
தமிழ்நாட்டில் நடிகர் விஜய்யின் தவெகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால், பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சியமைக்க ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் ஆகியோர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க தலா ரூ.50 கோடி வரை பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்பேரில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தலைமையில் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் 30 க்கும் மேற்பட்டோர் புதுவை, தவளக்குப்பம் அருகே புதுக்குப்பம் பிரபல நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் புதுவை வந்துள்ள அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களைச் சந்திக்க புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் சமஉ நேற்று மாலை சென்றார்.
அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது….
தமிழ்நாடு ஆளுநர் தற்போது எடுத்துள்ளது சரியான நடவடிக்கைதான்.ஏனென்றால் பெரும்பான்மையை நிரூபித்து ஆட்சி அமைக்க 118 இடங்கள் இருக்கவேண்டும்.ஆனால் தவெக 108 தொகுதியில் வெற்றிபெற்றுள்ள நிலையில் ஒரு தொகுதியில் இடைத்தேர்தல் வந்துவிடும்.ஆகையால் தவெகவிடம் 107 உறுப்பினர்களும், காங்கிரசிடம் 5 உறுப்பினர்களும் என மொத்தம் 112 உறுப்பினர்கள்தான் உள்ளனர். எனவே, 118 என்கிற பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டியது தவெகவின் கடமை. இதனை நிரூபிக்காமல் ஆட்சியமைக்க ஆளுநர் ஒப்புதல் அளித்தால் அவரின் செயல்பாடு சந்தேகத்திற்குள்ளாகிவிடும். எனவே அவர் இந்திய அரசியலமைப்புச் சட்டப்படி சரியான பாதையில்தான் செல்கிறார்.
எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் ஆட்சியமைக்க ஆளுநரைச் சந்திக்கச் செல்கிறார் என்றால் 118 சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவுக் கடிதங்களுடன்தான் செல்வார்.திமுகவிடம் அதிமுக ஆதரவு கோருமா என்பது எனக்குத் தெரியாது.ஆனால் அதுபோன்ற ஒரு அதிசயம் நடக்கலாம்.தவெக கூட எங்களுக்கு ஆதரவு கொடுக்கலாம், இப்போதைய சூழ்நிலையில் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம்.
1968 இல் பேரறிஞர் அண்ணாவால் துரத்தியடிக்கப்பட்ட காங்கிரசு கிட்டத்தட்ட 52 ஆண்டுகளுக்குப் பிறகு பதவியின் சுகத்துக்காக தன்மானத்தை விட்டுவிட்டு எதிரெதிர் அணியில் போட்டியிட்ட போதிலும், மு.க.ஸ்டாலினுக்கு துரோகம் செய்துவிட்டு நேற்று வந்த விஜய் பின்னாடி காங்கிரசு ஓடுகிறது.எனவே தேசியக் கட்சியான காங்கிரசு சரியான நிலைப்பாட்டில் இல்லை.
நாங்கள் தவெக பக்கம் வந்து விஜய்க்கு ஆதரவு தருகிறோம்.எனவே, நீங்களும் வாருங்கள் என கம்யூனிஸ்டை அழைக்கிறார்கள்.இந்தச்செயல் விஜய்யை முதலமைச்சராக்க காங்கிரசு அதிகாரப் பதவி வெறிபிடித்து புரோக்கர் வேலை செய்கிறது.அதனை திராவிடக் கட்சிகளான நாங்கள் நிச்சயமாக முறியடிப்போம்.
எனவே அதிமுகவின் ஆதரவு தவெகவுக்கு 100க்கு 200 சதவீதம் கட்டாயம் கிடையாது.சென்னையில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளதால் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரிக்கு வருகை புரிந்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில்,தவெககூட எங்களுக்கு ஆதரவு தரலாம் என்று அவர் சொல்லியிருப்பது கவனிக்கத்தக்கதாக இருந்து அரசியலரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.


