பன்முகத் திறன் கொண்ட பஞ்சு அருணாசலம் மறைந்தார்

தயாரிப்பாளர்,இயக்குநர், பாடலாசிரியர் எனப் பன்முகம் கொண்ட பஞ்சு அருணாசலம் உடல்நலக் குறைவால் இன்று சென்னையில் காலமானார். அவருக்கு வயது 75.

கண்ணதாசனிடம் உதவியாளராகப் பணியாற்றிய பஞ்சு அருணாசலம், பின்னாளில் பாடலாசியர், தயாரிப்பாளர், இயக்குநர் என வளர்ந்தார்.

‘அன்னக்கிளி’ படத்தின் மூலம் இளையராஜாவை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தியவர். ‘அன்னக்கிளி’, ‘உல்லாசப் பறவைகள்’, ‘முரட்டுக்காளை’, ‘அன்புக்கு நான் அடிமை’ உட்பட பல படங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.

‘ஆறிலிருந்து அறுபது வரை’, ‘எங்கேயோ கேட்ட குரல்’, ‘பிரியா’, ‘வீரா’, ‘குரு சிஷ்யன்’, ‘கல்யாணராமன்’, ‘ஜப்பானில் கல்யாணராமன்’, ‘மைக்கேல் மதன காமராஜன்’, ‘ராசுக்குட்டி’, ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’, ‘சொல்லமறந்த கதை’, ‘மாயக் கண்ணாடி’ உள்ளிட்ட பல படங்களைத் தயாரித்தவர் பஞ்சு அருணாசலம்.

‘இளைய தலைமுறை’, ‘என்ன தவம் செய்தேன்’ ‘சொன்னதை செய்வேன்’, ‘நாடகமே உலகம்’, ‘மணமகளே வா’ ,’புதுப்பாட்டு’, ‘கலிகாலம்’, ‘தம்பி பொண்டாட்டி’ ஆகிய படங்களை இயக்கியவர்.

ரஜினிகாந்த்தின் இவ்வளவு பெரிய வளர்ச்சிக்கு அடித்தளமிட்டவர் என்று இவரைப் பற்றிச் சொல்வார்கள். அண்மைக்காலமாக உடல்நலக்குறைவு காரணமாக எங்கும் வராமல் இருந்தார்.

இந்நிலையில், பஞ்சு அருணாசலம் இன்று காலமானார்.

Leave a Response