அனல்மின்நிலையம் மூலம் தமிழ்மண்ணின் சூழலைக் கெடுக்கும் சிங்கள அரசு

 

சுன்னாகம் அனல் மின்நிலையத்தின் மூலம் சுற்றுச்சூழலுக்குக் கடும்பாதிப்பு ஏற்படுகிறது. இதைக் கண்டித்தும் மேற்கொண்டு அனல்மின் நிலையத்துக்கு அனுமதி வழங்கக்கூடாது என்றும் வடமாகாணசபையில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. அது பற்றிய விவரங்கள்….சுன்னாகம் அனல் மின்நிலையத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கோ அல்லது வடக்கில் புதிதாக வேறு அனல் மின்நிலையங்களைத் அமைப்பதற்கோ மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுமதி வழங்கக்கூடாது என வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் வடக்கு மாகாணசபையில் சமர்ப்பித்த பிரேரணை ஏகமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்று வியாழக்கிழமை வடக்கு மாகாணசபையின் 20ஆவது அமர்வு கைதடியில் அமைந்துள்ள வடக்கு மாகாணசபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இந்தப் பிரேரணையைச் சமர்ப்பித்திருந்தார். இந்த அமர்வில் கலந்துகொண்டு அவர் உரையாற்றும்போது தெரிவித்ததாவது:- சுன்னாகம் பிரதேசத்து நிலத்தடி நீரில் மனித ஆரோக்கியத்துக்கும், விவசாயத்துக்கும், சமூக அமைதிக்கும் பெருந் தீங்குகளை விளைவிக்கக்கூடிய விதத்தில் எண்ணெய் மாசாகக் கலந்துள்ளமைக்குச் சுன்னாகம் அனல் மின்நிலைய வளாகத்தில் இருந்து வெளியேறிய கழிவு டீசலே காரணம் என்பது வெள்ளிடைமலை. சுன்னாகம் அனல் மின்நிலைய வளாகத்தில் இயங்கிவருகின்ற இரண்டு அனல் மின்உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றான தனியாருக்குச் சொந்தமான நொதேர்ண் பவர் பிளான்ற் அதன் ஆரம்ப காலங்களில் சுற்றுச்சூழல் விதிகளைக் கருத்தில் கொள்ளாது கழிவு டீசலை சுத்திகரிக்காமலேயே வெளியேற்றி வந்தமையை மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பதிவுகளில் இருந்து அறிய முடிகிறது. பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான குடிதண்ணீர் விநியோகத்தை மேற்கொள்வதற்கும், நிலத்தடி நீரில் கலந்துள்ள எண்ணெய் தொடர்பான பகுப்பாய்வுகளுக்கும், சுத்திகரிப்புக்கும், குடாநாட்டின் நீர்வள மேம்பாட்டுக்கும் செலவிடுவதற்கு வடக்கு மாகாணசபையிடம் போதிய நிதி இல்லை. எனவே, வணிக நிறுவனங்களுக்குரிய சமூகக்கடப்பாடு என்ற ரீதியில் நொதேர்ண் பவர் பிளான்ற் நிறுவனம் மேற்குறிப்பிட்ட தேவைகளுக்கு அது இயங்கும் காலம் வரை நிதிப்பங்களிப்பை வழங்க வேண்டும். மேலும், மின்நிலைய வளாகத்தில் இயங்குகின்ற இலங்கை மின்சார சபைக்குச் சொந்தமான உத்துறு ஜெனனி மின் உற்பத்தி நிலையம் நவீன தொழில்நுட்பங்களுடன் கூடிய பிரித்தானியாவில் இருந்து தருவிக்கப்பட்ட புதிய மின் பிறப்பாக்கியைப் பயன்படுத்துகிறது எனவும், நொதேர்ண் பவர் ஏற்கனவே பாவிக்கப்பட்ட பழையரக மின் பிறப்பாக்கியையே வருவித்துப் பயன்படுத்துகிறது என்பதும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவற்றின் செயற்பாடுகளை மத்திய சுற்றாடல் அதிகாரசபை தொடர்ச்சியாக கண்காணிக்க வேண்டும் எனவும், நொதேர்ண் பவர் நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட அனுமதி காலவதியாகும்போது மேலும் நீடிக்க வேண்டாம் எனவும், இந்நிறுவனத்தால் சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதத்தில் எண்ணெய்க் கழிவுகள் தற்போதும் வெளியேற்றப்படுகிறது என்பது உறுதிசெய்யப்படின் அதற்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்துச் செய்து தடைவிதிக்கவேண்டும் எனவும் மத்திய சுற்றாடல் அதிகார சபையை இந்தச் சபை கோருகிறது. அத்தோடு, வடக்கு மாகாணம் சூழல் நட்புமிக்க காற்று மின்னைப் பெறுவதற்கான வாய்ப்பான சூழலை அதிகளவில் கொண்டிருப்பதாலும், காற்று மின் ஆலைகள் நிர்மாணிக்கப்பட்டுக் கொண்டிருப்பதாலும், எமது மண்ணின் சுற்றுச்சூழலை மோசமாகச் சீரழித்து மக்களின் இருப்பையே கேள்விக் குறியாக்கும் சுன்னாகம் அனல் மின்நிலையத்தை மேலும் விரிவுபடுத்துவதற்கோ அல்லது வடக்கில் புதிதாக வேறு அனல் மின் நிலையங்களைத் அமைப்பதற்கோ அனுமதி வழங்க வேண்டாம் எனவும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையை இச்சபை கோருகிறது ஆகிய மூன்று பிரேரணைகளைச் சமர்ப்பித்திருந்தார். இவரது பிரேரணைகளை வடமாகாணசபை உறுப்பினர் பா.கஜதீபன் வழிமொழிந்து உரையாற்றியதன் பின்னர் சபை ஏகமனதாக ஏற்றுக்கொண்டது.

 

Leave a Response