
அந்தியூர் அருகே குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் மேற்கூரை விழுந்து அமுக்கியதில் உடல் கருகி முதியவர் ஒருவர் இறந்தார். ஆடுகளை காப்பாற்ற சென்ற போது தீயில் சிக்கினார்.
அந்தியூர் அருகே உள்ள மாத்தூர் புதுவலவு பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (வயது 85). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி காளியம்மாள் (75). இவர்கள் குடிசை வீட்டில் வசித்து வந்தனர். அந்த வீட்டின் ஒரு பகுதியில் 3 ஆடுகளையும் துரைசாமி வளர்த்து வந்தார்.
வழக்கம்போல் ஏப்ரல் 17 இரவு 2 பேரும் சாப்பிட்டு விட்டு வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். நள்ளிரவு 1.30 மணி அளவில் திடீரென்று துரைசாமியின் குடிசை வீடு திடீரென்று தீப்பிடித்து எரிய தொடங்கியது. இதனை கவனித்த அக்கம் பக்கத்தினர் சத்தம் போட்டு கத்தி அவர்களை எழுப்ப முயன்றனர். ஆனால் வீடு தீப்பிடித்து எரிவது கூட தெரியாமல் 2 பேரும் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தனர். எனவே 2 பேரும் எழுந்திருக்கவில்லை.
வீடு கொளுந்துவிட்டு எரிந்ததும் தீயின் வெப்பம் தாங்காமல் அயர்ந்து தூங்கி கொண்டிருந்த 2 பேரும் திடுக்கிட்டு எழுந்தனர். அப்போது வீடு தீப்பிடித்து எரிந்ததை கண்டதும் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அவர்கள் 2 பேரும் சுதாரித்து கொண்டு சட்டென்று வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதற்கிடையே குடிசை வீடு முழுவதும் தீ பரவியது.
அப்போது வீட்டின் ஒரு பகுதியில் கட்டப்பட்டிருந்த 3 ஆடுகள் தீயின் வெப்பம் தாங்காமல் சத்தம் போட்டு அலறின. ஆடுகளின் அலறல் சத்தம் கேட்டு மனம் துடித்த துரைசாமி தன்னுடைய ஆடுகளை காப்பாற்றுவதற்காக வீட்டுக்குள் ஓடினார். அப்போது எரிந்து கொண்டிருந்த வீட்டின் மேற்கூரை தொப்பென்று அவர் மீது விழுந்து அமுக்கியது. இதில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே துரைசாமி பரிதாமாக இறந்தார். மேலும் இந்த தீ விபத்தில் 3 ஆடுகளும் தீயில் கருகி இறந்தன.
அதுமட்டுமின்றி ஆட்டைக் காப்பாற்றச் சென்ற துரைசாமியை காளியம்மாள் தடுக்க முயன்றபோது அவருக்கும் தீக்காயம் ஏற்பட்டது. உடனே அங்கிருந்தவர்கள் காளியம்மாளை மீட்டு சிகிச்சைக்காக அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
இதுபற்றி அறிந்ததும் அந்தியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவ விடாமல் தடுத்து அணைத்தனர். எனினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று துரைசாமியின் உடலை கைப்பற்றி அந்தியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். போலீசார் நடத்திய முதல் கட்ட விசாரணையில், ‘மின்கசிவு காரணமாக தீப்பொறி ஏற்பட்டு குடிசை வீடு தீப்பிடித்து எரிந்தது,’ தெரியவந்தது. போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றிய தகவல் கிடைத்ததும் வெள்ளித்திருப்பூர் வருவாய் ஆய்வாளர் ஜமுனா ராணி, கிராம நிர்வாக அதிகாரி பாபு ஆகியோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீப்பிடித்து எரிந்து சாம்பல் ஆன வீட்டை பார்வையிட்டனர்.
குடிசை வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் உடல் கருகி முதியவர் இறந்த சம்பவம் அந்தியூர் அருகே பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ்ச்சமூகம் மனிதர்களை மட்டுமின்றி மற்ற உயிர்களையும் நேசிக்கும் சமூகம் என்பதற்கான எடுத்துக்காட்டுதான் இந்நிகழ்வு என்று சொல்கின்றனர்.


