
மகாராஷ்டிராவில் நகராட்சிகள், பேரூராட்சிகள் என 288 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2025 டிசம்பர் 2 ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது. அதில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி 207 நகராட்சிகளைக் கைப்பற்றியது.
அதன் தொடர்ச்சியாக, மும்பை உள்ளிட்ட 29 மாநகராட்சிகளுக்கு சனவரி 15 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இதில் மாநகராட்சிகளுக்கு ஏற்ப கூட்டணிகள் மாறின. இந்நிலையில், முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
மும்பை, புனே, நாக்பூர் மும்பை மாநகராட்சியில் மொத்தம் 227 வட்டங்கள் உள்ளன.அவற்றில் பாஜக 87 வட்டங்களில் வெற்றி பெற்றது. அதன் கூட்டணிக் கட்சியான ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா 27 வட்டங்களில் வெற்றி பெற்றது. இந்த மாநகராட்சியில் பெரும்பான்மையை நிரூபிக்க 114 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.
ஆளும் பாஜக கூட்டணி அறுதிப்பெரும்பான்மையை எட்டி மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றி உள்ளது.
உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா 62 வட்டங்களிலும், அதன் கூட்டணிக் கட்சியான ராஜ் தாக்கரேவின் மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா 9 வட்டங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.காங்கிரசு மற்றும் கூட்டணிக் கட்சிகளுக்கு 15 வட்டங்கள் கிடைத்தன.
இதன்மூலம்,சுமார் 30 ஆண்டுகளாக தாக்கரே குடும்பத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த மும்பை மாநகராட்சியில் முதல்முறையாக பாஜக தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது.
இதில் கவனிக்க வேண்டிய் ஒரு செய்தியும் இருக்கிறது.
மும்பையின் தாராவி பகுதியில் தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அங்கு உள்ள 7 வட்டங்களில் 4 வார்டுகளில் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, 2 வட்டங்களில் காங்கிரசு, ஒரு வட்டத்தில் ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா வெற்றி பெற்றுள்ளது.
தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் பகுதியில் 7 வட்டங்களில் 6 வட்டங்கள் பாஜக கூட்டணிக்கு எதிரான கட்சிகளுக்குக் கிடைத்துள்ளது. தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்பதற்கு ஒரு சான்று என அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.


