
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன், ஜெயக்குமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் உள்ளிட்ட ஏழு பேர் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் அடைபட்டுள்ளனர். இவர்களை விடுதலை செய்ய 2014-ம் ஆண்டு தமிழக அரசு முடிவெடுத்தது.
இந்த வழக்கில் மத்திய அரசின் நிலைப்பாட்டை அறிவதற்காக, தமிழக அரசு கடிதம் எழுதியது. மாநில அரசின் முடிவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது மத்திய அரசு. உச்ச நீதிமன்றத்தின் ஐந்து பேர் கொண்ட அமர்வு, ‘மாநில அரசுக்கு விடுதலை செய்ய அதிகாரம் இல்லை’ எனத் தீர்ப்பளித்தது.
இருப்பினும், கடந்த மார்ச் மாதம் 2-ம் தேதி தமிழக தலைமை செயலாளர் ஞானதேசிகன் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பினார்.
‘ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற ஏழு பேரும் தமிழக அரசுக்கு மனு அனுப்பி உள்ளனர். ஆயுள் தண்டனை பெற்ற அவர்கள் 24 ஆண்டுகளாக சிறையில் இருப்பதால், அவர்களை விடுதலை செய்யலாம் என தமிழக அரசு கருதுகிறது. இது சம்பந்தமாக தங்களது முடிவை தெரிவிக்க வேண்டும்’ என்று அதில் கூறப்பட்டு இருந்தது.
‘தேர்தல் நேரத்தில் முடிவெடுப்பது அரசியல் ஆதாயத்திற்காகத்தான்’ என்றெல்லாம் அப்போது விமர்சிக்கப்பட்டது.
இந்நிலையில் ஏப்ரல் 19 அன்று மத்திய உள்துறை செயலர் ராஜீவ் மெக்ரிஷி, தமிழக உள்துறை செயலர் ஞானதேசிகனுக்கு அனுப்பிய கடிதத்தில், ” முருகன், சாந்தன், பேரறிவாளன், நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகிய ஏழு பேர் விடுதலை தொடர்பாக தமிழக அரசு அனுப்பிய கடிதம் குறித்து, மத்திய சட்ட அமைச்சகத்தின் கருத்து கேட்கப்பட்டது. அதனடிப்படையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால் 7 பேரை விடுதலை செய்ய மத்திய அரசுக்கு அதிகாரம் இல்லை. மேலும், இந்த விவகாரத்தில் யாராலும் தற்போது எந்தவித முடிவும் எடுக்க முடியாது” என தெரிவித்துள்ளார்.
தமிழக அரசின் கடிதமும் மத்திய அரசால் நிராகரிக்கப்பட்டுள்ள நிலையில், தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி மாநில அரசு தன்னிச்சையாக விடுதலை செய்யலாம் என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக, நாம் பேரறிவாளனின் தாய் அற்புதம் அம்மாளிடம் பேசினோம். பேசவே முடியாமல் பல இடங்களில் கதறி அழுதார்.” இந்தத் தேர்தலில் ஓட்டுப் போட அறிவு வந்துடுவான்னு நம்பினேன். இப்படி நம்பி நம்பி ஏமாந்து போறதே எனக்கு வழக்கமாப் போச்சு. இப்பவும் முதல்வரைத்தான் நம்பி இருக்கோம். இந்தமுறை மத்திய அரசு மறுக்காதுன்னு சொன்னாங்க. தேர்தலை எதிர்கொள்றதுக்கு முன்னால, ‘விடுதலை செய்வார் முதல்வர் அம்மா’ன்னுதான் சொன்னாங்க. அதை நம்பித்தான் இருந்தோம். அவர் பிரசாரத்தைத் தொடங்கினதும் மனசுக்கு கஷ்டமாயிடுச்சு.
வழக்கு நிலுவையில் இருக்குன்னு காரணம் காட்டறாங்க. இந்த வழக்கைப் பொறுத்தவரையிலும், முதல்வர் முன்னாடியே இந்தப் பிரச்னையை கையில் எடுத்ததால, எப்ப வேணாலும் நடவடிக்கை எடுக்கலாம்னு தேர்தல் கமிஷன் சொல்லிடுச்சு. ‘தேர்தலுக்கும் விடுதலைக்கும் சம்பந்தமில்லை. புது அறிவிப்பு மட்டும்தான் வெளியிடக் கூடாது’ன்னு லக்கானி விளக்கம் கொடுத்தார். முதல்வர் அம்மா தயங்காமல் உடனே நடவடிக்கை எடுக்கணும். நிலுவையில இருக்கற வழக்கை மாநில அரசே கவனிக்கணும். போகப் போக அவனும் நோய்க்காரனா மாறிட்டு இருக்கான். பெரிய பொண்ணு வீட்டுல அறிவு அப்பா உடல் நலமில்லாம படுத்துக் கிடக்கார். அவர் நம்பிக்கை இழந்துட்டார். ஒவ்வொரு முறையும் ஏமாறும்போது, இப்படியே கடைசி வரையில ஏமாத்திருவாங்களான்னு அழுகறார். எங்க ரெண்டு பேருக்கும் ஏதாவது நடந்துட்ட பிறகு, அறிவை விடுதலை பண்ணி என்னப்பா பிரயோஜனம்? நாங்க செத்த பிறகு அவனால, இறுதி வாழ்க்கையை நிம்மதியா வாழ முடியுமா? இதை எப்படி வெளிப்படுத்தறதுன்னு தெரியலைப்பா…” என்றவாறு கதறியழுதார் அவர்.


