பத்திரிகையாளர்களின் பிரச்னைகள் தமிழக முதல்வருக்குத் தெரியவில்லை – சங்கத்தலைவர் வேதனை

தமிழக சட்டப்பேரவையில், 2016-17-ம் நிதியாண்டுக்கான திருத்தப்பட்ட நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஜூலை 21-ம் தேதி தாக்கல் செய்தார். அன்று நடந்த அலுவல் ஆய்வுக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்படி, ஆகஸ்ட் 1-ம் தேதி திங்கள்கிழமை முதல் துறைவாரியான மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடக்கிறது.

ஒவ்வொரு துறையிலும் செயல்படுத்தப்படும் திட்டங்களுக்கான நிதி ஒதுக்குவதற்கான ஒப்புதல்கள் விவாத இறுதியில் பெறப்படும். துறை அமைச்சர்கள் அந்தந்த துறைகளில் இந்தாண்டில் செயல்படுத்தப்படும் திட்டங் கள் தொடர்பான அறிவிப்புகளையும் வெளியிடுவர். சட்டசபையில், ஆகஸ்ட் 12 அன்று செய்தித்துறை, சுற்றுச்சூழல் துறை, எழுது பொருள் மற்றும் அச்சுத்துறை மானிய கோரிக்கை மீது விவாதம் நடந்தது.

அதையொட்டி சென்னை பத்திரிகையாளர்கள் சங்கத் தலைவர் மோகன் எழுதியுள்ள பதிவு, அதிமுக ஆட்சியில் பத்திரிகையாளர்களின் நிலையை வெளிப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. அவருடைய பதிவில்….

செய்தித்துறை மானிய கோரிக்கை இன்று (12.08.2016) விவாதம் நடக்க உள்ளது. விவாதம் முடிந்து அறிவிப்பு வரும். அறிவிப்பில் பத்திரிகையாளர்களுக்கு ஏதேனும் இருக்குமா? இருக்காதா? என்று பத்திரிகையாளர்கள் பலரும் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு கேட்டார்கள். சந்தித்து பேச முடிந்தவர்களும் இதே கேள்வியை எழுப்பினார்கள்.
தேர்தல் அறிக்கையிலேயே பத்திரிகையாளர் பற்றி ஒன்றும் சொல்லாத முதல்வர் ஜெயலலிதா, மானிய கோரிக்கை அறிவிப்பிலா சொல்லபோகிறார் என்று நான் பதில் கூறினேன். ஒன்றும் இருக்காது என்கிறீர்களா? என சிலர் கேள்வி எழுப்பினர். இருந்தால் மகிழ்ச்சி இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எதிர்ப்பார்ப்பு இருந்தால்தானே ஏமாற்றம். எந்த எதிர்பார்ப்பும் எனக்கு இல்லை.

நமது மத்திரிகளிடம் எதை சொல்வதும் வீண். கடந்த 5 ஆண்டு ஆட்சியின் போது தொழிலாளர் நலத்துறை அமைச்சராக இருந்தவர்களை சந்தித்து மஜிதா ஊதிய நிர்ணயம் குறித்து பேசி பேசி, நேரம் வீணானது தான் மிச்சம். மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டு இறுதியில் அம்மாவிடம் சொல்லி நடவடிக்கை எடுக்கிறோம் என்று அமைச்சர்களிடமிருந்து பதில் வரும். இதே கதைதான் செய்தித்துறை மந்திரியிடமும். இவர்கள் என்று அம்மாவிடம் எடுத்து சொல்வது. பத்திரிகையாளர்கள் பிரச்சனை என்று தீர்வது. வெளியில் சொன்னால் வெட்கக்கேடு என்று அமைச்சர்களிடம் பேசியதை சக பத்திரிகையாளர்களிடம் கூட சொல்லிக் கொள்ளாமல் அமைதியாக இருக்க வேண்டியுள்ளது. இவர்கள் அம்மாவை பார்த்தாலே தலையை குணிந்து கும்பிடு அப்படியும் இப்படியும் நடனமாடுகிறார்கள். அம்மாவிடம் எடுத்துரைக்கிறேன் என்று அவர்கள் சொல்வதை நாமும் நம்பிக்கொள்ள வேண்டியதுதான். அதுவும் பத்திரிகையாளர்களின் பிரச்சனைகள் பற்றி.

சரி முதல்வரை நேரில் சந்தித்து பத்திரிகையாளர் பிரச்சனைகளை எடுத்து கூற நேரம் கேட்போம் என்று முதல்வரின் செயலாளர்களில் ஒருவரான ராமலிங்கத்தை பார்த்து, நேரம் கேட்டு மனு கொடுத்தால், கொடுத்தால், கொடுத்தால், கொடுத்துக் கொண்டே இருக்க வேண்டியதுதான். இவர் ஐ.ஏ.எஸ். அதிகாரியா அதிமுக உறுப்பினரா என்பது நமக்கு புரியவில்லை. பத்திரிகையாளர்களை நிறுவனத்தை வைத்து பார்க்கும் நிலை. தமிழகத்தில் கட்சிக்கொரு ஊடகம். அந்த ஊடகங்களில் வேலை பார்பவன் எல்லாம் கட்சி உறுப்பினர் என்ற அடிப்படையில் இந்த ஐ.ஏ.எஸ். அறிவாளிகள் பார்க்கிறார்கள்.

1991 —96 அதிமுக ஆட்சியின் போது சட்டப்பேரவை உரிமை மீறலில் சிக்கிய சுனில். ஜெயா டிவி தொடங்கியபோது. ஜெயா டிவியின் செய்தி பொறுப்பாளர். இவரைதான் அதிமுக ஆட்சியின் போது போலீசார் துரத்தி துரத்தி பிடிக்க முடியாமல் போனது. உச்சநீதி மன்றம் காவல்துறையின் மண்டையில் ஓங்கி வைத்த குட்டுடன், அன்றைய சபாநாயகராக இருந்த சேடப்பட்டியும் முழி பிதுங்கி அப்படியே நின்று போனார்.
குங்குமத்தில் பணியாற்றிய பாவைசந்திரன்தான் நமது எம்.ஜி.ஆர். நாளிதழின் ஆசிரியராக பணியாற்றினார். இப்போது ரெய்சிங் சன் பத்திரிகையில் பணியாற்றும் ஜெயகதீஷ் தான் இதற்கு முன் நமது எம்.ஜி.ஆர். பத்திரிகையின் ஆசிரியர். சன்டிவி மதிவாணன் ஜெய டி.வி.யின் செய்தி பொறுப்பாளர். இப்படி பத்திரிகையாளர்கள் எந்த நிறுவனத்திற்காகவும், யார் அழைத்தாலும், அவர்களுக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும் என்றால் அங்கு பணியாற்றுவார்கள். அவர்களுக்கான தொழில் பத்திரிகையில் பணியாற்றுவது. அது யாருடைய நிறுவனம் என்பது முக்கியமல்ல ஊதியம் முக்கியம். இவைஎல்லாம் ஐ.ஏ.எஸ். படித்த இந்த மேதாவிகளுக்கு தெரியாமல் போனது எப்படி? இந்த அடிப்படை அறிவு கூட ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படித்த மேதாவிகளிடம் இருக்குமா? இருக்காதா என்பது தெரியவில்லை.

பணியாற்றும் நிறுவனத்தை வைத்து நிருபர்களை அவமதிப்பதும், ஒரு சிலரிடம் பணிந்து பேசும் நிலை தமிழகத்தில் நிலவுகிறது. இந்த லட்சணத்தில். பத்திரிகையாளர்களின் பிரச்சனையை எப்படி முதல்வரிடம் கொண்டு சேர்ப்பது. முதல்வரை சுற்றி உள்ள இந்த ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். படித்த மோதவிகளை தாண்டி அங்கு ஒரு தகவலும் செல்லாது. அப்படி ஒரு முதல்வர் நமக்கு வாய்த்துள்ளார்.

உங்களுக்காக நான் என்று சட்டசபையிலும் பேசுகிறார். பொதுக்கூட்ட மேடைகளிலும் முதல்வர் பேசுகிறார். அந்த உங்களுக்கான நானில் பத்திரிகையாளர்களை தவிர்த்து என்று சொல்லிவிட்டால். நம்முடைய கோரிக்கைகளை முதல்வரின் அலுவலகம் பக்கம் கொண்டு செல்லப்போவதில்லை. கோயில் உண்டியலிலோ, சர்ச் உண்டியலிலோ, மசூதியிலோ மனுவை போட்டுவிட்டு இந்த தேசத்தில் பிறந்ததற்காக எங்களை யாராவது காப்பாறுங்கள் என்ற நிம்மதியாக திரும்பிச் செல்லலாம். உண்டியலில் போட்ட கோரிக்கை மனுவாலும், முதல்வரின் செயலாளர்களிடம் கொடுக்கும் மனுவாலும் ஒன்றும் நடக்கப்போவதிலலை

என்று குறிப்பிட்டுள்ளார்.

மானியக்கோரிக்கையின் போது என்ன நடந்தது? பத்திரிகையாளர்களுக்காக எந்தவொரு திட்டமும் அறிவிக்கப்படவில்லை, ஏற்கெனவே உள்ள கோரிக்கைகளுக்கும் பதிலில்லை.

Leave a Response