சந்தி சிரிக்கும் சட்டம் ஒழுங்கு – தில்லியில் பெண் பாமஉ தங்கச்சங்கிலி பறிப்பு

தற்போது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நடந்துவருகிறது. இதனால், மயிலாடுதுறை காங்கிரசு பாராளுமன்ற உறுப்பினர் ஆர்.சுதா டெல்லி சாணக்யபுரியின் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார்.அவர் நேற்று காலை நடைபயிற்சி மேற்கொண்டபோது, போலந்து தூதரகம் அருகே நடந்த சங்கிலிப் பறிப்பு சம்பவத்தில் காயமடைந்தார்.

இதையடுத்து அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது…

கடந்த ஓராண்டாக டெல்லி தமிழ்நாடு இல்லத்தின் 301 ஆம் எண் அறையில் தங்கிப் பணியாற்றி வருகிறேன். நேரம் கிடைக்கும் போதெல்லாம் காலை நேரத்தில் நடைப்பயிற்சி மேற்கொள்வதை வழக்கமாகக் கொண்டுள்ளேன். இந்நிலையில், இன்று(நேற்று) காலை 6.15 மணியளவில் திமுக மாநிலங்களவை எம்பி சல்மாவுடன் சாணக்யபுரியில் உள்ள போலந்து தூதரகத்தின் அருகே இருவரும் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தோம். அப்போது, எதிர்திசையில் ஹெல்மெட் அணிந்து கொண்டு பைக்கில் வந்த மர்ம நபர்கள், எனது கழுத்திலிருந்த நான்கு சவரன் மதிப்பு கொண்ட தங்கச் செயினை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பிச் சென்று விட்டனர். அப்போது என் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. சுடிதாரும் கிழிந்தது விட்டது.

டெல்லியில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே பாதுகாப்பில்லாத சூழ்நிலை இருந்து கொண்டிருக்கின்றது. குறிப்பாக செயினை கொள்ளையன் பறித்த உடனே நாங்கள் உதவி கேட்டுக் கத்தினோம். ஆனால் ஒருவரும் வரவில்லை.

இதைத்தொடர்ந்து நாடாளுமன்றத்தில் இருக்கும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றேன். குறிப்பாக தூதரகங்கள் நிறைந்த மற்றும் 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும் உயர் பாதுகாப்புப் பகுதியில் பெண் எம்பியான எனது செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கும் புகார் கடிதம் எழுதியுள்ளேன்.

இதில் நாட்டின் தலைநகரில் பெண்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி உள்ளது. இச்சம்பவத்தால் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன். செயின் பறிப்பு குற்றவாளியை உடனடியாகக் கண்டுபிடித்து நீதியை நிலைநாட்ட வேண்டும். குறிப்பாக இதுபோன்ற ஒரு செயின் பறிப்பு சம்பவம் ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே நடைபெற்றிருக்கிறது என்றால், இந்த நாட்டில் மற்ற பெண்கள் செல்லும்போது அவர்களுக்கு எதிரான கொடுமை எப்படி இருக்கும் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. எனது செயின் பறிப்பு விவகாரத்தில் டெல்லி காவல்துறையினர் மிகவும் அலட்சியப் போக்குடன் நடந்து கொண்டனர். அவர்கள் நினைத்து இருந்தால் வாக்கி டாக்கி மூலம் தகவல் கொடுத்து கொள்ளையனை உடனடியாகப் பிடித்து இருக்கலாம். ஆனால் அதனைச் செய்யத் தவறிவிட்டார்கள்.இந்த விவகாரத்தை நாடாளுமன்றத்திலும் தொடர்ந்து எழுப்புவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இது குறித்து ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சுதா எழுதியுள்ள கடிதத்தில்,

இன்று காலை 6:15 மணியளவில் போலந்து தூதரகம் அருகே நடைப்பயிற்சி மேற்கொண்டபோது, ஹெல்மெட் அணிந்து ஸ்கூட்டியில் வந்த ஒருவர் எனது தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு தப்பிவிட்டார். சங்கிலியை இழுத்தபோது என் கழுத்தில் காயம் ஏற்பட்டது. எனது சுடிதாரும் தாக்குதலின்போது கிழிந்தது.

சாணக்யபுரி போன்ற உயர் பாதுகாப்பு மண்டலத்தில், மக்களவை உறுப்பினராக இருக்கும் ஒரு பெண் மீது நடத்தப்பட்ட இந்த அப்பட்டமான தாக்குதல் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் தேசிய தலைநகரில் உள்ள இந்த உயர் பாதுகாப்பு மண்டலத்தில்கூட ஒரு பெண் பாதுகாப்பாக நடக்க முடியாவிட்டால், வேறு எங்கு நாம் பாதுகாப்பாக உணர முடியும்?

என் கழுத்தில் காயம் ஏற்பட்டுள்ளது, நான்கு பவுனுக்கும் அதிகமான எடையுள்ள தங்கச் சங்கிலியை இழந்துவிட்டேன். இந்த குற்றச் சம்பவத்தால் நான் மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளேன்

இவ்வாறு அவர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார்

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என டெல்லி காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார். குற்றவாளியைக் கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அருகிலுள்ள சிசிடிவி காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன என்றும் அவர் கூறினார். இச்சம்பவத்தைத் தொடர்ந்து தமிழ்நாடு இல்லம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தில்லி காவல்துறை நேரடியாக ஒன்றிய ஆட்சியின் கீழ் செயல்பட்டு வருகிறது.இதனால் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க பாஜக அரசு தவறிவிட்டதாகக் குற்றம் சாட்ட்ப்பட்டுவருகிறது.

Leave a Response