விஜய்க்கு சீமான் கொடுத்த புத்தகம் சொல்லும் செய்தி என்ன?

நேற்று, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை அவரது இல்லத்தில் சந்தித்தார் விஜய். அச்சந்திப்பின்போது சீமான், விஜய்க்கு ‘வையத் தலைமை கொள்’ என்ற நூலைப் பரிசாக வழங்கினார்.

இது மகாகவி பாரதியாரின் ஆவேசமிக்க வரிகளான “வையத் தலைமை கொள்” என்பதனைத் தலைப்பாகக் கொண்டு,முன்னாள் தலைமைச் செயலாளர் வெ.இறையன்புவால் எழுதப்பட்ட தலைமைத்துவ மற்றும் சுயமுன்னேற்ற நூலாகும்.

‘வையத் தலைமை கொள்’ என்பது வெறும் சொல்லல்ல;அது மாபெரும் பொறுப்பு.ஒரு மாநிலத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுள்ள ஒருவர்,மிகச்சிறந்த,அறம் சார்ந்த நிர்வாகத்தைக் கொடுத்து,உலகிற்கே முன்னோடியான தலைவராக உருவெடுக்க வேண்டும் என்ற பெருநோக்கத்தின் அடையாளமாக அந்த நூல் வழங்கப்பட்டிருக்கின்றது.

இறையன்புவின் இந்நூல்,ஆளுமைத்திறன்,நேர மேலாண்மை,மற்றும் நெருக்கடிகளைக் கையாளும் விதம் ஆகியவற்றைப் போதிக்கிறது.ஒரு மாநிலத்தை ஆளும் தலைவனுக்கு இத்தகைய பண்புகள் நாளுக்கேற்ப இன்றியமையாதவை.அவற்றை நினைவூட்டும் கருவியாகவே இந்நூல் அமைகிறது.

அரசியல் களம் என்பது எண்ணற்ற சவால்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தது.பாரதியின் வரிகள்,எதற்கும் அஞ்சாத நெஞ்சுறுதியைக் குறிப்பவை.எவ்வித சமரசமுமின்றித் துணிவுடன் மக்கள் பணியாற்றி,தமிழ்ச்சமூகத்தின் உரிமைகளை நிலைநாட்ட வேண்டும் என்ற ஊக்கத்தை அளிப்பதாகவும் இது அமைகிறது.தனது துறையில் எவ்வாறு தனித்துவமிக்க தலைவனாக உருவெடுப்பது என்பதை இந்நூல் ஆழமாகப் பேசுகின்றது.

அரசியல் களத்தில் அடிப்படை அறிவும் முதிர்ச்சியும் அற்றவராக இருக்கும் விஜய், தற்கால அரசியல் சூழலைப் புரிந்துகொண்டு தன்னைத் தகுதியுள்ளவராக மேம்படுத்திக் கொள்ளவேண்டும் என்ற உயரிய நோக்கத்தில் சீமான் இந்நூலை வழங்கியுள்ளார்.

அறியாமை என்னும் காரிருளை அகற்றி,அறிவு என்னும் பேரொளியை ஒருவர்தம் நெஞ்சில் ஏற்றுவது உலகிலேயே மிக உயர்ந்த அறமாகும்.பசியைப் போக்குவது ஒரு நாளுக்கான தீர்வைத் தரும்;ஆனால்,ஒருவரின் அறியாமையைப் போக்குவது ஒரு தலைமுறைக்கான விடுதலையைத் தேடித்தரும்.ஒருவருக்கு தகுந்த வழிகாட்டுதல்களை வழங்குவது ஒரு சிறந்த தலைவனுக்கும்,சமூகச் சிந்தனையாளருக்கும் அழகாகும்.
இது வெறும் நூல் பரிமாற்றம் அல்ல;மாபெரும் பொறுப்பைச் சுமக்கும் ஒருவருக்கு,அனுபவமும் அக்கறையும் கலந்த ஓர் அகப்பரிமாற்றமாகவே இதைக் கருத முடிகிறது.இது உயரிய எண்ணம் கொண்ட உயரிய மனிதர் சீமானின் உயரிய கொடை.

– குமரன்

Leave a Response