விஜய்யிடம் விசாரணை நடத்த சிபிஐ திட்டம் – பதற்றம்

கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27 ஆம் தேதி நடிகர் விஜய் கலந்துகொண்ட கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு, 41 பேர் உயிரிழந்தனர். 110 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்த, வடக்கு மண்டல ஐ.ஜி.அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு புலனாய்வுக் குழுவை தமிழ்நாடு அரசு அமைத்தது.

பின்னர், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சிபிஐ வழக்குப் பதிவு செய்தது.

முதல்கட்டமாக, கரூரில் ஆய்வு செய்து தகவல்களைத் திரட்டியது.வேலுசாமிபுரத்தில் கடை வைத்திருப்பவர்கள், அவசர ஊர்தி உரிமையாளர்கள், ஓட்டுநர்கள், பாதுகாப்புப் பணியில் இருந்த காவல் துறையினர், உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர், காயமடைந்தவர்கள் என 200-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

நவம்பர் 24, 25 ஆகிய தேதிகளில் விஜய் கட்சி நிர்வாகிகளிடமும் விசாரணை நடைபெற்றது.

சிபிஐ விசாரணையை மேற்பார்வையிட நியமிக்கப்பட்ட உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி அஜய் ரஸ்தோகி, கூடுதல் டிஜிபிக்கள் சோனல் மிஸ்ரா, சுமித் சரண் ஆகியோர் டிசம்பர் 2,3 ஆகிய தேதிகளில் கரூர் சென்று ஆய்வு செய்தனர். அப்போது, கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல், ஐ.ஜி.ஜோஷி நிர்மல்குமார், எஸ்.பி.ஜோஷ் தங்கையாவிடமும் விசாரணை நடத்தப்பட்டது. தவெக மாநில நிர்வாகிகளிடமும் சிபிஐ விசாரித்தது. இதற்கிடையே, உயிரிழப்பு விவகாரம் தொடர்பாக கரூர் நீதிமன்றத்தில் சிபிஐ அதிகாரிகள் முதல் தகவல் அறிக்கையைத் தாக்கல் செய்தனர்.

மேலும், அடுத்தகட்ட விசாரணைக்காக டெல்லி சிபிஐ தலைமையகத்தில் நேற்று ஆஜராகுமாறு தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, இணை பொதுச் செயலாளர் சிடிஆர்.நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்டச் செயலாளர் மதியழகன் மற்றும் கரூர் ஆட்சியர், கரூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகளுக்கும் அழைப்பாணை அனுப்பப்பட்டது.

அதன்படி, டெல்லியில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் அனைவரும் நேற்று நேர்நின்றனர். அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, விஜய் கூட்டத்துக்கு செய்திருந்த ஏற்பாடுகள், பாதுகாப்பு வசதிகள், கூட்டத்தை ஒழுங்குபடுத்த செயல்படுத்திய திட்டங்கள் குறித்த ஆவணங்களை சிபிஐ அதிகாரிகளிடம் வழங்கினர்.

கரூர் ஆட்சியர் தங்கவேல்,காவல்துறை கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா,இணை கண்காணிப்பாளர் பிரேம்ஆனந்தன், துணை கண்காணிப்பாளர் செல்வராஜ், கரூர் நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன் உள்ளிட்டோரும் விசாரணைக்குச் சென்றிருந்தனர். அவர்களிடமும் அடுக்கடுக்கான கேள்விகள் கேட்கப்பட்டன.

காலை 10.30 மணிக்கு தொடங்கிய விசாரணை 9 மணி நேரம் நீடித்து,இரவு 7.30 மணி அளவில் முடிந்தது. விசாரணை இன்றும் தொடரும் என்று தெரிவிக்கப்பட்டதால், அனைவரும் இன்று அங்கேயே தங்கியுள்ளனர்.

இவர்களிடம் விசாரித்த பின்பு, விஜய் உட்பட மேலும் சிலரிடமும் விசாரிக்க சிபிஐ அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனராம்.இதனால் விஜய் தரப்பு பதட்டத்தில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.

Leave a Response