இருண்ட முகத்தோடு வெளியில் வந்த விஜய் – சிபிஐ விசாரணை விவரம்

நடிகர் விஜய், கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதியன்று கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் பரப்புரை செய்தார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் உத்தரவின்படி சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது. இதையடுத்து, இந்தச் சிக்கல் தொடர்பாக,டிசம்பர் 28, 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் விஜய் கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், தேர்தல் மேலாண்மைப் பிரிவு பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார் மற்றும் கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் சிபிஐ விசாரணைக்கு ஆஜராகினர்.

இதேபோல், கரூர் ஆட்சியர்,காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்டோரும் சிபிஐ விசாரணைக்காக டெல்லியில் நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்திருந்தனர்.

அவற்றையடுத்து, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஜனவரி 12 ஆம் தேதி ஆஜராக வேண்டும் என்று விஜய்க்கு சிபிஐ கடந்த வாரம் அழைப்பாணை அனுப்பி இருந்தது.

அதன்படி, நேற்று காலை விசாரணைக்கு ஆஜராக சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் டெல்லி சென்ற விஜய், சுமார் 11 மணி அளவில் சிபிஐ தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார்.

பிற்பகல் 11.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரையில் சிபிஐ அதிகாரி சுனில் குமார் தலைமையிலான அதிகாரிகள் விஜய்யிடம் சுமார் 7 மணி நேரம் விசாரணையை மேற்கொண்டனர்.

அப்போது, கரூர் பிரச்சாரத்தின் போது 41 பேர் எப்படி இறந்தனர்? காலதாமதமாக பிரச்சார இடத்திற்கு வந்தது ஏன்?, அதனால்தான் உயிரிழப்பு ஏற்பட்டதா? காலதாமதம் ஆனதற்கான சரியான காரணங்களை முன்னதாக காவல்துறைக்கு உங்கள் தரப்பில் இருந்து தகவலாக தெரிவிக்கப்பட்டதா? நீங்கள் பிரச்சார இடத்தில் வாகனத்தின் மேலே நின்று பேசும் போது உங்கள் கண் முன்னே பலர் மயங்கி விழுந்துள்ளனர்.அந்த எச்சரிகையும் மீறி நீங்கள் ஏன் சம்பவ இடத்திற்குச் சென்றீர்கள்? கூட்ட நெரிசலில் உயிரிழந்த 41 பேருக்கு யார் பொறுப்பு? உங்கள் வாகனம் சென்றதால்தான் அதிக நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டதா? என பல்வேறு கோணங்களில் 150 கேள்விகளை விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் கேட்டதாகச் சொல்லப்படுகிறது.

விஜய் கூறிய பதில் அனைத்தும் எழுத்துப்பூர்வமாக அவரிடம் எழுதி, அதில் ஜோசப் விஜய் என்று கையெழுத்து பெறப்பட்டு வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளப்பட்டது என்கிறார்கள்.

விஜய்யிடம் சிபிஐ அதிகாரிகள் விசாராணை மேற்கொண்ட போது, அக்கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்களாக கருதப்படும் ஜெகதீஷ் பழனிசாமி, அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா, ஸ்ரீ ராஜேந்திரன், நயும் ரஷீர் பண்டிட் வெற்றிவேல், விஷ்ணு ரெட்டி, ராம்குமார், நிர்மல்குமார் ஆகியோர் சிபிஐ அலுவலகத்தின் உள்ளேயே இருந்துள்ளனர். அதேபோன்று விஜய்யிடம் விசாரணை மேற்கொண்ட போது, அங்கு அவரது தரப்பு வழக்கறிஞர்கள் இருப்பதற்கு சிபிஐ அதிகாரிகள் அனுமதி வழங்கி இருந்தனர்.

முதல்கட்டமாக நேற்று மாலை நான்கு மணியுடன் விசாரணை முடிவடைந்த நிலையில், அதைத்தொடர்ந்து சுமார் இரண்டு மணி நேரம் விஜய் ஒரு அறையில் தனிமைப்படுத்தி அமர வைக்கப்பட்டிருந்தார். அப்போது, அவரிடம் செல்வதற்கு வழக்கறிஞர் உட்பட யாருக்கு சிபிஐ அதிகாரிகள் அனுமதிக்கவில்லை.

காலையில் மலர்ந்த முகத்துடன் விசாரணைக்குச் சென்ற விஜய்,வெளியில் வரும்போது இருண்ட முகத்துடன் வந்ததாக அங்கிருந்தோர் தெரிவிக்கின்றனர்.

கரூர் விவகாரம் தொடர்பாக இன்று 2 ஆவது நாளாக விஜயிடம் சிபிஐ விசாரணை மேற்கொள்ள இருந்த நிலையில் விஜய் தரப்பில் சிபிஐ அதிகாரிகளிடம் ஒரு கோரிக்கை வைக்கப்பட்டதாம். அதில் தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகை வர உள்ளதால் பொங்கல் பண்டிகைக்குப் பிறகு வேறு ஒருநாள் நீங்கள் அழைக்கும் நாளில் நான் நேரில் ஆஜராகி விளக்கம் தருகிறேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது.

விஜய்யின் கோரிக்கையை ஏற்று சி பி ஐ அதிகாரிகள் அடுத்த கட்ட விசாரணையை பொங்கல் விடுமுறைக்குப் பின்னர் ஒத்திவைத்துள்ளனர்.விசாரணை நடத்தவிருக்கும் நாள் பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

அதைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை திரும்புகிறார் விஜய் என்று சொல்லப்படுகிறது.

Leave a Response