இந்திய ரயில்வேயின் நான்காம் நிலை வேலைகளும் மொழி அரசியலின் பொருண்மிய அடிப்படையும்- செ.ச.செந்தில்நாதன்

கடந்த மாதம் மதுரையில் ஊடகம் தொடர்பாக நடந்த ஒரு நிகழ்வில் நண்பர்கள் நீயா நானா ஆண்டனி, இதழாளர் கடற்கரய் ஆகியோருடன் கலநதுகொண்டேன். மறுநாள் நானும் கடற்கரயும் தொடர்வண்டியில் சென்னைக்குத் திரும்பினோம். வரும்வழியில், திருச்சி சந்திப்பில் மிகப் பெரிய இளைஞர் கூட்டம் ஒன்று வண்டியில் ஏறியது. எல்லோரும் வட நாட்டு இளைஞர்கள். நிலையத்தில் சுமார் 2000க்கும் மேற்பட்ட இளைஞர்கள் குழுமியிருந்திருப்பார்கள். அவர்களில் ஒரு பிரிவினர் இதில் ஏறினார்கள்.

அவர்களுடைய உடைகளும் தோற்றமும் சமூகத்தின் மிகவும் பின்தங்கிய பிரிவிலிருந்து அவர் வந்திருப்பதைக் காட்டியது. தென்னக ரயில்வே துறையின் கீழ்நிலை வேலைகளுக்கு விண்ணப்பித்திருந்த அவர்கள் தேர்வெழுதுவதற்காகத் திருச்சிக்கு வந்திருக்கிறார்கள். அவர்களில் சிலர் பெட்டியில் ஏறி அமர்ந்தவுடன் கேள்வித்தாள்களைப் பிரித்து பேசிக்கொண்டே வந்தார்கள். ரயில்வே தேர்வு வழிகாட்டி நூல்களைப் பிரித்து விடைகளை சரியாக எழுதியிருக்கிறோமோ என சரிபார்த்தார்கள்.

தேர்வெழுதவந்தவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த அந்த கேள்வித்தாள்கள் முழுக்க முழுக்க ஆங்கிலத்திலும் இந்தியிலும் இருந்தது. ரயில்வே தேர்வுகள் பலவற்றை மாநில மொழிகளிலும் எழுதலாம் என்று மமதா பானர்ஜியின் காலத்தில் ஒரு முடிவு எடுக்கப்ட்டது என்றாலும் அது நடைமுறைப்படுத்தப்பட்டதா என்று தெரியவில்லை. இந்தி இளைஞர்களுக்கு ஆங்கிலம்-இந்தி என்றும் தமிழ் இளைஞர்களுக்கு ஆங்கிலம்-தமிழ் என கேள்வித்தாள்கள் அளிக்கப்பட்டனவா என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிந்தது: இந்த இந்திப் பகுதி இளைஞர்கள் இதுபோன்ற கீழ்நிலைப் பணிகளுக்காக இந்தியாவில் எங்கு தேர்வு நடந்தாலும் அங்கே போவார்கள் என்பது தெரிந்தது.

மத்திய அரசு நிறுவனங்களின் தேர்வுகளில் கீழ்நிலைப் பணிகளில் மட்டுமல்ல, இடை நிலைப் பணிகளிலும்கூட இப்போது வட இந்தியர்களே அதிகம் இடம்பெறுகிறார்கள். (உயர்நிலைப் பணிகள் குறி்தது சொல்லவே வேண்டியதில்லை). வங்கித் துறை சார்ந்த ஒரு நண்பர் சமீபத்தில் என்னிடம் கூறியபடி, இப்போது தமிழக வங்கிப் பணிகளில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா மாநிலத்தவர்களைக்கூட அதிகம் பார்க்கமுடியவில்லை, எல்லோரும் வடக்கிலிருந்தே வருகிறார்கள்.

தமிழகத்தில் மத்திய அரசு வேலைகளுக்கு விண்ணப்பிப்போரின் சதவீதம் குறைந்துவிட்டது என்று இதற்கு அர்த்தமில்லை என்றார் அவர். இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். முன்பெல்லாம் படிப்பில் “கெட்டிக்காரர்கள்” மத்திய அரசு வேலைகளுக்கு விண்ணப்பம் செய்வார்கள். இப்போது அவர்கள் ஐடி போன்ற துறைகளுக்கு நகர்ந்துவிட்டார்கள். எனவே இரண்டாம், அல்லது மூன்றாம் நிலை மாணவர்கள்தான் போட்டித்தேர்வுகளுக்கு வருகிறார்கள். இவர்களுக்கு ஆங்கிலம் பெரிய சிக்கல். ஆனால் இதே படிப்பறிவு நிலையிலிருந்து விண்ணப்பிக்கும் இந்திக்காரர்களுக்கோ அந்த சிக்கல் இல்லை. காரணம் அவர்கள் எல்லாத் தேர்வுகளையும் இந்தியிலேயே எழுதமுடியும்.

இந்த வித்தியாசம் இந்திய நி்ர்வாகத்துறையில் தென்னிந்தியர்களுக்கு எதிரான ஒரு சூழலை வெகுவேகமாக உருவாக்கிவருகிறது. இந்திய ஆட்சித்துறையே மெல்லமெல்ல வட இந்தியர்களுக்கு மட்டுமேயான துறையாக மாற்றுகிறது. (இவை குறித்து பெரிய புள்ளிவிவரங்களை கைவசம் இல்லை என்றாலும், தனிப்பட்ட முறையில் பலருடைய அவதானிப்புகளையும் பார்வைகளையும் மட்டுமே தொகுத்து அளிக்கவேண்டிய நிலையில் இருக்கிறோம். ஆனால் இந்த கருத்தை மறுக்கும் நிரூபணங்களும் தென்படவிலலை.) ஆக, இது குறித்து காத்திரமான ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டிய தருணத்தில்தான் நாம் இருக்கிறோம்.

தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் நெடுங்காலமாக பின்பற்றப்படும் சமூகக் கொள்கைகளால் பிறப்புவீதம் குறைந்து மக்கள்தொகை கட்டுப்படுத்தப்பட்டிருப்பதும், வடக்கு மாநிலங்களிலும் கிழக்கு மாநிலங்களிலும் மக்கள் தொகை பெருக்கம் அதே அளவிலான வீதத்துக்கு கட்டுப்படுத்தப்படாமலிருப்பதும் ஒரு மிகப்பெரிய சமனற்றத் தன்மையை இந்தியாவில் உருவாக்கிவருகிறது. இது இந்தியாவின் மக்கள்-புவியியல் சூழலை (demographic environement) மாற்றியிருக்கிறது. இந்தியாவின் தொழிலாளர் புலம்பெயர்ச்சி எந்த திசையை நோக்கி எவ்வளவு வேகத்தில் நடைபெறும் என்பது குறித்து இப்போது ஆய்வாளர்கள் யோசி்க்க ஆரம்பித்திருக்கிறார்கள்.

 

இந்தப் போக்கை பத்தாண்டுகளுக்கு முன்பே நம்மால் பார்க்கமுடிந்தது. சீனா, மேற்கு ஆசிய நாடுகளில் காணப்பட்டதுபோல முதலில் கட்டுமானத்துறையிலும் உடலுழைப்புத் துறையிலும்தான் தொழிலாளர்கள் புலம்பெயர்வது தொடங்கியது. திறன்சாரா அல்லது பாதி-திறன் வேலைவாய்ப்புகளில் (unskilled and semi-skilled) இவை தொடங்கின. பேரளவுக்கு வடக்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் தொழிலாளர்கள் தென்னகத்துக்கு புலம்பெயர்ந்திருப்பது இந்த அடிப்படையில்தான்.

இப்போது இதே போக்கு திறன்சார்ந்த, தொழில்முறைசார்ந்த (skilled and professional) வேலைவாய்ப்புகளிலும் நடக்கத் தொடங்கியிருக்கிறதா என்பதை ஆராய்ந்து பார்க்கவேண்டியிருக்கிறது.

திருச்சியில் உள்ள ரயில்வே வேலைக்கு பிஹாரிலிருந்து ஒருவர் வருவார் என்றால் தொழிலாளர்கள் புலப்பெயர்ச்சியின் அடுத்த கட்டத்துக்கு நாம் நகர்ந்திருக்கிறோம் என்பது தெளிவாகிறது.

தொழிலாளர் புலப்பெயர்ச்சியை நாம் எப்படி அணுகுவது? முதலி்ல் திறன்சாரா தொழிலாளர்களின் கதையை எடுத்து்ககொள்வோம்.

இங்கே ஒரு விஷயத்தை தெளிவாக நான் கூறவேண்டியிருக்கிறது. புலம்பெயர்வதே தவறல்ல. தொழிலாளர்கள் புலம்பெயர்வதும் வேறு இடங்களுக்கு வேலை தேடி போவதும் பிரச்சினை அல்ல. அது உலக நியதிதான். தமிழர்கள் அப்படித்தான் உலகெங்கும் பணிபுரியச் சென்றிருக்கிறார்கள்.

ஆனால் உள்ளூர் வேலைவாய்ப்புச் சந்தையில் அதன் தாக்கம் ஒரு குறிப்பிட்ட வரம்பை மீறும்போது அது வேறுவிதமான ஆபத்தைக் கொண்டுவருகிறது. அதாவது உள்ளூர் வேலைவாய்ப்பை உள்ளூர் மக்களிடமிருந்து தட்டிப்பறிக்கும் நிலைக்கு காரணமாக ஆகிறது.

தொழிலாளர் புலப்பெயர்வு, சிங்கப்பூர், கனடா, துபாய் போன்ற நாடுகளில் இருப்பதுபோல உள்ளூர் தேவையை (labour market demand) காரணமாக கொண்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ள்ககூடியதே. அதாவது அந்த நாடுகளில் வேலைவாய்ப்பு அதிகம், ஆனால் வேலை செய்ய உள்ளூரில் ஆள் கிடைக்காது. எனவே நமக்கு வேலை தருகிறார்கள்.

ஆனால் இங்கே நிலைமை வேறு: உளளூர் முதலாளிகளின் கட்டற்ற சுரண்டலை மட்டுமே மையப்படுத்தி இந்தப் புலப்பெயர்வு நடக்கிறது. வேலைநேரம், உழைப்பு அளவு, சம்பளம் ஆகியவற்றில் உள்ளூர் தொழிலாளியை வேலைக்கெடுப்பதைவிட புலம்பெயர் தொழிலாளியை எடுத்தால் குறைந்தது இரண்டு, மூன்று மடங்கு லாபம்!

இப்போது நாம் ஒரு பெரிய சிக்கலை எதிர்நோக்குகிறோம். பிறப்புவீதம், சமூகச் சூழல், வாழ்க்கை வசதி ஆகியவற்றில் ஏற்றத்தாழ்வாக இருக்கும் இந்தியாவில் இது ஒரு இனப்பிரச்சினையாகவும் உருவெடுக்கலாம் என்பதை அசாமிலும் மகாராஷ்டிராவிலும் பார்த்திருக்கிறோம். உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பைப் பறித்து, லாபத்தை மட்டுமே கருதி, முதலாளிகள் வெளியூர் மக்களுக்கு அளிக்கிறார்கள். குறைந்த சம்பளத்தில் நிறைய உழைப்பு என்கிற சுரண்டலுக்கானதாக மட்டுமே இது பெரிய அளவுக்கு நிலவுகிறது என்பதை சென்னையில் ஒரு தேநீ்ர்க் கடையில்கூட நீங்கள் பார்க்கமுடியும்.

ஆனால் இந்த நிலைமைக்கு காரணம் அந்த “வந்தேறிகள்” அல்ல, “வெளியார்கள்” அல்ல. மாறாக ஈவிரக்கமற்ற உள்ளூர் முதலாளிகள்தான் என்பதையும் பார்க்கத்தவறக்கூடாது.

அதே சமயம், திறன்சாரா தொழிலாளர்கள் விஷயத்தில், குறிப்பாக மத்திய அரசு வேலைகளில், இந்த புலப்பெயர்வு எப்படியானதாக இருக்கிறது?

இதில் சில புதிய அவதானிப்புகளை தரலாம் என யோசிக்கிறேன். கவனமாக படித்து நீங்களும் உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்:

இந்தியாவில் இது தெளிவாகவே (வடக்கு+கிழக்கு) vs (தெற்கு+மேற்கு) முரணாக உருவெடுத்துவருகிறது.

1. திறன்சாரா வேலைகளைப் பொறுத்தவரை வடகிழக்கிலும், வடக்கு-கிழக்கிலும் உள்ள சூழல் மக்களை துரத்தியடிக்க, மேட்டிலிருந்து பள்ளத்தை நோக்கி நீர் பாய்வதைப் போல, அவர்கள் தெற்கை நோக்கி ஓடிவருகிறார்கள்.

2. திறன்சார் வேலைகளைப் பொறுத்தவரை மேற்சொன்ன பிரதேசம் இரண்டாக உடைந்து நிற்கிறது. உத்தரப் பிரதேசம். உத்தராகண்ட், பிஹார் மாநிலங்களில் புதிய நடுத்தரவர்க்கத்தின் பிரதிநிதிகள் வேலைக்காக தென்னிந்தியாவை நோக்கி வேகமாக படையெடுக்கிறது. ஆனால் மத்தியப் பிரதேசம். சத்தீஸ்கர், ஜார்கண்ட், ஹரியானா, இமாச்சலப் பிரதேசம் போன்றவை இந்த பந்தயத்தில் இருப்பதாகத் தெரியவில்லை.

 

சில மாதங்களுக்கு முன்பு யுபிஎஸ்சி தேர்வில் ஆங்கிலம் இருக்கக்கூடாது என வட இந்தியாவில் நடந்தப் போராட்டத்தை நினைவில்கொள்க. இவர்கள்தான் அந்த புதிய, சிறுநகர்ப்புற (மெட்ரோக்களுக்கு அப்பால்) இந்தி பேசும் புதிய நடுத்தரவர்க்கம்.

இவர்களின் அபிலாஷையை பிரதிநித்துவப்படுத்தும் மிகப் பெரிய கட்சியாக இன்று பாஜக உருவாகியிருக்கிறது. இவர்களைத்தான் ஆம் ஆத்மியும் குறிவைத்தது. இந்த புதிய இந்திபேசும் நடுத்தரவர்க்கம் இந்தியா முழுவதிலும் உருவாகும் இடைநிலை வேலைவாய்ப்புகளை குறிவைத்து நகர்கிறது.

இது குறித்து என்னிடம் நேரடி புள்ளிவிவரம் இல்லை. ஆனால் வேறு ஒரு அவதானிப்பிலிருந்து இதை நான் உறுதியாகசொல்கிறேன். அது நான் சார்ந்த பதிப்புத்துறையிலிருந்து: தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை வாய்ப்புகளை அதிகம் கண்டுகொள்ளாத இந்தக் காலத்தில் (நமது கனவு அமெரி்க்கா, சிங்கப்பூர் அல்லது மேற்காசியா), மேற்சொன்ன இந்தி நடுத்தரவர்க்கம் நாலுகால் பாய்ச்சலில் மத்திய அரசு வேலைகளை நோக்கி நகர்ந்ததற்கான நிரூபணத்தை இந்தி மொழியில் வெளியாகும் போட்டித் தேர்வு நூல்களின் விற்பனை குறித்த சில தகவல்களினூடாக நான் கண்டறிந்தேன்.

வழக்கத்துக்கும் அதிகமாக இப்பகுதிகளில் இந்தியில் போட்டித்தேர்வு நூல்கள் விற்கின்றன என்பது சமீபத்தில் சில பதிப்பாளர்கள் மூலம் எனக்கு தெரியவந்த, ஒரு தகவல். கவனிக்க, ஆங்கிலத்தில் அல்ல, இந்தியில் வெளியாகும் போட்டித்தேர்வு நூல்கள்.

மெட்ரோ நகரங்களுக்கு அப்பாற்பட்ட சிறுநகரங்களில் குடிகொண்டிருக்கும் இந்த இந்தி பேசும் இளைய தலைமுறையின் ஹீரோதான் நரேந்திர மோடியும் அரவிந்த் கேஜ்ரிவாலும் என்பதை புரிந்துகொள்வதில் நமககுச் சிக்கல் இருக்காது என நம்புகிறேன்.

 

இன்று பாஜக காட்டும் இந்தி ஆதரவு மொழிக்கொள்கை என்பது இந்த பொருண்மிய அடிப்படையின்மீதே கட்டப்பட்டுவருகிறது. இது சில குறிப்பிட்ட இந்தி மாநிலங்களில் அவர்களுக்கு மிகப்பெரிய வரவேற்பை அளிப்பதற்கு காரணம் அதுதான்.

மெட்ரோவுக்கு ஆங்கிலம், சிறுநகரங்களுக்கு இந்தி என்கிற இரட்டை அணுகுமுறையை பாஜக மிகச்சிறப்பாக மேற்கொண்டிருக்கிறது. வாஜ்பாயும் அருண்ஜேட்லியும் மெட்ரோ நகரங்களின் ஹீரோக்கள், மோடியும் அமித்ஷாவும் வட இந்திய சிறு நகரங்களின் நாயகர்கள். .

*

நமது “தாழ்ந்த தமிழகத்துக்கு” வருவோம்.

இது எ்த்தகைய நிலைமையை நோக்கிச் செல்லும்? உத்திரப் பிரதேசத்தில் பத்தாம் வகுப்பு படித்த ஒருவர் ரயில்வே அல்லது வேறு ஒரு மத்திய அரசுத் தேர்வின் கீழ்நிலை வேலை ஒன்றுக்கு விண்ணப்பிக்கும்போது இந்தி தெரி்ந்திருந்தால்போதும் விண்ணப்பித்துவிடலாம். தேர்வெழுதலாம், நேர்காணலில் இந்தியில் பேசி வேலை வாங்கலாம்.

ஆனால் அதே வேலைக்கு அதே பத்தாம் வகுப்பு படித்த தமிழ்நாட்டு விண்ணப்பதாரர் ஒருவருக்கு அந்த தேர்வை எழுதுவதற்கும் நேர்காணலுக்கும் ஆங்கிலம் தெரிந்திருக்கவேண்டும்.

இந்த பாரபட்சம் எவ்வளவு மோசமானது என்பதை, பத்தாம் வகுப்பு மட்டுமே படித்தவர்களுக்குத்தான் தெரியும்!

அதே சமயத்தில் உயர்நிலை வேலைகள் என்றால் அதில் நம்மவர்களுக்கு பிரச்சினை இல்லை. ஐஏஎஸ் தேர்வில் சமீப காலமாக தமிழக விண்ணப்பதாரர்கள் ஆங்கிலத்திலும் தமிழிலும் சிறப்பாக எழுதி வெற்றிபெறுகிறார்கள். இந்த விண்ணப்பதாரர்கள் பட்டதாரிகளாக இருப்பதால்தான்.

பத்தாம் வகுப்பினர்க்கும் பட்டதாரிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பது படிப்பில் மட்டுமல்ல. மொழித்திறனிலும்கூட. எனவேதான் கீழ்,இடை நிலைவேலைகளுக்கான தேர்வுகள் இந்தியில் மட்டும் நடத்தப்பட்டால், இந்தியை முதன்மொழியாக கொண்டவர்களுக்கு இயல்பாக கிடைக்கிற அனுகூலம் தமிழர்களுக்கோ கனனடர்களுக்கோ மணிப்பூரிகளுக்கோ கிடைக்கவே கிடைக்காது.

கடந்த ஒரு மாதமாக தமிழகத்தில் நூற்றுக்கணக்கான மொழிசார்ந்த ஆர்வலர்கள், செயல்பாட்டாளர்களிமும் அமைப்புகளிடமும் உரையாடலை மேற்கொண்டுவருகிறேன். அவர்களில் ஒரு சிலரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் மொழியை அடையாளப் பிரச்சினையாக மட்டுமே பார்த்தும் பேசியும் வருகிறார்கள். அதன் சமூகப் பொருளாதார பரிமாணத்தை அவர்கள் பார்ப்பதாகத் தெரியவில்லை. அதாவது மொழிப்பிரச்னையின் பொருண்மிய அடிப்படையை (material basis) அவர்கள் பேசவில்லை. அதை விட்டுவிட்டு மக்களை ஆங்கில மோகிகள் என்றும இந்திக்கு அடிமையாகிறார்களே என்றும் வசைபாடுகிறார்கள்.

ஆனால் அவர்கள் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும்: 1965இல் நமது மாணவர்கள் இந்தித் திணிப்பை எதிர்த்தபோது அவர்களுக்கு தமிழகத்துக்கான மொழிக்கொள்கை எப்படி இருக்கவேண்டும் என்பது குறித்து ஒரு பொருண்மிய அடிப்படையிலான அறிதல் இருந்தது.

இந்தி மட்டுமே ஆட்சிமொழி என்றால் நாம் இரண்டாம் தர குடிமக்களாகிவிடுவோம் என்று அன்று நமது போராளிகள் கூறினார்கள். அந்த வாசகத்துக்கு என்ன பொருள்? ஆங்கிலம் நமக்கு இந்தியச் சூழலில் வேலையோ தொழிலோ வாய்ப்பு கிடைக்காது, அல்லது அதில் நாம் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடுவோம் என்கிற அச்சம் 1965 போராட்டத்தையே இயக்கியது. தமிழ் உணர்வு, தமிழ்க்காப்பு என்பதற்கு இணையாக இல்லையென்றாலும் இந்த பொருண்மிய புரிதல் நிச்சயமாக அவர்களிடம் இருந்தது. ஆனால் இன்று அந்த புரிதல் இல்லை என்றால் என்ன காரணம்?

ஒரு தலைமுறை காலம் நாம் மொழிக்கொள்கை, மொழி அரசியல் குறித்து சிந்திக்க தவறிவிட்டோம் என்பதுதான் காரணம். இடையில் நடந்த பெரும்பாலான மொழிசார் செயல்பாடுகள் அடையாளம் தொடர்பானவையோக இருந்த அளவுக்கு வாழ்வாதாரம் தொடர்பானதாக இல்லை என்பதுதான் அக்காரணம்.

இப்போது மீண்டும் நாம் தொடக்கநிலைக்கே வந்திருக்கிறோம். இந்திய அரசின் மொழிக்கொள்கையும் அதில் புதிதாக தோன்றியிருக்கும் தீவிரப் போக்குகளும் நமது வாழ்வாதாரத்தையும் அரசியல்-கலாச்சார அதிகாரத்தையும் நேருக்கு நேர் கேள்விகேட்கின்றன. இன்னொரு பக்கம் ஆங்கிலத்திடம் நாம் இழந்தவை குறித்து தனியாக பேசவேண்டியிருக்கிறது. இந்த இரு போக்குகளுமே தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களிலும் பெரும்பாலான மக்களின் பொருண்மிய அடிப்படையைச் சிதைத்துவருகின்றன.

இதைத்தான் இன்று நாம் மொழி அரசியலாக முன்வைக்க வேண்டியிருக்கிறது. எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டிலுள்ள மத்திய அரசு நிறுவனங்களிலும் பெரும் தனியார் நிறுவனங்களிலும் 90 சதவீத வேலைகள் தமிழ்நாட்டவர்களுக்கே வழங்கவேண்டும். அதற்கு, தமிழகத்தில் மத்திய அரசுக்கான தேர்வுகளை தமிழில் நடத்தவேண்டும்.

தமிழ் வணிக மொழியாக, பொது தொடர்புப்பாட்டு மொழியாக இருக்கவேண்டும் என சட்டபூர்வமாக உறுதி செய்யவேண்டும். அப்போதுதான் தமிழக வேலைகள் தமிழர்களுக்குக் கிடைக்கும். இல்லையென்றால், தமிழர்களுக்கு, குறிப்பாக சமூகப் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு, வேலைக்கான உத்தரவாதம் இருக்காது.

1965 ஆம் ஆண்டு மொழிப்போரின் 50 ஆம் ஆண்டைக் கடைபிடிக்கும்போது, நமக்கான புதிய மொழிக்கொள்கையை உருவாக்குவதற்கு, இந்த புதிய பொருண்மியச் சூழலைக் கணக்கில் எடுத்துக்கொள்ளவேண்டியிருக்கிறது. இதுவே சரியான மொழி அரசியலை நமக்கு அளிக்கும். ஏனெனில் இது ஒரு சமூகப் பொருளாதார பிரச்சினையாகும்.

வேலைவாய்ப்பில் வெளிமாநிலத்தவர் வருகிற பிரச்சினையை சில தமிழ்த்தேசிய அமைப்புகள் தவறாக “வெளியார்” பிரச்சினையாக பார்க்கின்றன. அப்படி மட்டும்பார்த்தால் நாம் சிவசேனை போல ஆகவேண்டியதுதான். ஆனால் சிவசேனை மகாராஷ்ட்டிரத்துக்கு செய்த பங்களிப்புதான் என்ன?!!

நீங்கள் இதை சமூக அதிகார, அரசியல் அதிகார, வேலைவாய்ப்பு சார்ந்த தமிழக உரிமைப் பிரச்சினையாகப் பார்த்தால், புது தில்லிக்கு எதிராக அணிவகுப்பீர்கள். இதை வெறுமனே “வந்தேறிகளின்” அல்லது “வெளியார்களின்” பிரச்சினையாகப் பார்த்தால், சென்ட்ரல் நிலையத்துக்கு சென்று பாவப்பட்டஅந்த தொழிலாளர்களை அடித்துவிரட்ட நினைப்பீர்கள்.

நீங்கள் முதலாவதைச் செய்தால், அது தேசிய இன உரிமைக்கு வழிவகுக்கும். அது இறையாண்மையை மீட்கும். நீங்கள் இரண்டாவதைச் செய்தால், புது தில்லிக்கு நிம்மதியாக இருக்கும்! ஏனென்றால் ஒரே கல்லில் பல மாங்காய் அவனுக்கு.

Leave a Response