விடுதலைச்சிறுத்தைகள் இரவிகுமாருக்கு மனம் வெறுத்து எதிர்வினை

 

மோடி அரசு இந்தி மற்றும் சமக்கிருத திணிப்பை நிகழ்த்தும் இந்த நேரத்தில் தமிழ்மொழிப் போராட்டத்தின்  50 ஆண்டு என்கிற விஷயத்தை ஒரு முக்கிய வாய்ப்பாகக் கருதி ஜனவரி 25, 2015 இல் தமிழகமெங்கும் நினைவேந்தல்களை நடத்துவது, பிறகு ஆண்டு முழுக்க மொழி உரிமைப் போராட்டங்கள், கருத்தரங்குகள், கண்காட்சிகள் நடத்துவது, 1965 போராட்டத்தை ஆவணப்படுத்துவது, மொழிப்போர் தியாகியர்களையும் அவர்களது குடும்பத்தினரையும் அவரவர் ஊர்களில் கெளரவப்படுத்துவது எனப் பல முறைகளில் இந்த ஆண்டை  அரசியல்மயப்படுத்தமுடிவெடுத்துச் செயல்படுத்திக் கொண்டிருக்கிறது மக்கள் இணையம் அமைப்பு.

அஎத அமைப்பின் செயல்பாடுகள் தொடங்கியவுடன் அதை சாதிய மனோபாவம் என்று சொல்லத்தொடங்கிவிட்டார் விடுதலைச்சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த இரவிக்குமார். தமிழ்த்தேசிய அரசியலைப் பேசக்கூடிய, தமிழ் மட்டுமே ஆட்சிமொழி என்கிற கொள்கையைக் கொண்டிருக்கும் கட்சியின் பொதுச்செயலரிடமிருந்து இப்படி ஒரு கருத்தை எதிர்பார்க்காத மக்கள் இணையம் நிறுவனர் செந்தில்நாதன் ஆற்றியுள்ள எதிவினை.

தியாகி நடராசனின் மறைவு இந்தி எதிர்ப்புப் போராட்ட வரலாற்றிலோ தமிழக வரலாற்றிலோ புறக்கணிக்கப்படவில்லை. அவர் மறைந்த ஜனவரி 15 தியாகியர் தினமாக கடைபிடிக்கப்பட்டிருந்தால் அதுவே மிகவும் பொருத்தமாக இருந்திருக்கும். அவ்விஷயத்தில் ரவிக்குமார் கவனமீர்த்தது மிகவும் பொருத்தமானதே. சரியானதே.

ஆனால் 1965 போராட்டத்தின் முக்கியத்துவம் குறித்து அவர் கூறும் கருத்துகள் வருத்தத்துக்குரியவை. “1965 ஆம் ஆண்டில் நடைபெற்ற போராட்டத்துக்கு ஒரு முக்கியத்துவம் இருக்கிறதென்றால் அது தி.மு.க ஆட்சிக்கு வந்ததைத்தான் சொல்லவேண்டும்” என்கிற வார்த்தைகள் அதிர்ச்சியூட்டுகின்றன. அவ்வளவு பெரிய போராட்டத்தை வெறுமனே இவ்வாறு கடந்துசெல்லமுடியுமா?

திராவிட இயக்கத்தின் செயல்பாடுகளிலும் அவர்கள் கட்டியெழுப்பியுள்ள வரலாற்றிலும் சாதியம் எவ்வாறு உறைந்திருக்கிறது என்பதை ரவிக்குமார் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக சுட்டிக்காட்டிவருகிறார். அதில் பல உண்மைகள் இருந்ததை என்னைப் போன்ற பலர் ஏற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் திராவிட இயக்கத்தின் எல்லா செயல்பாடுகளையும் அப்படி அணுகிவிடமுடியாது. 1965 போராட்டத்தின் வீச்சும் அளவும் உயிரிழப்புகளும் தீக்குளிப்புகளும் குணாம்ச ரீதியில் அதற்கு முன்பு நடந்த போராட்டங்களைவிட வித்தியாசமானவை. அது காங்கிரஸை வீழ்த்தி திமுகவை ஆட்சி பீடம் ஏற்றியதும்கூட சாதாரண விஷயமில்லை. ஆனால் அந்த போராட்டத்தின் நோக்கமாக இருந்தது திமுகவை ஆட்சிபீடம் ஏற்றுவதல்ல. சொல்லப்போனால் அதை திமுக திட்டமிட்டு தொடங்கவில்லை. அதற்கான சூழலை முன்பே அது விதைத்திருந்தது, போராட்டம் மாணவர்களால்தான் தொடங்கப்பட்டது, பின்பு அதை திமுக அறுவடை செய்துகொண்டது. இது ஒரு இணைபோக்கான நிகழ்வு.

அதன் 50 ஆண்டை குறிப்பது என்கிற முடிவை எடுத்து முறையாக இது குறித்து ரவிக்குமார் அவர்களிடமும் விசிகவின் பொதுச்செயலர் என்கிற அளவிலும் தோழர் என்கிற அளவிலும் நான் பேசியிருந்தேன். நடராசன் தியாகம் மறைக்கப்பட்டிருந்த விஷயத்தை தெரிவித்த அவர், எப்போதாவது ஒரு கோர்ஸ் கரெக்ஷன் செய்யவேண்டும் அல்லவா என்றும் கேட்டார். என்னிடம் அதற்கு உடனடியாக பதில் இல்லை. ஆனால் அவரது கருத்தை ஏற்றுக்கொள்ளவே செய்கிறேன். நடராசன் தியாக நாளுக்கு முன்னுரிமை அளிப்பது தொடர்பாக எதையாவது செய்யவேண்டும் எனவும் உறுதியாக இருக்கிறேன்.

நேற்று இந்தி எதிர்ப்பு நினைவு 50 ஆம் ஆண்டு கடைபிடிப்பு குறித்த கூட்டத்தில், இந்த 2015 ஆண்டில் எவ்வாறு திட்டமிடலாம் என்பதை விரிவாக பேசியிருந்தேன். அதில் பின்வரும் விவரங்களைக் கூறியிருந்தேன்:

“1938 இல் முதல் மொழிப்போரின் முதல் களபலி நாயகரான நடராசன் மறைந்த ஜனவரி 15 இல் நாம் ஒரு சூளுரை ஏற்கலாம். அன்று முதல் ஓராண்டுக்கு நாம் பல்வேறுவிதமான இயக்கங்களை நடத்தலாம். ஜனவரி 25 அன்று தற்போது ஒரு சடங்கைப் போல நடத்தப்பட்டுவரும் மொழிப்போர்த் தியாகிகள் நாளை உற்சாகமான, உத்வேகமான, உணர்ச்சிகரமான, பலமான, தமிழ்த்தேசத்தின் அரசியல் மீளெழுச்சியைக் குறிக்கிற நாளாக நாம் மீட்கலாம். அதற்காக தமிழகமெங்கும் நினைவேந்தல்களை நடத்தலாம். உண்மையில் நாம் மொழிப்போர் தியாகிகள் நாளாக கடைபிடித்திருக்கவேண்டியது குடியரசு நாளான ஜனவரி 26 ஐத்தான். 1965 ஜனவரி 26 இல்தான் இந்தி இந்தியாவின் ஒற்றை ஆட்சிமொழியாக ஆக்கப்படுவதற்கான அரசியல்சாசன கெடு நாளாகும்.”

அதாவது, முதல் களபலி நாள் என்கிற வார்த்தைகளில் நடராசனிடமிருந்து தொடங்குவது குறித்து குறிப்பிட்டிருக்கிறேன். ரவிக்குமார்தான். கடந்த ஜனவரி 25 இலும் இந்த விஷயத்தை வெளியிட்டபோது அநேகமாக முதலில் லைக் செய்தது நான்தான் என நினைக்கிறேன்.

இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் முதல் களபலியான நடராசனை – அவர் ஓர் ஆதிதிராவிடர் எனச் சொல்லி – அதை பதிவுசெய்தே அண்ணாவும் பேசியிருக்கிறார்என்பதை மா.இளஞ்செழியன் எழுதிய தமிழன் தொடுத்த போர் என்கிற நூலில் நானும் படித்திருக்கிறேன். ஆனால் பிற்காலத்தில் தாளமுத்து-நடராசன் என மிகவும் சாதிய மனோபாவத்துடன் ஒரு கட்டிடத்துக்கு பெயரிட்டது திராவிட இயக்கத்தவரின் சாதிய மனோபாவம்தான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இதைப்போல பல்வேறு பாரபட்சங்களை ரவிக்குமார், ஸ்டாலின் ராஜாங்கம் போன்றோர் கூறியிருக்கிறார்கள். நானும் இருபந்தைந்துவருடங்களாக ரவிக்குமார் உள்ளிட்டோர் வைத்த வாதங்களை ஆதரித்து பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் வாதாடிவருவருகிறேன்.

ஆனால் எல்லாவற்றையும் இப்படி பார்த்துவிடமுடியாது. 1965 போராட்டத்தின் தனித்தன்மையை நாம் அங்கீகரித்துதான் ஆகவேண்டும். முன்பே குறிப்பிட்டதுபோல அதன் வீச்சும் விளைவும் அதற்கு முந்தைய போராட்டங்களைவிட வேறுபட்டது. பெரியது. அனைத்திந்திய அளவிலும் உலக அளவிவிலும் பதிவுபெற்ற ஒரு போராட்டம் அது.

இ்ப்போது நாம் அதன் 50 ஆம் வருவதை நாம் ஒரு அரசியல் செயல்பாட்டு வாய்ப்பாக பார்க்கிறோம். எப்போதுமே 25, 50, 100 ஆண்டுகள் என்பவை போராட்ட வாய்ப்புகளாக நமக்கு அமைகின்றன. தமிழகத்தில் அம்பேத்கர் நூற்றாண்டு எத்தகைய வாய்ப்பை தலித் அரசியலுக்கும் சமூக நீதி அரசியலுக்கும் அளித்தது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். சமீபத்தில்கூட மண்டல் கமிஷனை விபிசிங் நிறைவேற்ற முயன்ற ஆண்டின் 25 ஆம் நினைவு ஆண்டுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என முதலில் எழுதியது ரவிக்குமார்தான்.

மொழி குறித்து மறுபடியும் ஒரு மோசமான காலத்தில் நாம் இருக்கிறோம். அதுவும் மோடி அரசு இந்தி. சமஸ்கிருத திணிப்பை நிகழ்த்தும் இந்த நேரத்தில் இந்த 50 ஆண்டு என்கிற விஷயத்தை ஒரு முக்கிய வாய்ப்பாக கருதியே நாங்கள் முன்னெடுக்க முயன்றோம்.

யார் மீது இவ்வளவு விமர்சனத்தோடு ரவிக்குமார் எழுதியிருக்கிறார்?

இந்தி எதிர்ப்பு பொன்விழா என்கிற விஷயத்தை- நான் அறிந்த அளவில்- முதலில் முன்வைத்திருப்பது நாங்களே. கடந்த ஆண்டு தில்லியில் நாங்கள் தொடங்கிய Movement for Multilingual India அமைப்பின் நீட்சியாக, மொழி நிகரமை மற்றும் உரிமை சட்டமுன்வரைவு என்கிற ஒரு வியூகத்தின் அடிப்படையில், நாங்கள் இதை முன்வைத்திருக்கிறோம். திகவோ திமுகவோ பிற திராவிட அமைப்புகளோ தமிழ் அமைப்புகளோ இது குறித்து எந்த அறிவிப்பும் இதுவரை வெளியிடவில்லை. நாங்கள் இவ்வாறாக இதை முன்னெடுப்பதை ரவிக்குமாரும் அறிவார்.

எந்த நாளைக் கொண்டாடுவது என்பதில் மாற்றங்களைக் கோருவது தவறல்ல. ஆனால் ஏற்கெனவே கொண்டாடப்படும் ஒரு நாளை தூக்கியெறியவோ அலட்சியப்படுத்தவோ முடியாத நிலையில்தான் நாம் இருக்கிறோம். ஜனவரி 25ஐத் தேர்ந்தெடுத்தது குறித்து விமர்சனங்கள் உண்டு. ஆனால் அது மாபெரும் குற்றமல்ல. பொங்கல் நாளையோ குடியரசு தினத்தையோ இந்தி எதிர்ப்பு தியாகிகள் நாளென அறிவித்திருந்தால், அவ்வாறு கடைபிடிப்பது என்பது நடைமுறைச் சிக்கலையும்கூடஉருவாக்கி இருக்கலாம்.

நானறிந்த எந்த திராவிட இயக்க நூலும் 1937-38 மற்றும் அதற்கு பிந்தைய போராட்டங்களை மறைத்துவிடவோ இருட்டடிப்புச் செய்யவோ இல்லை. மீண்டும் சொல்கிறேன்: 1965 போராட்டத்தின் தன்மைதான் இதற்கு காரணம்.

இந்த அளவில், எங்கள் முன்னெடுப்பை “பொன்விழா காணும் சாதிய மனோபாவம்” என்று ரவிக்குமார் கூறுவாரேயானால், அது சரியான அணுகுமுறை அல்ல என்பது என் தாழ்மையான கருத்து. (தனிப்பட்ட முறையில் என் வாழ்க்கையில் இதைவிட வேதனையான, வருத்தமான ஒரு தருணம் எனக்கு வாய்க்கமுடியாது. ரவிக்குமார் எனது அரசியல் குருக்களில் ஒருவர்). மொழி உரிமைப் போரின் சாதிய மனோபாவத்துக்கு இது பொன்விழாவா, அல்லது பொன்விழா காணும் இம்மனோபாவம் ஒரு சாதிய மனோபாவமா – எதை அவர் குறிப்பிடுகிறார் என எனக்குப் புரியவில்லை.

நடராசனின் தியாகம் மீண்டும் முன்னிலைக்கு கொண்டுவரப்படவேண்டும் என்பது சரியானதே. அதனால் முதல் களபலி நாள் என்று அதை மீட்கலாமா என்றொரு யோசனையையும் நான் தெரிவித்திருந்தேன். இதைப்போல வேறு பல யோசனைகளையும் நாம் வரவேற்போம். தமிழ்த் தேசிய அமைப்பாகவும் உள்ள – நாங்கள் இன்னமும் மதிக்கிற – விடுதலைச் சிறுத்தகைகளின் கருத்து இதில் என்ன என்றும் எனக்குத் தெரியாது. ஆனால் 1965 போராட்டத்தை இப்படி சிறுமைப்படுத்தத் தேவையில்லை.

தோழர் ரவிக்குமார் அவர்களிடம் சில வார்த்தைகள்: நீங்கள் எப்படியோ, ஆனால் உங்களுடைய கருத்துகளில் எவற்றையெல்லாம் இதுவரை நான் ஏற்றுக் கொண்டிருந்தேனோ அவற்றுக்காக நான் எப்போதும் உறுதியாக இருப்பேன். ஆனால், “ஒரு மாதத்துக்கும் மேலாகத் தமிழ்நாட்டின் பாதுகாப்பு, ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது” என்கிற ரவிக்குமாரின் வரிகளைப் படிக்கையில் நான் முற்றிலும் கசந்துவிட்டேன். கடவுளே!

(குறிப்பு: ரவிக்குமாரின் பதிவுை நேற்று நான் கண்டபோது அதில் பொன்விழா காணும் சாதிய மனோபாவம் என்று இருந்தது, நான் எதிர்வினையாற்றும் இக்கணம் அது பொன்விழா காணும் புறக்கணிப்பு அரசியலாக மாற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் முதல் பதிவைப் படித்த அளவிலேயே நான் என் எதிர்வினையை ஆற்றியிருக்கிறேன்)

Leave a Response