மண்ணின் மைந்தர்களுக்கு முன்னுரிமை கேட்டு நாம் தமிழர் கட்சி போராட்டம்

சென்னை திருவொற்றியூரை அடுத்த மணலி பகுதியில் மத்திய, மாநில அரசுகளுக்கு சொந்தமான 50–க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. அங்கு ஒப்பந்த அடிப்படையில் ஆயிரக்கணக்கான வட மாநிலத்தினர் வேலை செய்து வருகின்றனர்.

அந்தத் தொழிற்சாலைகள் வேலைவாய்ப்பில் மணலி, சின்னசேக்காடு பகுதியை சேர்ந்த இளைஞர்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மணலி மார்க்கெட் பகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நிலத்தை இழந்தது நாங்கள், காற்று மாசு, நீர் மாசு ஆகியனவற்றால் பாதிக்கப்படுவது நாங்கள், வேலைவாய்ப்புகள் மட்டும் பிற மாநிலத்தவர்க்கு வழங்கப்படுகிறது, மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை கோரி பலமுறை கோரிக்கைகள் வைத்தும் அவை கவனிக்கப்படவில்லை எனவே போராட்டத்தில் இறங்கியிருக்கிறோம் என்று சொல்கிறார்கள்.

திருவள்ளூர் மாவட்ட செயலாளர் கோகுல் தலைமையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டு தொழிற்சாலை வேலை வாய்ப்புகளில் உள்ளூர் இளைஞர்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்கள் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என முழக்கங்களை எழுப்பினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாநில ஒருங்கிணைப்பாளர் அன்பு தென்னரசன், மணலி நகர செயலாளர் அன்பு சின்னசேக்காடு உள்பட நூற்றுக்கணக்கானோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Leave a Response