இராகுல் காந்தி சந்திரபாபு தொடர்பு – தில்லி அரசியலில் பரபரப்பு

காங்கிரசு தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான இராகுல் காந்தி, வாக்குத் திருட்டு மற்றும் பீகார் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து தேர்தல் ஆணையம் மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறார்.

ஆனால் ஆந்திராவில் நடந்த வாக்குப்பதிவு முரண்பாடுகள் குறித்து இராகுல் காந்தி பேசுவதில்லை. ஏனெனில், ரேவந்த் ரெட்டி மூலமாக சந்திரபாபு நாயுடுவுடன் அவர் தொடர்பில் இருக்கிறார் என ஒய்எஸ்ஆர் காங்கிரசு தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி குற்றம்சாட்டியுள்ளார்.

இது குறித்து ஒய்எஸ் தலைவரும், ஆந்திரப் பிரதேச முன்னாள் முதலமைச்சருமான ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி கூறியதாவது….

ஆந்திராவில் நடந்த வாக்குப்பதிவு முரண்பாடுகள் குறித்து இராகுல் காந்தி பேசுவதைத் தவிர்க்கிறார். ஏனெனில் அவர் தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி மூலமாக ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடுவுடன் ஹாட்லைனில் தொடர்பில் இருக்கிறார்.

எனவே, ஆந்திரா பற்றி இராகுல் காந்தி பேசுவதில்லை. ஆகவே, இராகுல் காந்தியைப் பற்றி நான் என்ன சொல்ல முடியும்? அவர் நேர்மையற்றவர் தானே? இராகுல் காந்தி வாக்குத் திருட்டு பற்றிப் பேசுகிறார். ஆனால், வாக்குப் பதிவு முடிவுகள் அறிவிக்கப்பட்டதற்கும் ஆந்திராவில் வாக்குகள் எண்ணப்பட்டதற்கும் உள்ள 12.50 சதவீத வாக்கு வித்தியாசத்தைப் பற்றி அவர் ஏன் பேசவில்லை? என்று ஜெகன் மோகன் கேள்வி எழுப்பினார்.

தற்போதைய ஒன்றிய பாஜக அரசு,சந்திரபாபு நாயுடு ஆதர்வால்தான் ஆட்சியில் இருக்கிறது.இந்நிலையில் இராகுல் காந்தியுடன் சந்திரபாபு நாயுடு தொடர்பில் இருக்கிறார் என்று ஜெகன்மோகன் கூறியிருப்பது தில்லி அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Response