ஆதரவு கொடுத்தால் ஆளுக்கு 50 கோடி – பேரம் பேசிய விஜய் கடுப்பான எடப்பாடி

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் அறுதிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. முதல்முறையாகக் களம் கண்ட விஜய் தலைமையிலான தவெக 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.

ஆட்சி அமைக்க குறைந்தது 118 தொகுதிகள் அவசியம்.ஆனால் தவெக 108 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.அதிலும் விஜய் ஒரு தொகுதியில் இருந்து விலகவேண்டும்.அப்படிச் செய்யும்போது 107 தொகுதிகள்தாம் உள்ளன. இருந்தாலும், தனிப்பெரும் கட்சியாக இருப்பதால் தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைக்க வேண்டும் என விஜய் கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்தநிலையில், காங்கிரசு உறுப்பினர்கள் 5 பேரும் தவெகவுக்கு ஆதரவு அளித்து கடிதம் கொடுத்தனர்.

இதனிடையே, தவெகவுக்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க அதிமுக முடிவு செய்யவேண்டும் என்று தவெக தரப்பில் தூது விட்டதாகக் கூறப்படுகிறது.இந்தநிலையில்,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நேற்று சென்னை, இராயப்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில், அதிமுகவின் நிலைப்பாடு தொடர்பாக முக்கிய முடிவு எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், நேற்று காலை நடக்கவிருந்த அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் திடீரென இரத்து செய்யப்பட்டது.பின்னர் மாலையில் எடப்பாடி பழனிச்சாமியின் வீட்டில் சட்டமன்ற உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் 3 நாட்கள் சென்னையில் தங்கியிருக்க வேண்டும். தலைமையில் இருந்து உத்தரவு வரும்வரை சென்னையை விட்டு வெளியில் எங்கும் செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டிருக்கிறது.

இதனிடையே, சென்னை, ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள முன்னாள் அமைச்சரும் தற்போது சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றுள்ள சி.வி.சண்முகத்தின் உறவினர் வீட்டில் நேற்று காலை தனியாக ஒரு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.அந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் வேலுமணி, பவானி தொகுதி கே.சி.கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசித்தனர். இந்த ஆலோசனை பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், எடப்பாடி பழனிச்சாமியை கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம், சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று மாலை சந்தித்துப் பேசினர்.

அந்தச் சந்திப்புக்குப் பிறகு அதிமுக துணைப்பொதுச்செயலாளர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களிடம் கூறும்போது….

தவெகவுக்கு ஆதரவு அளிப்பதாக வெளியான தகவல் முற்றிலும் தவறு.எந்தச் சூழ்நிலையிலும் தவெகவுக்கு அதிமுக ஆதரவு வழங்கவில்லை.அதிமுக பெரிய இயக்கம்.தவெகவுக்கு எந்தச்சூழலிலும் ஆதரவு அளிக்காது என்பதை எடப்பாடி பழனிச்சாமி அனுமதியுடன் கூறுகிறேன் என்று கூறினார்.

இந்த அறிவிப்புக்குப் பின்னால் பெரும்கதை இருக்கிறதென்கிறார்கள்.

அது என்னவெனில்?

ஆட்சியமைக்க தனக்கு ஆதரவு தரவேண்டும் என்பதற்காக நடிகர் விஜய், ஆதவ் அர்ஜூனா, செங்கோட்டையன் ஆகியோர் மூலம்,அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை இழுக்க தலா ரூ.50 கோடி வரை பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. இதனால்,கடுங்கோபமடைந்த எடப்பாடி பழனிச்சாமி இந்த முடிவை எடுத்திருப்பதாகக் கூறப்படுகிறது.

Leave a Response