தமிழகத்தில் மட்டும்தான் முதல்வரே சாராய ஆலை முதலாளியாக இருக்கிறார் – சீமான் வேதனை

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தேர்தல் பரப்புரையில் பல்வேறு இடங்களில் கலந்து கொண்டு பேசியதாவது:-

பல்வேறு அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறார்கள். ஆனால் நாம் தமிழர் கட்சி பல்லாயிரக்கணக்கான மக்களோடு கூட்டணி வைத்து போட்டியிடுகிறது. இங்கே போட்டியிடுபவர்கள் வேட்பாளர்கள் அல்ல, தலைவர்கள் அல்ல, உங்கள் வீட்டு பிள்ளைகள். அவர்களுக்கு இரட்டை மெழுகுவர்த்தி சின்னத்தில் வாக்களிக்க வேண்டும். அ.தி.மு.க., தி.மு.க. இல்லாத ஒரு மாற்று அரசியலை தமிழகத்தில் கொண்டு வரவேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விவசாயத்திற்கு முன்னுரிமை கொடுப்போம்.

ஒவ்வொரு முறை தேர்தலின்போது கச்சத்தீவை மீட்போம் என தி.மு.க. தேர்தல் அறிக்கை வெளியிடுகிறது. கச்சத்தீவை மீட்க இதுவரை எந்தவித போராட்டமும் தி.மு.க. நடத்தவில்லை. தற்போது தேர்தல் அறிக்கையில் கச்சத்தீவை மீட்போம் என மக்களை ஏமாற்றி வருகிறது. ஆனால் தி.மு.க.வுடன் கூட்டணி வைத்த காங்கிரஸ் கச்சத்தீவு கொடுத்தது, கொடுத்தது தான் என கூறியிருக்கிறது. இதில் தி.மு.க.வின் நிலைபாடு என்ன என்பதை மக்களுக்கு விளக்கிட வேண்டும்.

காமராஜர் ஆட்சி காலத்தில் ஊழல், லஞ்சம் இல்லை. மது கொள்கை இல்லை. தமிழகத்தில் மதுவை அறிமுகப்படுத்தியது தி.மு.க. தான். கூடங்குளத்தில் அணுஉலை கொண்டு வந்ததற்கு தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகள் தான் காரணம். மீத்தேன் திட்டத்திற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து போட்டது தி.மு.க. ஆட்சியில் தான்.

தேர்தல் நேரத்தில் மக்களுக்கு பணத்தைகொடுத்து அடிமைப்படுத்தியுள்ளனர் இந்த இரு கட்சியினரும். கனிம வளங்களையும், தண்ணீர், காற்று உள்ளிட்ட இயற்கை வளங்களையும் இந்த இரு கட்சிகளும் கடந்த 50 ஆண்டுகளாக ஆட்சி செய்து கொள்ளையடித்து அவர்களது கஜானாக்களை நிரப்பிவிடடனர்.

இயற்கை வள கொள்ளையால் காடுகளில் உள்ள மிருகங்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் மனிதர்கள் வாழும் இடங்களுக்கு படையெடுக்கிறது. பறவை இனங்கள் அழிவை நோக்கி செல்கிறது.

தமிழகத்தில் மட்டும் தான் தமிழக முதல்வர்களாக இருப்பவர்கள் சாராய ஆலைகளுக்கு முதலாளியாக இருக்கிறார்கள். வேறு எந்த மாநிலத்திலும் இதுபோல் இல்லை.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Response