ஈஷாவின் அதிகார லிங்கம் அடங்கி ஒடுங்கட்டும் – வழக்கறிஞர் மு.ஆனந்தன் ஆவேசம்

வழக்கறிஞரும் சமூக செயற்பாட்டாளருமான மு.ஆனந்தன், ஈஷா மையத்தின் நில ஆக்கிரமிப்பும் அதற்கெதிரான மக்கள் போராட்டங்களைப் பற்றியும் எழுதியுள்ள கட்டுரை.

“ நிலம் வேணும்னு ஏன் கவர்மெண்டுகிட்ட கேட்கறீங்க. எங்க சாமிகிட்ட கேளுங்க. எங்க சாமி உங்களுக்கு எல்லாம் செய்து தருவாறுன்னு ஈஷாகாரங்க சொன்னாங்க. அதுக்கு உங்க சாமி என்ன கவர்மெண்ட்டான்னு கேட்டோம். நாங்க வெகு காலமா புழங்கிட்டு இருக்கிற புறம்போக்கு நிலத்தை ஈஷாகாரங்க புடுங்கறாங்க, எங்களுக்கு பட்டா போட்டுதர கலெட்டர்கிட்ட நடையா நடக்கிறோம். எங்களுக்காக பாடு பட்டுகிட்டு இருந்த சிவா மேல எங்க சமூக பெண்ணையே வச்சு ஈஷா பொய் கேஸ் போட்டு ஜெயில்ல வச்சிருக்கு.” என உணர்ச்சிகளின் நுணி விரல் பிடித்து பழங்குடி சமுகத்தின் வெள்ளந்தி மொழியில் பேசினாள் முட்டத்துவயல் முத்தம்மாள். சமூக செயல்பாட்டாளர் சிவாவின் கைதுக்கு எதிரான ஆர்பாட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தின் இருளும் வறுமையும் தோய்ந்த முகடுகளிலிருந்து கோவையின் நெரிசல் பயணிக்கும் சாலையில் திரண்டு முழக்கங்கள் எழுப்பி கைதாகி போலீஸ் வேனில் தீரத்துடன் ஏறிய முட்டத்துவயல், முல்லாங்காடு, குளத்தேரி ஆதிவாசி கிராமங்களைச் சேர்ந்த ஒரு நூறு பழக்குடிப் பெண்களின் உறுதியினூடே அலைபாய்ந்த அதிர்வும், ஆவேசமும் ஆத்திரமும் ஈஷா யோகா மையத்தின் பணம் , அரசியல், அதிகார, ஆள் பலங்களை விட சக்திமிக்கதாய் மிதந்து பொதுவெளியில் கலந்தது.

மூளைச் சலவை, பெண்களுக்கு மொட்டையடித்து சந்நியாசம், மாணவர்கள் சித்திரவதை, போதைப்பொருள்கள், பண மோசடி, காணுயிர் பாதைகள், நீராதரங்கள் ஆக்கிரமிப்பு, சட்ட விரோத கட்டுமானங்கள், மர்ம மரணங்கள் என அடிக்கடி பூப்பல்லக்கில் திருவீதி உலாவரும் சத்குரு ஜக்கி வாசுதேவ்வின் ஈஷா யோக மையத்தின் மற்றுமொரு அருள் பாலிக்கும் கொடிய முகத்தை தரிசிக்கும் ப்ராப்தம் தற்போது உபரி நில ஆக்கிரமிப்பு பிரட்சனையால் பக்த கோடிகளுக்கு கிடைத்துள்ளது.
அனைத்திற்கும் ஆசைப்படு ! மனதை சாந்தமாய் வைத்துக்கொள் ! தியாணம் செய் ! என கூடங்கள் தோறும் வேதங்கள் ஓதுகிற ஈஷா, தனக்காய் ஊர்கள் தோறும் குவித்து வைத்துள்ள 1000 ஏக்கர் நிலம் போதாதென பழங்குடி மற்றும் பட்டியலின மக்களுக்காய் நேர்ந்து விடப்பட்டுள்ள உபரி நிலத்தை ஸ்வாகா செய்யப்பார்க்கிறது. கோவை, இக்கரை போளுவாம்பட்டி கிராமத்தில் க.ச.எண்.1077/1B, 1080/2, 1081/1C2, 1081/4A2 ஆகிய புல எண்களில் உள்ள அமெரிக்கா கவுண்டர் என்கிற V.K.முத்துசாமி கவுண்டர் என்பவருக்கு சொந்தமான 44.30 ஏக்கர் நிலம் நில உச்சவரம்பு சட்டப்படி உபரி நிலமாக அறிவிக்கபட்டு 1992 ல் 46 பேருக்கு ஒப்படை செய்யப்பட்டது. அவர்கள் உரிய தொகை செலுத்தாததால் ஏன் அந்த ஒப்படைவை ரத்து செய்யக்கூடாதென 30.10.2006ல் நில சீர்திருத்த உதவி ஆணையாளர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இந்த நிலத்தைத் தான் தங்களுக்கு மறு ஒப்படை செய்யவேண்டுமென அமெரிக்க கவுண்டர் காலத்திலிருந்தே அதில் விவசாயக்கூலிகளாக பணியாற்றி அதனை அனுபவித்துவரும் அம்மக்கள் கோருகிறார்கள்.

அவர்களுக்கு ஆதரவாக 2007 ல் வினோபா பாவாஜி தேசிய வேளாண் வளர்ச்சி இயக்கத்தின் M.இராஜேஸ்குமார் என்பவரின் மனுக்களால் இது குறித்து விசாரிக்கும்படி நில சீர்திருத்த உதவி ஆணையாளர் 21.01.2008 அன்று உத்திரவிட்டார். அதன்பின் சில நாட்களில் இராஜேஸ்குமாரின் சடலம் ஈசா யோக நிறுவனத்தின் அருகில் நீலியாறு அணைக்கட்டில் 25.01.2008 நித்திரை யோகாசன நிலையில் மிதந்து கொண்டிருந்தது. இந்த மர்மக் கொலை ஆலாந்துறை காவல் நிலையத்தில் குற்ற எண். 26/2008 கோப்புகளில் துப்புக் கெட்டுக்கிடக்கிறது. கொலையுண்ட அவரின் சடலத்தில் மிதந்தலைந்து உயிர்பிழைத்த தகவல்களின் அடிப்படையில், 2013 ல் விவசாயிகள் சங்க தலைவர் ஓதிசாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கின் (WP.No.18918/2013) தீர்ப்புப்படி, இத்தாவா தற்போது கோவை கோட்டாச்சியர் விசாரணையில் உள்ளது. நில சீர்திருத்த ஆணையாளரிடம் ஒரு மேல்முறையீடு வழக்கும் நிலுவையில் உள்ளது.

ஓரு பக்கம் கோட்டாச்சியர் முன்பாக சாத்வீகம் பேசிய சத்குரு ஜக்கி வாசுதேவும் அவரது சீடர்களும் மறுபக்கம் போலி ஆவணங்களை ப்ரண பிரதிஷ்டை செய்து அந்த நிலத்தில் இரும்பு வேலிகளையும் மாட்டுக் கொட்டகைகளையும் எழுந்தருள வைத்தனர். இதை ஆக்கிரமிப்பு என்று சொல்லக்கூடாது. அபச்சாரம்.. அபச்சாரம். தெய்வக் குற்றமாகிவிடும். இந்த சமயத்தில்தான் ஜக்கியின் சீடர்கள் அம்மக்களிடம் எதுக்கு கவர்மெண்டுகிட்ட போறீங்க. எங்க சாமிகிட்ட கேளுக்க. எங்க சாமி எல்லாம் செய்து தருவாரு என்று மூளைச் சலவை செய்ய முயற்சித்தனர். ஆனால் சாணியை வாரி முகத்தில் அடித்தாற்போல் உங்க சாமி என்ன கவர்மெண்ட்டா என கேட்டுவிட்டு, ஆக்கிரமிப்புகளை எதிர்த்து 30.09.2016 அன்று முல்லாங்காடு வனச்சோதனைச் சாவடி அருகில் மறியல் போராட்டம், காவல்துறை, மாவட்ட ஆட்சியரிடம் புகார்கள் என அம்மக்கள் எதிர்விணையாற்றினார்கள். கோட்டாச்சியர் அலுவலகத்தில் 03.10.2016 அன்று நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் அம்மக்கள் சார்பில் கலந்து கொண்ட சிவாவை ஈஷாவின் துறவிகள் ஆயுதங்களைக்காட்டி மிரட்டினார்கள். அவர் ஈஷா தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக 12.10.2016 அன்று புகார் அளித்துள்ளார். ஆனால் ஆட்சியதிகாரம் யாருக்கு பணிவிடை புரியும். ஈஷாவின் தீட்சதை பெற்ற ஆலந்துறை போலிஸ் 15.10.2016 அன்றய முகூர்த்தத்தில் பொய்ப் புகாரில் சிவாவை கைது செய்து தனது விசுவாசப் புஷ்பங்களால் ஜக்கியின் திருப்பாதங்களை அபிஷேகம் செய்தது.

சிவாவின் கைது போராட்ட அக்னி குண்டத்தில் நெய் வார்த்தது. முதலில் சிவா யார் என்று சொல்லாமல் இப்பிரட்சனையின் யாத்திரையை சொல்லமுடியாது. 2015 வரை “நவீன நெற்றிக்கண்” வார இதழில் நிரூபராக பணியாற்றியவர். தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி அரசின் பல்வேறு முறைகேடுகள், கோவை மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் தனியர் நிறுவனங்கள் ஆக்கிரமித்துள்ள நொய்யல் நீராதாரங்கள், வன நிலங்கள், காணுயிர் வலசைப்பாதைகள், சட்ட விரோத கட்டுமானங்கள் அதன் பாதிப்புகள், மனித-வனவிலங்கு மோதல்கள் குறித்த ஆவணைங்களை திரட்டி பொது வெளியின் செங்குத்துப் பார்வைக்கு படைத்துள்ளார். இவருடைய “நொய்யல் அன்றும் என்றும்” என்ற நூலும் ஆவணப்படமும் நம் கண் பரப்பின் விரிப்புகளுக்குள் எப்படி நொய்யலின் நீர்மையும் மேற்கு மலைத் தொடர்ச்சியின் பச்சையமும் பல்லுயிரும் சூறையாடப்படுகிறது என்பதைக் காட்சிப்படுத்தும் முக்கிய சான்றாவனம்.
இவரும் சமூக ஆர்வலர்கள் பலரும் சேகரித்த ஆவணங்களின் அடிப்படையில் பல்வேறு அமைப்புகளின் போராட்டத்தின் பயனாக ஆலந்துறை இண்டஸ் பொறியியல் கல்லூரி மற்றும் பூலுவபட்டி செலிபிரட்டி கேளிக்கை விடுதி ஆகியவற்றின் சட்ட விரோத கட்டிடங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. நஞ்சுண்டாபுரத்தில் அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் நீண்ட மதில் சுவரும் நரசிபுரம் சீனிவாசன் சொகுசு பங்களாவும் இடிக்கப்பட்டது. காருண்யா பல்கலைக்கழகம் நீர் வழித்தடங்களை மறிக்கும் முயற்சியும் நல்லூர்பதி பழங்குடி மக்களின் சடையாண்டி கோவில் வழித்தடத்தை அபகரிக்கும் முயற்சியும் தடுக்கப்பட்டது. நீரோடையின் மீது கட்டப்பட்டுள்ள அதன் கட்டிடங்கள் கண்டறியப்பட்டு அது தொடர்பான வழக்கு தற்போது சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. நகர் ஊரமைப்பு துறை ஈசாவின் சட்ட விரோத கட்டுமானங்கள் மீது மூடி முத்திரையிடும் உத்தரவும் இடிக்கும் உத்தரவும் பிறப்பித்தது. அரசு உத்தரவினையும் மீறி சட்டவிரோத கட்டுமானங்களை ஈஷா எழுப்பி வருகிறது. அதற்கு எதிரான வழக்கு உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. அதன் உறைவிடப்பள்ளி மாணவர்கள் சித்திரவதை தொடர்பான புகார் மாநில குழந்தைகள் ஆணையத்தின் விசாரனையில் உள்ளது. ஈஷாவின் தீர்த்த குண்டத்திலும் சூரிய குண்டத்திலும் நீராடினால் நொய்யலின் நீர் வழித்தடமும் காணுயிர் வலசைகளும் துடித்தடங்கியிருப்பதை உணர முடியும்.

ஈஷாவிற்கு எதிராகப் போராடிய பலர் திடீரென காணமல் போயுள்ளார்கள். மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். அதன் நீட்சிதான் சிவாவின் கைது. இதுதான் ஈஷாவின் பிரட்சனைகளை முடக்குகிற பாணி. கூடுதலாய் மதவாத மத்திய அரசின் ஊக்கத்தில் ஈஷாவும் ஈஷாவிற்காக வேர்த்து விறுவிறுத்து ஓடிவரும் இந்துத்துவா கும்பல்களும் போராடக்கூடிய மக்களையும் இயக்கங்களையும் மாவோயிஸ்டுகளென முத்திரை குத்தும் புதிய ஆயுதத்தை எய்துகின்றன. மனு கொடுக்கச் சென்றவர்களை மாவட்ட ஆட்சியர் நீங்களெல்லாம் நக்ஸலைட் இயக்கத்தைச் சார்ந்தவர்களா எனக்கேட்டுள்ளார். சிவாவின் ஜாமீன் மனு மாவட்ட நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்த போது ஈஷாவின் பக்தர் என்று சொல்லிக்கொண்டு வழக்கிற்கு தொடர்பில்லாத ஒருவர், சிவா மாவோயிஸ்டுகளுடன் தொடர்புடையவர், எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது என ஆட்சேபனை மனு தாக்கல் செய்தார். இதிலிருந்து இவர்களின் அஜண்டாவை தியாணம் புரியாமலேயே உணரலாம்.

சிவாவின் கைதின் மூலம் போராடுபவர்களை அச்சுறுத்துகிற பிரச்சினையை திசை திருப்புகிற ஈஷாவின் மார்க்கம் இம்முறை கைகூட வில்லை. சிவா ஜாமீனில் நேற்று ( 26.10.2016 ) விடுதலையான போது சிறைவாசலின் இரவில் அந்தப் பழங்குடி பெண்களும் ஜனநாயக மற்றும் தலித் இயக்கங்களைச் சார்ந்தவர்களும் பெருந்திரளாக அவரை வரவேற்றனர். இது தனி நபருக்கான வரவேற்பு அல்ல. ஈஷாவிற்கு எதிரான போராட்ட சக்திகள் அதன் கிரிவலப்பாதையில் ஒன்றிணைந்து களமாடுவதற்கான துவக்கம். பழங்குடி மக்களையும் பட்டியலின மக்களையும் எதிரெதிராக நிறுத்தி சண்டை மூட்டும் ஈஷாவின் யோகாவை முறியடித்து ஓரணியில் அவர்கள் திரண்டுள்ளனர். சிவாவின் கைதுக்கு எதிராகவும் நில உரிமைக்காகவும் நடத்தேறிய பல்வேறு ஆர்பாட்டங்களிலும் இயக்கங்களிலும் சுழித்தோடும் நதிபோல் பாய்கிறார்கள் அம்மக்கள். ஈஷாவின் சதியாட்டங்களை உரக்கப் பேசுகிறார்கள். நிலத்தை மீட்கும் வரை ஓயமாட்டோமென ஓங்கி ஒலிக்கிறார்கள். அந்த ஒலியலைகள் உங்கள் செவிப்பரப்பில் ஊடுறுவுகிறதா ? எனில் நீங்களும் குரல் கொடுங்கள். உங்கள் குரலின் அதிர்வின் சூரசம்ஹாரத்தில் ஈஷாவின் பாதரச அதிகார லிங்கம் அடங்கி ஒடுங்கட்டும்.

Leave a Response