தேசிய சனநாயகக் கூட்டணியில் டிடிவி.தினகரன் – எடப்பாடி வரவேற்பு

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்தநிலையில், டிடிவி தினகரனின் அமமுக கட்சி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்துள்ளது.அதிமுக தலைமையிலான கூட்டணியில் தற்போது வரை பாஜக, பாமக, தமாகா, புதிய நீதிக்கட்சி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் இந்தக் கூட்டணியில் இப்போது டிடிவி தினகரன் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்கவே முடியாது. பழனிச்சாமி இருக்கும் கட்சியில் கூட்டணியில் இருப்பதற்குப் பதில் தூக்கில் தொங்கிவிடலாம் என தே.ஜ கூட்டணியில் இருந்து வெளியேறிய டிடிவி தினகரன், கடும் விமர்சனங்களை முன்வைத்திருந்தார்.

தற்போது, அதிமுக இடம்பெற்றுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக இணைந்துள்ளது. சென்னையில் அமமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்துக்குப் பின்னர் டிடிவி தினகரன் இதனை அறிவித்தார்.

தொடர்ந்து சென்னையில் உள்ள நட்சத்திர விடுதியில் பாஜக தேர்தல் பொறுப்பாளர் பியூஷ் கோயலுடன் டிடிவி தினகரன் சந்திப்பு நடத்தினார். அப்போது ஒன்றிய அமைச்சர் எல்,முருகன், பாஜக மூத்த தலைவர் வானதி சீனிவாசன் ஆகியோர் உடன் இருந்தனர்.

இந்நிலையில், இது குறித்து எடப்பாடி பழனிச்சாமி தனது சமூகவலைதளத்தில், தீயசக்தி திமுகவின் கொடுங்கோல் ஆட்சியை வேரடி மண்ணோடு வீழ்த்திடவும், வாரிசு அரசியலுக்கு முற்றுப்புள்ளியை வைத்திடவும், ஜெயலலிதாவின் பொற்கால ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் அமைத்திட வேண்டும்.

இந்நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இன்றைய தினம் இணைந்துள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் மரியாதைக்குரிய டிடிவி.தினகரனை அன்போடு வரவேற்று,அவருக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மக்கள் நலன் ஒன்றே குறிக்கோளாகக் கொண்டு, நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து, திமுக குடும்பஆட்சியின் பிடியில் இருந்து மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் எனத் தெரிவித்துள்ளார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக,டிடிவி.தினகரனின் சமூகவலைதளப் பதிவில்,,,,

மக்கள் நலனை மையமாகக் கொண்டு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை மனதார வரவேற்று வாழ்த்திய அஇஅதிமுகவின் பொதுச்செயலாளர்
மதிப்பிற்குரிய திரு.எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழக மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கும் இதயதெய்வம் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் நல்லாட்சியை தேசிய ஜனநாயகக் கூட்டணியின் சார்பில் தமிழகத்தில் மீண்டும் அமைத்திட நாம் அனைவரும் ஒருங்கிணைந்து களப்பணியாற்றிடுவோம்.

கடந்த நான்கரை ஆண்டுகளாக இருளில் மூழ்கியிருக்கும் தமிழகத்திற்கும்,தமிழக மக்களுக்கும் புதியவெளிச்சத்தை பாய்ச்சிடும் சரித்திரமிக்க வெற்றியைப் படைத்திடுவோம்!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Response