தமிழக அரசுக்கெதிராக நானும் வருகிறேன்- கொங்குநாடு ஜனநாயகக்கட்சித் தலைவர் ஜி.கே.நாகராஜ்

 

 உயர்நீதிமன்ற நீதிபதி N.கிருபாகரன் அவர்கள் அடையாரில் நடந்த விபத்துவழக்கு தொடர்பான  விசாரணையின்போது, போதையில் வாகனங்களை ஓட்டுபவர்களைத் தடுக்க நாடுமுழுவதும் பூரண மதுவிலக்கை ஏன் அமல்படுத்தக்கூடாது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.இதற்காக மத்திய அரசு,டாஸ்மாக் இயக்குநர்,காவல்துறை அதிகாரி(DGP),வருவாய்த்துறை  ஆகியோர் விரிவான பதில் மனுத்தாக்கல் செய்ய வேண்டுமென்று விசாரணையை வரும் டிசம்பர் 11-ந் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.  கிருபாகரன் கேட்ட இந்த கேள்வியை கொங்குநாடு ஜனநாயக கட்சி மனதார வரவேற்கிறது 

குடிக்க நீர் இல்லை. ஆனால் குடி கெடுக்கும் மது ஆறாக ஓடுவதும் அதில் பல குடும்பங்கள் மூழ்கிக்கொண்டிருப்பதும் ஏன் என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பில் நவம்பர் 18-ல் குடிக்க நீர் வேண்டும், குடி கெடுக்கும் மது வேண்டாம் என்ற கோரிக்கையோடு நடைபெற்ற பட்டினிப்போராட்டத்தில் மதுவுக்கெதிராகவும்,நீராதாரத்திட்டங்ளை மேம்படுத்தவும் பள்ளிக்குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆயிரக்கணக்கோர் மதுவுக்கெதிராக தங்கள் மனக்குமறலைக் கொட்டித்தீர்த்தனர்.

பேசிய 300-க்கும் மேற்பட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும்,சமுதாயத் தலைவர்களும்,தன்னார்வத்தொண்டு நிறுவனங்களும் கலந்துகொண்டு மதுவுக்கு எதிராகவும்,அதனால் ஏற்பட்ட தீமைகளையும் ஆதாரத்தோடு பேசியுள்ளனர்.மதுவால் மாண்டோருக்கு அஞ்சலி செலுத்தியபோது பலர் கண்ணீர்விட்டு அழுதனர்.

மதுவைக் குடித்து இறப்போரை விட, மதுஅருந்தி வாகனம் ஓட்டிவரும் வாகன ஓட்டிகளால் ஒன்றுமறியாத  மது அருந்தாத அப்பாவிகள் பலர் ஆயிரக்கணக்கில் இறந்துள்ளனர்.கடந்த ஆண்டு 17,000-த்திற்கும் மேற்பட்ட விபத்துக்களில் 70%  விபத்துக்கள் மதுபோதையால் ஏற்பட்டுள்ளன. அதற்கான ஆதாரத்தை  உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய கொங்குநாடு ஜனநாயக கட்சி தயாராக உள்ளது.

மேலும் தேசிய நெடுஞ்சாலைகளில் மதுபானக்கடைகள் இருக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற உத்தரவை மீறி சாலையை மறைக்கும் வண்ணம் குறுக்கே தடுப்புச்சுவரை மட்டும்  அமைத்துவிட்டு  தேசிய நெடுஞ்சாலைகளில்  மதுவை அரசு விற்றுக்கொண்டிருக்கிறது.   ஒவ்வொரு மதுக்கடைகளிலும் அரசு வருமானத்தை மட்டுமே  குறிக்கோளாக வைத்து மதுவை விற்றுக்கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் அரசாங்கத்தின் செலவு அதிகரிக்க அதிகரிக்க,குடிகாரர்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு முயற்சி செய்து வருகிறது.இந்நிலை நீடித்தால் 2020–ம் ஆண்டு தமிழகத்திலுள்ள அத்தனை பேரும் குடித்தால் மட்டுமே தமிழக அரசு அரசை  நடத்த இயலும்.

இந்தியாவிலேயே மதுவை விற்று அதன் வருமானத்தின் மூலம் அரசு நடத்துவது,அரசு ஊழியர்களுக்கு ஊதியம் கொடுப்பது தமிழகம் மட்டுமே.

மேலும் தமிழகத்தில் மதுவால் நடைபெறும் விபத்துக்களின் புள்ளிவிவரங்களை  அரசு  சரியாக பதிவில் வைப்பதில்லை.

பள்ளி மாணவர்கள்,கல்லூரி மாணவர்கள் மற்றும் பெண்கள்  மதுக்கடைகளில் மதுவை வாங்கிச்சென்று அருந்துவது சாதாரண நிகழ்வாகி விட்டது.

மது அருந்துவதால் உடலில் 60-வகையான நோய்கள் ஏற்படுகின்றன.பாலியல் குற்றங்கள்,கொலை,கொள்ளை ஆகியவற்றுக்கு மது  காரணமாக அமைகிறது.

சமீபத்தில் மது குடிப்பதற்காக ரூ.1000 மதிப்புள்ள காதணிக்காக பெண்குழந்தையையும்,மாடு மேய்த்த பெண்ணையையும் கொன்ற சம்பவம் அனைவரும் அறிந்ததே.  குடிகாரத் தந்தையின் பாலியல் தொல்லைகள் தாங்காமல் மதுவில் விஷம் வைத்து தந்தையை கொன்ற  மகள் இதுவும் மக்கள் அறிந்ததே.

தற்போதைய நிலையில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தினால் இன்னும் 25 ஆண்டு காலம் மதுவின் தாக்கம்(தீமைகள்) இருக்கும்.

எனவே கேரளாவில் பூரண மதுவிலக்கை படிப்படியாக அமல்படுத்தும் இவ்வேளையில், கொங்குநாடு ஜனநாயக கட்சி சார்பாக மதுவை விற்கும் தமிழக அரசுக்கு எதிராகவும்,பூரண மதுவிலக்குக்கு ஆதரவாகவும் தன்னையும் ஒரு மனுதாரராக சேர்த்துக்கொள்ள வேண்டுமென கொங்குநாடு ஜனநாயக கட்சியின் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் ஈசன் இன்று மனுத்தாக்கல் செய்ய உள்ளார்.மனுவை உயர்நீதிமன்றம்  ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் கொங்குநாடு ஜனநாயக கட்சியின் சார்பாக நான் (G.K.நாகராஜ்) மதுவுக்கெதிரான வாதங்களை உயர்நீதிமன்றத்தில் வைத்து வாதாட உள்ளேன்.

மதுவுக்கெதிராக போராடுகின்ற பல்வேறு அரசியல் கட்சிகளும்,தொண்டு நிறுவனங்களும் தங்களையும் மனுதாரராக இணைத்து மதுவுக்கெதிரான உயர்நீதிமன்றம் அளித்துள்ள வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

Leave a Response