முன்பு யாரையும் மதிக்காத விஜய் இன்று எல்லாக் கட்சிகளிடமும் கெஞ்சுகிறார் – விமர்சனங்கள்

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் 108 இடங்களில் வெற்றி பெற்ற நடிகர் விஜய்யின் தவெக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எனினும், ஆட்சி அமைக்க 118 இடங்கள் தேவை என்ற சூழலில், காங்கிரசின் ஆதரவை விஜய் கோரினார்.உடனே, 5 காங்கிரசு சட்டமன்ற உறுப்பினர்களும் விஜய்யிடம் தங்கள் ஆதரவுக் கடிதத்தை 6 ஆம் தேதியே வழங்கினர்.

இதையடுத்து,அன்றைய தினமே ஆளுநர் மாளிகைக்குச் சென்ற விஜய், தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ஆர்.வி.அர்லேகரை சந்தித்து, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.ஆனால்,பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்கள் இல்லாததால், ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.

இந்நிலையில்,விஜய் நேற்று காலை மீண்டும் ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆளுநரைச் சந்தித்தார்.அப்போது, சட்டநுணுக்கங்களுடன் கூடிய பல்வேறு ஆவணங்களை விஜய் அளித்துள்ளார்.ஆட்சி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து சுமார் 40 நிமிடங்கள் அவர்கள் ஆலோசனை நடத்தினர்.

அப்போது ஆளுநர் அர்லேகர், ஆட்சி அமைக்க உரிமை கோருவதற்கு முன்பே,அதற்கு தேவையான 118 உறுப்பினர்களின் ஆதரவு உங்களிடம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். பெரும்பான்மை பலம் இல்லாத நிலையில், ஆட்சி அமைக்க அழைப்பு விடுக்க முடியாது’ என்று உறுதிபடத் தெரிவித்தார்.

இதுகுறித்து ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட விளக்கத்தில் கூறியிருப்பதாவது….

சென்னையில் உள்ள ஆளுநர் மாளிகைக்கு தவெக தலைவர் சி.ஜோசப் விஜய்யை ஆளுநர் ஆர்.வி.அர்லேகர் அழைத்தார். சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவு என்பது,ஆட்சி அமைப்பதற்கு இன்றியமையாதது.அது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதை இந்தச் சந்திப்பின்போது ஆளுநர் விளக்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதன்பிறகு,சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள தனது அலுவலகத்துக்குத் திரும்பிய விஜய்,கட்சியின் முக்கிய நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.தேவைப்படும் 5 இடங்களுக்கு விசிக மற்றும் இடதுசாரிக் கட்சிகளிடம் பேச்சுவார்த்தையை தீவிரப்படுத்துவது,திமுக கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவைக் கோருவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.ஆளுநரின் முடிவை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வாய்ப்பு உள்ளதா,திமுக கூட்டணி கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து ஆதரவு கோருவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது.

இதைத் தொடர்ந்து, திமுக கூட்டணிக் கட்சிகளிடம் ஆதரவு கோரும் நடவடிக்கையில் தவெக முக்கிய நிர்வாகிகள் நேரடியாக இறங்கினர்.

சென்னை தியாகராய நகரில் இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் ஆகியோரை தவெக துணைப்பொதுச்செயலாளர் சிடிஆர்.நிர்மல்குமார் சந்தித்து, தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கோரினார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்,விசிக,கம்யூனிஸ்ட் கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ளோம். ஆலோசித்துவிட்டு முடிவை அறிவிப்பார்கள்.விஜய் ஏற்கெனவே கூறியபடி,எங்களுடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சியிலும், அதிகாரத்திலும் கட்டாயம் பங்கு வழங்கப்படும் என்றார்.

சென்னை மண்ணடியில் உள்ள இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அலுவலகத்தில் கட்சித் தலைவர் காதர் மொகிதீன், மாநிலப் பொதுச்செயலாளர் முஹம்மது அபூபக்கர் உள்ளிட்ட நிர்வாகிகளை தவெக கொள்கைபரப்புச் செயலாளர் அருண்ராஜ் நேற்று சந்தித்து ஆதரவு கோரினார்.

அவரிடம் காதர் மொகிதீன்,நாங்கள் திமுக கூட்டணியில் உள்ளோம். திமுக எடுக்கும் நிலைப்பாடுதான் எங்கள் நிலைப்பாடு. ஸ்டாலின் சொன்னால் ஆதரவு அளிக்கிறோம் என்று கூறியுள்ளார்.கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் இதுகுறித்து ஆலோசிப்பதாகவும் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவனிடம் தவெக முக்கிய தலைவர்கள் தொலைபேசி வாயிலாக பேசியதாகக் கூறப்படுகிறது.அவரை நேரில் சந்திக்கவும் திட்டமிட்டுள்ளனர்.

இதனால்,தேர்தல் நேரத்தில், தமிழ்நாட்டில் இரண்டே கட்சிகள்தாம் ஒன்று தவெக இன்னொன்று திமுக என்று பேசிவந்தார் விஜய்.அதிமுகவையே மற்றவர்கள் என்று மிக அலட்சியமாக விமர்சித்தார்.ஆனால்,இப்போது சின்னச் சின்னக் கட்சிகளிடம் கூட நேரில் சென்று கெஞ்சிக்கொண்டிருக்கிறார் என்று விமர்சனங்கள் வந்துகொண்டிருக்கின்றன.

Leave a Response