அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார் வாய்ச்சவடால் மோடி – திருமாவளவன் கடுங்கோபம்

பிரதமர் மோடியின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் பொதுமக்களை அவமானப்படுத்தும் மத்திய அரசைக் கண்டித்து விசிக சார்பில் நவ.18-ம் தேதி சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 500, ரூபாய் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த நாளிலிருந்து ஏழை எளிய மக்கள் சொல்லவொண்ணா துன்பத்துக்கு ஆளாகி வருகின்றனர். மோடி அரசின் சர்வாதிகார அறிவிப்பால் இதுவரை இருபத்தைந்து பேர் உயிரிழந்துள்ளனர். தமது குழந்தைகளுக்கு உணவு தர முடியவில்லையே என்ற கவலையில் பெண்கள் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்காக வரிசையில் நின்ற முதியவர்கள் அங்கேயே மயங்கிவிழுந்து உயிரிழந்துள்ளனர்.

ஏடிஎம்கள் செயல்படவில்லை; வங்கிகளிலும் பணம் இல்லை. தமது சொந்தப் பணத்தை எடுக்க முடியாமல் பொதுமக்கள் அல்லல்படுகின்றனர். பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் தன் உயிருக்கு ஆபத்து என நாடகமாடுகிறார் பிரதமர் மோடி.

கறுப்புப் பணம் வைத்திருப்பவர்கள் அந்தப் பணத்தையெல்லாம் வெளிநாட்டு வங்கிகளில் பாதுகாப்பாக வைத்திருக்கிறார்கள் என்றும் அதை மீட்டு ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் கணக்கிலும் பதினைந்து லட்ச ரூபாய் டெபாசிட் செய்வேன் என்றும் வாய்ச்சவடால் அடித்த பிரதமர் மோடி இப்போது அன்றாடங்காய்ச்சிகளின் வயிற்றில் அடித்திருக்கிறார். தனது சொந்தப் பணத்தை எடுப்பதற்காக வங்கிகளுக்குச் செல்பவர்களுக்கு கை விரலில் மை வைக்கப்படும் என்ற புதிய அறிவிப்பை இப்போது மோடி அரசு வெளியிட்டிருக்கிறது.

சட்டத்தை மதிக்கும் மக்களை இதைவிட மோசமாக எவரும் அவமானப்படுத்தமுடியாது. இதை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. ரூபாய் நோட்டுகளை செல்லாமல் ஆக்குவதால் கறுப்புப் பணத்தை ஒழிக்க முடியாது என்பதைப் பொருளாதார நிபுணர்கள் தெளிவாகக் கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி இப்படி அறிவிக்கப்போகிறோம் என்பதை தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் வெளிப்படுத்தி இந்த அறிவிப்பில் மிகப்பெரிய ஊழல் செய்திருக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டும் மோடி அரசு மீது இப்போது எழுந்துள்ளது.

* பொதுமக்களுக்கு எதிரான இந்த அறிவிப்பை உடனடியாகத் திரும்பப்பெற வேண்டும்.

* வழக்கம்போல 500,1000 ரூபாய் நோட்டுகளைப் பயன்படுத்த பொதுமக்களை அனுமதிக்கவேண்டும்.

* பொதுமக்களுக்கு இன்னல் உண்டாக்கிய ரிசர்வ் வங்கி ஆளுநர் இதற்குப் பொறுப்பேற்று உடனடியாகப் பதவி விலகவேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி எதிர்வரும் 18 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை சென்னையில் எனது தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்” என்று திருமாவளவன் கூறியுள்ளார்.

Leave a Response