காட்டுக்குள் சென்று விறகு பொறுக்கி அதை விற்று வாழ்கிறார் நாயகன் விதார்த். அதேசமயம் சட்டவிரோதமாக மரங்களை வெட்டிக் கடத்தும் கூட்டத்துக்கு எந்த வகையிலும் துணைபோகாமலும் அதற்கு எதிராகவும் பேசிக்கொண்டிருக்கிறார்.
ஒரு கட்டத்தில் தன்னுடைய நண்பனுக்காக சந்தனமரம் வெட்டிய குற்றத்தை ஏற்றுக்கொண்டு சிறைக்குப் போகிறார். வழக்கம்போல அந்த நண்பன் இரண்டகம் செய்துவிடுகிறார். அதன்பிறகு அந்த நண்பனைப் பழிவாங்குவதுதான் வழக்கமான திரைப்படங்கள். இந்தப்படத்தில் கொஞ்சம் பரந்தமனப்பான்மையுடன் யோசித்திருக்கிறார் இயக்குநர்.
வில்லனைப் பழிவாங்காமல், அவனையும் பாதுகாத்து அவனது குறுக்குப்புத்தியால் மக்களும் வனமும் பாதிக்கப்படாமல் காக்கவேண்டும் என்று நினைக்கிறார் விதார்த். சிறைக்குள் சமுத்திரக்கனியிடம் அப்பாவியாய் பல விளக்கங்களைக் கேட்டுக்கொள்ளும்போதும், நாயகி சம்ஸ்கிருதியிடன் காதல்விளையாட்டுகளில் ஈடுபடுகிறபோதும் முருமையாக இருக்கிற விதார்த் புரட்சிக்காரராக வசனம் பேசும்போது கொஞ்சம் குறைவாகவே தெரிகிறார்.
நாயகியாக நடித்திருக்கும் சம்ஸ்கிருதி நல்லவரவு. சிறைக்குப் போய்க் காதலனைப் பார்த்துவிட்டு வந்தசெய்தி வீட்டுக்குத் தெரிந்துவிட்டதால் முந்திக்கொண்டு சிறைக்குப்போய்விட்டு வந்த விசயத்தைச் சொல்லுவதாகட்டும், விதார்த்தோடு காதல்விளையாட்டுகளில் ஈடுபடுவதாகட்டும் எல்லா இடங்களிலும் நன்றாக நடித்திருக்கிறார். அவருடைய நிறமும் உடைகளும் அந்தக்கிராமத்தைச் சேர்ந்த பெண் என்று சொல்லப்பொருத்தமாக இல்லை.
படத்தில் கொஞ்சநேரமே வந்தாலும் சமுத்திரக்கனி கவனிக்கப்படுகிற இடத்தில் இருக்கிறார். அவர் கண்முன்னாலேயே ஒரு அப்பாவிக்கலைஞரைப் போட்டு அடித்துத்வைக்கும்போது அசராமல் பார்த்துக்கொண்டிருக்கும் காட்சியில் தலைமைப்பண்பைச் சுட்டுகிறார் இயக்குநர். அதைச் சரியாக வெளிப்படுத்தியிருக்கிறார் சமுத்திரக்கனி.
மரணத்தை உண்ணுகிறோம் என்றுதெரிந்தும் கம்பீரமாக லட்டை உண்ணும் காட்சி சிறப்பு. ‘சமாதானக்காலத்தில் எல்லாம் அதிகாரங்களே வெற்றி பெற்றிருக்கின்றன’, ‘ஏமாற்றுபவர்களுக்கும் ஏமாறுபவர்களுக்கமான உலகமாக இது இருக்கிறது, என்னால் இரண்டாகவும் இருக்கமுடியவில்லை’, ‘மரம் நம் முன்னோரின் ஆன்மா, அதை வெட்டுகிறவனை நீ வெட்டு’ என்பது உட்பட சமுத்திரக்கனி பேசுகிற வசனங்கள் எல்லாமே நிற்க அதற்குத்தக என்பதாகவே இருக்கின்றன.
கே இசையமைப்பில் யுகபாரதியின் பாடல்கள் நன்று. இறுதிப்பாடல், போராளிகளுக்கு ஊக்கம் கொடுக்கிற வகையில் அமைந்திருக்கிறது. மு.காசிவிஸ்வநாதனின் படத்தொகுப்பு படத்துக்குப் பலமாக அமைந்திருக்கிறது.
உயிர் வாழ்வதற்காகக் காட்டிலிருந்து எதை வேண்டுமானாலும் எடுப்போம் ஆனால் வசதியாக வாழ்வதற்காக ஒரு செடியைக்கூடப் பிடுங்கமாட்டோம் என்பதைத் திரும்பத் திரும்பச் சொல்வதும், இறுதியல் வனம் பற்றித் தெரிந்தவர்களே வனஅதிகாரிகளாக வரவேண்டும் ஆகிய கருத்துகளுக்காக இயக்குநர் ஸ்டாலின்ராமலிங்கத்தையும் இதைப்படமாக்கிய தயாரிப்பாளர் நேருநகர்நந்துவையும் பாராட்டலாம்.