
மகாராஷ்டிரா நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, தனது கட்சியைச் சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்களிடம் கலந்துரையாடினார்.
அப்போது பேசிய தாக்கரே, வாக்காளர் பட்டியலில் மோசடி மூலமாகத் தேர்தல் நடத்தப்பட்டால் அது வாக்காளர்களுக்கு மிகப்பெரிய அவமானமாகும். போலி வாக்காளர்களைக் கண்டறிவதற்கு வாக்காளர் பட்டியலை சரிபார்க்க வேண்டியது அவசியமாகும்.
பிராந்திய கட்சிகளை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது. வரவிருக்கும் தேர்தல்களுக்காக மகாராஷ்டிராவில் 96 இலட்சம் போலி வாக்காளர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதை அறிந்தேன். மாநிலத் தேர்தலின்போதும் அவர்கள்(பாஜக) இதனைச் செய்திருந்தனர். மும்பையில் 8 முதல் 10 இலட்சம் போலி வாக்காளர்களும், தானே, புனே மற்றும் நாசிக்கில் 8 முதல் 8.5 இலட்சம் போலி வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு கிராமத்திலும், நகரத்திலும் போலி வாக்காளர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2026 ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதிக்குள் முடிக்கப்பட உள்ள கிராமப்புற மற்றும் நகர்ப்புற அமைப்புத் தேர்தல்களுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் முரண்பாடுகளை நீக்க வேண்டும். வாக்காளர் பட்டியலைச் சரிபார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
2024 பாராளுமன்றத் தேர்தலில் மகாராஷ்டிராவில் தோல்வியைத் தழுவிய பாஜக கூட்டணி, அதன்பின் வாக்காளர் பட்டியலில் பெரும் மோசடி செய்தே மாநில சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றது என்கிற குற்றச்சாட்டை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன.
இந்நிலையில்,உள்ளாட்சித் தேர்தல்களிலும் அதேபாணியை பாஜக கூட்டணி பின்பற்றுகிறது என்று ராஜ்தாக்கரே குற்றம் சாட்டி இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


