
கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் 2025 செப்டம்பர் மாதம் 27 ஆம் தேதி நடிகர் விஜய்யின் பரப்புரை நடைபெற்றது. இதில் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இதுதொடர்பாக தமிழ்நாடு காவல்துறை சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், வழக்கை சிபிஐக்கு மாற்றி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.அதைத்தொடர்ந்து கரூரில் 41 பேர் உயிரிழந்த இடத்தை சிபிஐ அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு அதிநவீன தொழில்நுட்பங்கள் மூலம் ஆதாரங்களை சேகரித்தனர்.
இதன் பிறகு வழக்கின் விசாரணைக்காக விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகிகளுக்கு சிபிஐ தரப்பில் அழைப்பாணை அனுப்பப்பட்டது.
சிபிஐ கண்காணிப்பாளர் சுனில்குமார் தலைமையிலான அதிகாரிகள் கடந்த மூன்று நாட்களாக விசாரணை மேற்கொண்டனர். அதில் விசாரணைக்காக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் ஆகியோரும், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்,காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஸ் தங்கய்யா, மற்றும் காவல்துறை அதிகாரிகள் ஆகியோரும் விசாரணைக்காக டெல்லி சிபிஐ அலுவலத்தில் நேரில் போயிருந்தனர்.
விசாரணையின் போது உயிரிழப்புகள் தொடர்பாக மூன்று நாட்களாக புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல்குமார் ஆகிய தவெக நிர்வாகிகளிடம் கிடுக்குப்பிடியான கேள்விகளை சிபிஐ அதிகாரிகள் கேட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்போது புஸ்ஸி ஆனந்த், கரூரில் விஜய்யின் நிகழ்ச்சிக்கு தேதியை முன்கூட்டியே தேர்ந்தெடுத்தது மற்றும் நிகழ்ச்சி நடைபெற்ற இடத்தைத் தேர்வு செய்ததற்கு மட்டுமே நான் பொறுப்பு.மற்றபடி அனைத்து விவகாரங்களையும் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா மற்றும் இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார் ஆகியோர்தான் பார்த்துக் கொண்டனர் என்று ஒதுங்கி கொண்டாராம்.
சென்னையில் காலதாமதமாகப் புறப்பட்டது, அதிக அளவிலான கூட்டம் சேர்ந்த பிறகும் விரைந்து செல்லாமல் இருந்தது, காவல்துறை கூறிய பிறகும் வாகனத்தை நிறுத்தாமல் முன்னேறிச் சென்றது போன்றவற்றிற்கு யார் காரணம் என்று ஆதவ், நிர்மல்குமார் ஆகியோரிடம் கிடுக்கிப்பிடி கேள்விகளைக் கேட்டனர்.
அதற்கு அவர்கள் இருவரும், மாற்றி மாற்றி கை காட்டிக் கொண்டதாகச் சொல்லப்படுகிறது. அப்படி என்றால் அதனை எழுத்துப்பூர்வமாக கொடுங்கள் என்று இருவரிடமும் கேள்விகளை கொடுத்து பதிலாக வாங்கியுள்ளதாகத் தெரிகிறது. அப்போதும் ஒருவரை ஒருவர் போட்டுக் கொடுத்துள்ளனர். இவர்களில் யார் தவறு செய்தது என்பதை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதனால், மூன்று நாட்கள் விசாரணை முடிந்த பிறகும் தேவைப்பட்டால் மீண்டும் கூப்பிடுவோம் என்று சிபிஐ அதிகாரிகள் சொன்னதற்கு இதுதான் காரணம் என்கிறார்கள்.
விசாரணைக்குப் பின்னர் தவெக இணை பொதுச்செயாளர் நிர்மல் குமார் டெல்லியில் அளித்த பேட்டியில், சிபிஐ அதிகாரிகள் தரப்பில் பல்வேறு முக்கிய கேள்விகள் எழுப்பப்பட்டன. அனைத்திற்கும் நாங்கள் வீடியோ ஆதாரங்களுடன் கூடிய விளக்கத்தை அளித்துள்ளோம். குறிப்பாக கரூர் கூட்டநெரிசல் உயிரிழப்பு விவகாரத்தில், துயர சம்பவம் நடக்காமல் எப்படி தடுத்து இருக்கலாம், எதனால் சம்பவம் நடந்தது ஆகியவை குறித்து பதிலளித்துள்ளோம்.விசாரணைக்காக மீண்டும் சம்மன் அனுப்பி அழைப்போம் என்று சிபிஐ அதிகாரிகள் எங்களிடம் தெரிவித்துள்ளனர். எனவே வழக்கு தொடர்பாக எப்போது அவர்கள் அழைத்தாலும் நாங்கள் மீண்டும் ஆஜராகி, விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.
விசாரணைக்காக விஜய்க்கு அழைப்பாணை அனுப்ப உள்ளதாக செய்திகள் வருகின்றனவே? என செய்தியாளர்கள் கேட்டதற்கு, இந்த விசாரணை குறித்து நிறைய தவறான செய்திகள் வருகின்றன அவற்றிற்கெல்லாம் நான் பதில் சொல்லவியலாது என்றார்.
விஜய்க்கு அழைப்பாணை இல்லை என்று நேரடியாகச் சொல்லாமல் சுற்றிவளைத்துப் பதில் சொல்லியிருப்பதிலிருந்து விஜய்யும் விசாரணைக்கு அழைக்கப்படுவார் என்பது தெரிகிறது என தில்லி பத்திரிகையாளர்கள் தரப்பில் சொல்லப்படுகிறது.


