
தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல், வருகிற 23 ஆம் தேதி நடைபெறுகிறது.இத்தேர்தலில், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளின் தலைமையில் கூட்டணிக் கட்சிகள் போட்டியிடுகின்றன. நாம் தமிழர் கட்சி, தவெக,அஇபுதமமுக ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.
இந்தத் தேர்தல் தொடர்பாக இதுவரை நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் திமுக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று தெரியவந்துள்ளது.
திமுக அரசு,தமிழ்நாட்டில் நேர்மையான, திறமையான அதிகாரிகளை முக்கிய பதவிகளில் நியமித்துள்ளனர். அவர்கள் தேர்தல்வரை நியாயமாக நடந்து அரசுக்கு நல்லபெயரை ஏற்படுத்துவார்கள்.இதனால் அவர்களை மாற்றிவிட்டு நமக்கு வேண்டியவர்களை நியமிக்கவேண்டும் என்று அதிமுகவும் பாஜகவும் திட்டமிட்டிருக்கின்றன என்று சொல்லப்பட்டது.அதை மெய்ப்பிக்கும் விதமாக நிகழ்வுகள் நடக்கின்றன.
காஞ்சிபுரம், நாகப்பட்டினம், விருதுநகர், ஈரோடு, கரூர், அரியலூர் உள்ளிட்ட 8 மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மாற்றம் செய்யப்பட்டனர். அதைத் தொடர்ந்து தமிழ்நாடு காவல்துறை தலைவர் வெங்கட்ராமன், தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ், மதுரை காவல் ஆணையர் லோகநாதன், மேற்கு மண்டல ஐஜி சரவணசுந்தரம் ஆகியோர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டனர். மேலும் டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் கமிஷனராக சஞ்சீவ்குமார், மதுரை கமிஷனராக தீக்ஷித், மேற்கு மண்டல ஐஜியாக ரம்யா பாரதி ஆகியோர் நியமிக்கப்பட்டனர்.
இந்தநிலையில் திடீரென நேற்று தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சாய்குமார் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் உடனடியாக நேற்று இரவு 8 மணிக்கு புதிய தலைமைச் செயலாளராகப் பதவி ஏற்றுக்கொண்டார். இவர்,கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சராக எடப்பாடி பழனிச்சாமி இருந்தபோது, அவருக்கு செயலாளராகப் பணியாற்றியவர்.
அதேபோல், ஆயுதப்படை மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சந்தீப் மிட்டல் நியமிக்கப்பட்டுள்ளார்.இவர், தீவிர ஆர்எஸ்எஸ் ஆதரவாளர். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு ஆதரவாகப் பல தகவல்களை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் ஒன்றிய அரசுப் பணியில் இருந்தபோது துணிச்சலாக சமூகவலைதளப் பக்கங்களில் ஆர்எஸ்எஸ் கருத்துகளை எழுதி வந்தார். பின்னர் தமிழ்நாடு அரசுப் பணிக்குத் திரும்பினார். அவர் ஒன்றிய அரசின் ஆதரவாளராக இருந்ததால் ஆரம்பத்தில் கடலோரக் காவல்படை ஏடிஜிபியாக நியமிக்கப்பட்டார்.பின்னர், சைபர் கிரைம் ஏடிஜிபியாக பதவியில் நியமிக்கப்பட்டார். பின்னர் டிஜிபியாக பதவி உயர்வு பெற்று அதே துறையில் நியமிக்கப்பட்டார். தற்போது அவர் ஆயுதப்படை மற்றும் இலஞ்ச ஒழிப்புத்துறை இயக்குநராக டேவிட்சன் தேவாசீர்வாதத்திற்குப் பதில் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆயுதப்படை காவலர்கள் நேரடியாக தேர்தல்பணியில் ஈடுபடுத்தப்படுவதால்,அந்தப் பிரிவின் இயக்குநராக இருந்த டேவிட்சன் மாற்றப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர் இலஞ்ச ஒழிப்புத்துறையை மட்டும் தனியாகக் கவனித்திருந்தால் மாற்றப்பட்டிருக்க மாட்டார். ஆயுதப்படையின் ஏடிஜிபியாக உள்ளதால் மாற்றியிருப்பார்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.
தலைமைச் செயலாளர் முருகானந்தம் மாற்றம் தமிழ்நாடு அதிகாரிகள் மட்டத்தில் பெரும் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது. மாவட்ட ஆட்சியர்கள் அனைவரும் தலைமைச்செயலாளரின் நேரடிக் கட்டுப்பாட்டில் வருவார்கள். இதனால் அவரை மாற்றிவிட்டு தங்களுக்கு விருப்பமான அதிகாரிகளை நியமித்து, தாங்கள் நினைத்ததைச் சாதிக்கலாம் என்று பாஜக நினைப்பதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
தேர்தல் ஆணையத்தின் இந்த நடவடிக்கைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
