
கேரளாவில் தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் 1 ஆம் தேதி தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு ஒரு வாரம் முன்பாக,மே 24 ஆம் தேதியே தொடங்கியது. அடுத்த நாளே பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை கொட்டியது. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
கோட்டயம், எர்ணாகுளம், இடுக்கி, திரிச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 11 மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கர்நாடகாவில் 2 வாரம் முன்பாகவே தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது. கடலோரப் பகுதிகள் மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை கொட்டி வருகிறது. இதனால், பல்வேறு ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. பல இடங்களில் பேரிடர் மீட்புப் படையினர் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
தலைநகர் பெங்களூருவுக்கு கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடலோர கர்நாடகாவில் அடுத்த 5 நாட்களுக்கு அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிராவில் மே 25 ஆம் தேதி பருவமழை தொடங்கியது. மும்பையில் அன்று இரவு முதல் நேற்று காலை வரை கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளான குர்லா, சியான், தாதர், பரேல் மற்றும் சுற்றியுள்ள இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்துள்ளது. சாலைகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. பல்வேறு சாலைகள், சுரங்கப் பாதைகளில் வெள்ளநீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது. புறநகர் ரயில் சேவை, வெளி மாநிலங்களுக்கான ரயில்சேவையும் பாதிக்கப்பட்டுள்ளது. சுமார் 250 விமான சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.மும்பைக்கும், தானே, ரத்னகிரி, ராய்காட் ஆகிய மாவட்டங்களுக்கும் அடுத்த 24 மணி நேரத்துக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழ்நாட்டில் மழை வாய்ப்பு தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது….
மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில், காற்றழுத்தத் தாழ்வு பகுதி இன்று உருவாக வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டில் இன்று (மே 27) முதல் 29 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் தரைக்காற்று மணிக்கு 40-50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மே 30 முதல் ஜூன் 1 ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இன்றும், நாளையும் கோவை மாவட்ட மலைப் பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டத்தில் ஒருசில இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
29 ஆம் தேதி கோவை மற்றும் திருநெல்வேலி மாவட்ட மலைப் பகுதிகள், நீலகிரி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிகக் கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இலேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.தமிழ்நாட்டில் நேற்று காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் 35 செ.மீ., மேல் பவானியில் 30 செ.மீ. மழை பெய்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


