
கடந்த ஆண்டு செப்டம்பர் 27 ஆம் தேதி கரூர் மாவட்டம் வேலுசாமிபுரத்தில் நடிகர் விஜய் கலந்து கொண்ட பரப்புரைக் கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் அடிப்படையில் சிபிஐ விசாரித்து வருகிறது. பல்வேறு தரப்பினரிடமும் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.விஜய் கட்சி நிர்வாகிகளிடம் நவம்பர் 24. 25 ஆகிய தேதிகளில் விசாரணை நடைபெற்றது.
சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித்சரண் ஆகியோர் டிசம்பர் 2, 3 ஆகிய தேதிகளில் கரூர் சென்று விசாரணை குறித்து ஆய்வு செய்தனர். மேலும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார்,காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் விசாரணைக்கு ஆஜராகுமாறு நடிகர் விஜய்க்கு சிபிஐ சனவரி 6 ஆம் தேதி அழைப்பாணை அனுப்பியது.
அதன்படி, இன்று காலை 11 மணி அளவில் டெல்லியில் உள்ள சிபிஐ தலைமை அலுவலகத்தில் அதிகாரிகள் முன்பு விஜய் ஆஜராகி வாக்குமூலம் அளிக்க உள்ளார். இதற்காக, இன்று காலை 7 மணிக்கு சென்னையில் இருந்து தனி விமானத்தில் விஜய் டெல்லி புறப்பட்டுச் செல்கிறார். கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் உடன் செல்கின்றனர்.
இதற்கிடையே, பரப்புரைக்கு விஜய் பயன்படுத்திய சிறப்புப் பேருந்தை கரூரில் சிபிஐ மற்றும் மத்திய தடய அறிவியல் ஆய்வக நிபுணர்கள் கடந்த 10 ஆம் தேதி ஆய்வு செய்தனர்.
அந்தப் பேருந்தில் பொருத்தப்பட்டுள்ள அதிநவீன சிசிடிவி கேமராக்கள் மற்றும் அதில் பதிவான காட்சிகள் குறித்து பேருந்து ஓட்டுநர் பரணிதரனிடம் விசாரணை நடத்தப்பட்டது.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 22 ஆம் தேதி இவ்வழக்கு தொடர்பாக சிபிஐ தாக்கல் செய்த முதல்தகவல் அறிக்கையில்,முதல் குற்றவாளியாக கரூர் மாவட்டச் செயலாளர் மதியழகனும்.இரண்டாவது குற்றவாளியாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த்,மூன்றாவது குற்றவாளியாக பொதுச் செயலாளர் நிர்மல் குமார் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர்.அதில் விஜய் பெயர் இடம்பெறவில்லை.
இருப்பினும் இப்போது விஜய் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருக்கிறார்.இதனால் விரைவில் தாக்கல் செய்யப்படும் என்று சொல்லப்படுகிற குற்றப்பத்திரிகையில் விஜய் பெயரும் இணைக்கப்படலாம் என்றும் அவ்வாறு இணைக்கப்பட்டால் அவரை கைது செய்யவும் வாய்ப்பிருப்பதாகச் சொல்லப்படுகிறது.


