுவுமே இல்லை.எழுத்து ஓர் இயற்கை சக்தி, அது கலைஞருக்குக் கைகூடி இருந்தது. அவருடைய சில கடிதங்களைப் படித்தால் இன்னமும் கண்ணில் கண்ணீர் வரும்.
முதல் முறையாக நேரடியாக கலைஞரைச் சந்தித்த தருணம் மறக்கவே முடியாதது.என் இத்தாலியன் பியட் காரை எடுத்துக்கொண்டு ஸ்டெல்லா மேரீஸ் காலேஜ் விடும் நேரத்தில் கையில் சிகரெட்டை பிடித்தவாறு நின்றுகொண்டிருந்தேன். அப்போது பின்னாடி திடீரென சில கார்கள் வந்தன. நான் வழி விட்டேன். திடீரென அதில் ஒரு கார் மெதுவாக என் பக்கத்தில் வந்தது. அதன் கண்ணாடி இறங்கியது. யார் எனப் பார்த்தால் உள்ளே கலைஞர் இருந்தார். சிகரெட்டை தூக்கிப் போட்டுவிட்டு பார்த்தால், அவர் கையை அசைத்தவாறு புன்னகைத்தார். அது இன்னும் ஞாபகம் இருக்கு.
அடுத்ததாக நான் படம் பண்ணின ஒரு தயாரிப்பாளர் கலைஞரோட தீவிர இரசிகர். நல்ல நண்பரும் கூட. அந்தத் தயாரிப்பாளர் ஒரு நாள் என்னிடம் வந்து, நம்ம படம் கண்டிப்பா சூப்பர் ஹிட், கலைஞர் நமக்கு வசனம் எழுதுறார்னு சொன்னாரு. அப்போ நான், கலைஞரோட வசனங்கள் கஷ்டமாக இருக்கும். நான் ஏதோ ஒரு மாதிரி தமிழ் பேசிட்டு இருக்கேன். மக்களும் ஒரு மாதிரி அதை ஏத்துக்கிட்டாங்க, கலைஞர் அய்யா எழுதுற வசனம்லாம் நமக்கு வராது என்று சொல்லிவிட்டேன்.
பின்னர் இருவரும் கோபாலபுரம் போய் கலைஞரைப் பார்த்தோம். நானே கலைஞர்க்கிட்ட, ‘உங்க வசனத்தை என்னால பேச முடியாது, கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்’னு சொன்னேன். அதுக்கு அவர் முதலில் அதல்லாம் உனக்கு ஏத்த மாதிரி எழுதிக்கலாம் என்று சொன்னாலும், நான் அடம் பிடித்ததால் தயாரிப்பாளரைக் கூப்பிட்டு, ‘ஷூட்டிங் அடுத்த மாதமாமே. நான் அதுக்கு அடுத்த மாதம்னு நினைச்சேன். நீ வேற யாரையாவது வச்சு வசனம் எழுதிக்கோனு சொல்லிட்டு என்னைப் பார்த்து ஒரு சிரிப்பு சிரிச்சார்.
வழக்கமாக கலைஞர் ஒரு நடிகருடன் படம் பார்ப்பார். அது தேர்தல் நேரம். அப்போது அந்த நடிகர் ஓட்டுப் போட்டு விட்டு வெளியே வந்த போது பத்திரிகையாளர்கள் அவரிடம் யாருக்கு ஓட்டுப் போட்டீர்கள் என்று கேட்க அவர் இரட்டை இலை என்று சொல்லிவிட்டார். அது ட்ரெண்டாகி விட்டது. அன்று மாலை படம் பார்க்கப் போக வேண்டும். ஆனால் எப்படிப் போவது என்று தெரியாமல் குளிர் காய்ச்சல் என்று கூறிவிட்டார் அந்த நடிகர். ஆனால் அவர் எப்படியாவது வர வேண்டும் என்று கலைஞர் கூறிவிட்டார். அதற்குப் பிறகு அந்த தியேட்டருக்கு சென்ற போது வாங்க காய்ச்சல்னு சொன்னீங்களாமே, வாங்க வந்து சூரியன் பக்கத்துல வந்து உக்காருங்க என்று கூறினார் கலைஞர். அந்த நடிகர் நான்தான் என்றார் ரஜினிகாந்த்.
விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்….
நான் உரையாற்ற வரவில்லை, நன்றி கூற வந்திருக்கிறேன், அனைவருக்கும் நன்றி. இங்கு முதலமைச்சர் அல்லது திமுக தலைவராக அல்ல, கலைஞரின் மகனாக நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.
திரைப்படத்துறைக்காக இந்த அரசு பல்வேறு நலத்திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. அந்த வரிசையில் இப்போது, நான்கு படப்பிடிப்புத் தளங்களோடு எம்ஜிஆர் ஃபிலிம் சிட்டி 25 கோடி செலவில் புனரமைக்கப்படும்.அதோடு, பூந்தமல்லியில் 140 ஏக்கர் பரப்பளவில் 500 கோடி செலவில் திரைப்பட நகரம் அமைக்கப்பட உள்ளது.அதில் எல்இடி வால், அனிமேஷன், விஎப்எக்ஸ், போஸ்ட் மற்றும் ப்ரீ ப்ரொடக்ஷன் வசதிகள், 5 நட்சத்திர விடுதிகள் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
விழாவில் ‘கலைஞர் சிறப்பு கலை மலர் வெளியிடப்பட்டது.