புதுச்சேரியில் விஜய் பேசிய பொய் – உடனே அம்பலப்படுத்திய அமைச்சர்

நடிகர் விஜய், கரூர் துயரத்துக்குப் பின் முதல்முறையாக பொதுவெளியில் இன்று மக்கள் சந்திப்பு நடத்தினார். அதன்படி, புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார்.

அங்கு அவர் பேசும்போது….

புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வாங்கினால் மட்டும் போதாது. தொழில் வளர்ச்சியும் வேண்டும். இந்திய அளவில் ரேசன் கடைகளே இல்லாத மாநிலம் புதுச்சேரிதான். ஏழை, எளிய மக்களுக்கு வாழ்வாதாரமே ரேசன் கடைகள்தான்.மற்ற மாநிலங்களில் இருப்பது போல புதுச்சேரியிலும் அரிசி, சர்க்கரை, பருப்பு, கோதுமை, எண்ணெய் என அனைத்து பொருட்களும் வழங்கும் முறை சீராக்கப்பட வேண்டும் என்று பேசினார்.

விஜய்யின் பேச்சுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது….

புதுச்சேரி மாநிலத்தின் நிர்வாகம் எப்படிச் செயல்படுகிறது என்பதை தெரியாமல் பேசியுள்ளார் விஜய். அவருக்கு சொல்லிக் கொடுத்தவர்கள், சரியாகச் சொல்லிக் கொடுக்கவில்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.

தவறான கருத்துகளை மக்களிடத்தில் விஜய் சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டில் அவரால் பேச முடியவில்லை. பேசவும் அவருக்கு வாய்ப்பில்லை. அதனால் புதுச்சேரி மாநிலத்தில் எதையாவது பேச வேண்டும் என்றுதான் அவர் பேசியிருக்கிறார்.

விஜய் பேசியது 12 நிமிடங்களுக்குள் தான். அவர் பேசுவதற்கு ஒன்றும் இல்லை. எதையாவது பேச வேண்டும், ஏதேனும் குறைசொல்ல வேண்டும் என்பதற்காக சில குறைகளைப் பேசிவிட்டுச் சென்றுள்ளார். அவர் பேசியதில் 90 சதவீதம் எதுவும் உண்மை இல்லை.

நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பு ரேசன் கடைகளில் அரிசி போடாமல் இருந்தது. அரிசிக்குப் பதிலாக பணமாக மக்களுக்கு போடப்பட்டு வந்தது.

ஆனால், நாடாளுமன்றத் தேர்தலின்போது மக்கள் பணமாக வேண்டாம், அரிசியாகப் போடுங்கள் என்று கோரிக்கை வைத்தனர். இதனால், நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு நேரடி பணப்பரிமாற்றத்தில் இருந்து விலக்களிக்க வேண்டும் என்று சொல்லி மத்திய அரசின் ஒப்புதலோடு இன்றைக்கு இலவச அரிசித் திட்டம் ஒவ்வொரு மாதமும் மக்களுக்குச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது தெரியாமல் விஜய் பேசியிருக்கிறார்.

தமிழ்நாட்டில் விஜய் கூட்டம் நடத்தவே விடவில்லை. அவரை அனுமதிக்கவும் இல்லை. கரூர் சம்பவத்துக்குப் பிறகு அவரால் எங்கும் கூட்டம் நடத்த முடியவில்லை. காஞ்சிபுரத்தில் கூட இன்டோர் ஸ்டேடியத்தில் 2,000 பேரை கொண்டு ஒரு கூட்டம் நடத்தினார். ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் கூட்டம் நடத்த எல்லா அனுமதியும் கொடுத்துள்ளனர் என்று ஒரு நன்றியை முதல்வர் ரங்கசாமிக்கு விஜய் தெரிவித்திருக்கிறார்.

புதுச்சேரியைப் பொறுத்தவரை இங்குள்ள மக்கள் அரசியலை நன்கு அறிந்தவர்கள். இந்த மாநிலத்தில் எந்தக் கட்சி ஆட்சிக்கு வந்தால் மக்கள் திட்டங்கள் குறைவின்றி நடைபெறும் என்பது புதுச்சேரி மக்களுக்கு நன்றாகத் தெரியும். அதனால், எந்த அரசியல் கட்சியாக இருந்தாலும் நாங்கள்தான் ஆட்சி அமைப்போம் என்று சொல்வது வழக்கம். அந்த அடிப்படையில் விஜய்யும் சொல்லவிட்டுச் சென்றுள்ளார்.

2026 இல் புதுச்சேரி மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அவரது கூட்டணிக்கு என்.ஆர்.காங்கிரஸ் கட்சியைக் கொண்டு வருவதற்கு ஒரு சிறு முயற்சியை எடுத்து அக்கட்சியின் மீது சாஃப்ட் கார்னரை காட்டலாம் என்று விஜய் நினைத்திருக்கலாம்

இவ்வாறு புதுச்சேரி உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் கூறியுள்ளார்.

Leave a Response