தமிழகத்தின் முதுசம் ஒளிச்செங்கோ பற்றிய ஆவணப்படம்


சு. ஒளிச்செங்கோ

திருவாரூர் மாவட்டம், கண்கொடுத்தவனிதம் கிராமத்தில் வசித்துவருகிறார் பெரியார் பெருந்தொண்டர் சு. ஒளிச்செங்கோ. அவருக்கு வயது 80.

நாம் தமிழர் இயக்கத்தின் சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்துகொண்டு நான்கு மாதம் சிறையில் இருந்தவர். அப்போது சி. பா. ஆதித்தனாரிடம் கிடைத்த அறிமுகத்தின் காரணமாக மாலை முரசு நாளிதழில் பகுதிநேர செய்தியாளர் பணியில் சேர்ந்தார்.

கொரடாச்சேரி பகுதியில் திராவிடர் கழகம் வளர பாடுபட்டவர்களில் ஒருவராக ஒளிச்செங்கோ திகழ்கிறார்.

தந்தை பெரியாரின் பேச்சுகள், தலையங்கங்களை ஆழ்ந்து படித்த அனுபவம் உள்ளவர். எண்ணற்ற திராவிடர் கழக மாநாடுகளில் பங்கேற்றவர். பெரியார் பிறந்த நாள் விழா விடுதலை மலர்களில் பெரியார் சிந்தனைகள் பற்றியும் மாலை முரசு நாளிதழில் பெரியார், அண்ணாவுடன் ஆதித்தனாருக்கு இருந்த தொடர்பு பற்றியும் பல கட்டுரைகளை எழுதியிருக்கிறார்.

பெரியார் ஒரு வாழ்க்கைப் பாடம், விடையபுரம்: கடவுள் மறுப்பின் தொடக்கப்புள்ளி ஆகிய நூல்களை எழுதியுள்ளார்.

அவர் பற்றிய ஆவணப்படமொன்றை பிரபல ஆவணப்பட இயக்குநர் சொர்ணவேல் உருவாக்கியுள்ளார்.

அவருக்கு திராவிட இயக்கங்களின் வளர்ச்சிக்கு வேராகவும் நீராகவும் இருந்த பெரியவர்கள், காலத்தால் கண்டுகொள்ளப்படவில்லை என்பதில்கவலை இருந்தது. அதன் பொருட்டு பெரியார் பெருந்தொண்டர் ஒளிச்செங்கோ பற்றி ஆவணப்படம் தயாரித்திருக்கிறார்.

ஒளிச்செங்கோ அவர்களிடம், சில கேள்விகளை முன்வைத்து சரளமாகப் பேசவைத்துப் படமாக்கியுள்ளார். இயல்பாக இருக்கிறது பேச்சு. எதையும் மறைக்கத் தெரியாமல் வெளிப்படையாகப்பேசக்கூடியவரின் பதிவு அது.

அவருடைய பேச்சை 23 நிமிடங்கள் ஓடக்கூடிய ஆவணமாக மாற்றி பெரியோன் என்ற தலைப்பில் யூடியூப்பில் பதிவேற்றியிருக்கிறார் சொர்ணவேல்.

ஈழத்தில் மூத்தோர் மற்றும் சொத்துகளை முதுசம் என்பார்கள். தமிழகத்தின் முதுசம் ஆன ஒளிச்செங்கோ அவர்களை அறிய கீழுள்ள இணைப்பைச் சொடுக்குங்கள்.

Leave a Response